Monday 2 November 2015

பூங்காற்று புதிரானது

நாம் எத்தனையோ பெண்களை கண்கொட்டாமல் பார்த்தாலும் நம்மை ஒரு பெண், ஒரு நொடி பார்ப்பதற்கு ஈடாகதல்லவா? அதன் சுகமே தனி அல்லவா? பட்டாம்பூச்சி பறப்பது, தலைக்கு மேல் பல்பு எறிவது, மின்னல் தாக்குவது எல்லாம் நடக்கும். அது வெறும் வர்ணனை மட்டும் அல்ல என்பதை அனுபவித்தவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு பெண். அழகிய இளம் பெண். என் வீட்டின் அருகிலே குடி வந்திருந்தாள். குழந்தைகளைக் காணும் போதெல்லாம் இவ்வாறு வர்ணிப்பது வழக்கம் - குட்டி மூக்கு, குட்டி காது, குட்டி விரலு, குட்டி கண்ணு என. கிட்டத்தட்ட இந்த வர்ணனைகள் அவளுக்கும் பொருந்தும். கண்களைத் தவிர. அவள் பார்த்தாள் போதும் அந்த நாள் புண்ணியம் எய்திவிடும்.

என் பாக்கியம் அவ்வப்போது தெருவில் அவளைக் காணும் பாக்கியம் கிடைத்தது. தினம் தினம் புண்ணியமும் சேர்த்துக்கொண்டிருந்தேன். இருவரும் பார்வையைப் பரிமாறிக்கொண்டோம். என் இதயம் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருந்தது.

அவளின் சில பழக்கவழக்கங்கள், சில முக அசைவுகள் என் முன்னாள் காதலிகளில் ஒருத்தியின் சாயலை ஒத்திருந்தது. பார்த்தவுடன் இவளைப் பிடித்துப் போக, அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த முன்னாள் காதல் 'ஒரு தலைக் காதல்' என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தோழிகளிடம் என்னை அவள், 'அவன் ஒரு லூசு' என்று சொன்னதாக பிற்பாடு அறிந்தேன். நான் லூசு இல்லை என்பதை நிரூபிக்க முயற்சி செய்த அனைத்தும் வீணானது. இன்றும் அவள் மனதில் ஒரு லூசாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருக்கட்டும். அவளிடம் சாத்தியமாகாததை இவளிடம் அடையத் துடித்தது மனம். உடனே தப்பான எண்ணம் வேண்டாம். உங்களைப் போல என்னுடைய மனம் கள்ளங்கபடம் கொண்டது அல்ல.

அவளிடம் பேசுவது என்று முடிவெடுத்தேன். ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசுவது இங்கே மிகவும் சுலபம். அதுவே ஒரு ஆண் பெண்ணிடம் பேசுவதென்றால் சாதாரண காரியமில்லை. ஒன்று பேச மறுத்து அவமானப்படுத்துவார்கள் இல்லையேல் ஒற்றை வார்த்தை பதில்களில் நம் மூக்கை அறுப்பார்கள். பெண்களை நேரடியாக கேலி செய்யும் ஆண்கள் - பெண்களிடம் பேசவே அஞ்சும் ஆண்கள். இருவரையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்றெண்ணுகிறேன். ஆக சுமூகமான உரையாடல் நிகழ்த்தலாம் என்றெண்ணினேன். <தற்பெருமை அல்லது சுயதம்பட்டம்>

'இரண்டு நாள் தான் பார்த்திருக்கிறாய். அதற்குள்ளாகவா?' என்று நண்பன் பதறினான். 'இங்க என்ன தோணுதோ (இதயம்) அத பேசுவேன் இங்க என்ன தோணுதோ (மூளை) அத பண்ணுவேன்' எனும் இளைய தளபதியின் வசனத்தை அவனிடம் உதிர்த்தேன். எனக்கும் இதற்கு முன் யாரிடமும் இவ்வாறு பேசி அனுபவமேதும் இல்லை தான். இருந்தாலும் அவளின் பார்வை 'என்னோடு பேசு' என்பது போலவே அழைத்தது. இதற்கு முன்பும் சிலரிடம் பேசாமல் பார்வைகளிலே முடிந்த உறவுகள் ஏராளம். கோபிகிருஷ்ணனின் படைப்புகள் வேறு இவளிடம் பேசிவதில் ஒன்றும்  பிழையில்லை என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்துக்கொண்டிருந்தது. அதற்கு அவர் காரணம் அல்ல. என் கொழுப்பு தான்.

அவளின் தொலைபேசி எண் திருடியதெல்லாம் தனிக் கதை. அது இங்கு வேண்டாம். இப்படி இப்படியெல்லாம் பேசி அசத்த வேண்டுமென்று பல முறை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.
< 
இனி வாட்சப் உரையாடல்:

'ஹலோ'

சில நொடிகள் எந்த பதிலும் இல்லை. இந்த இடத்தில என் இதயம் என்ன செய்து கொண்டிருக்குமென்று நான் வர்ணிக்கத் தேவையில்லை தானே?!

'ஹலோ. சாரி. மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?'

சந்தோஷமும் சோகமும் ஒரு சேரத் தாக்கியது.

'கருப்பு சட்ட போட்டு ஒரு பையன் உங்கள குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தானே. அவன் தான்' என்றேன் வெகுளியாக. ஹ்யூமர் முயற்சித்தால் பெண்களுக்கு பிடிக்குமே என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் போலும்.

'தெரியல. நான் பாக்கலயே'
> 
கதம் கதம். பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள முடியாதென்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதன் பின், இப்போதெல்லாம் மருந்துக்கு கூட தரிசனங்கள் கிட்டுவதில்லை.

இரண்டு நாட்களாக ‘பொன்முட்டையிடும் வாத்து கதை’ தான் மனதில் உழன்று கொண்டிருக்கிறது.


- த.ராஜன்

காதலின் துயரம் - கதே

இலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு நிலைகளைக் கடந்த போதும் அதன் சுகம் - சோகம் இன்றும் என்றும் அதே நிலைதானோ என்றும் தோன்றுகிறது.

சில அற்புதமான புத்தகங்களின் அறிமுகம் கிடைத்த அனுபவமெல்லாம் விசித்திரமானது. ‘கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்’ என்னும் மொபைல் கேமின் மூலம் அறிமுகமான நண்பரின் பரிந்துரையில் தான் 'கன்னி' வாசித்தேன். 'கன்னி' ஓர் அற்புதம். அப்படி ஓர் அற்புதத்தை பரிந்துரைத்த அவரின் மற்றொரு பரிந்துரை தான் 'கதேயின் காதலின் துயரம்'. காதலை நேசிக்கும் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

நாவல் வாசித்து முடித்து முன்னுரை வாசித்தால் ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம். இது வெளியான ஆண்டு 1774. இந்தக் குறுநாவல் ஜெர்மன் மொழியின் நவீன புனைகதை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதே இந்த நாவலை எழுதியபோது அவருடைய வயது 24. மேலும் பல ஆச்சரியங்களைக் இங்கு கூறாமல் விட்டுவிடுறேன். முன்னுரை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

கிரேக்க துன்பியல் நாடகத்தின் சாயலைக் கொண்ட இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் இளமையின் துடிப்பும் வாழ்வின் புதிர்வழிகளில் மாட்டிக்கொண்ட திகைப்பும் காதலின் பித்தும் அது விளைவிக்கும் தனிமையின் துயரமும் வெகு இயல்பாகவும் கூராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது - எம்.கோபாலகிருஷ்ணன்.

கடவுளும் என் தாய் தந்தையரும் எனக்கு உயிரையும் உடலையும் அளித்தனர் எனில் என் வாழ்வை எனக்கு அளித்தவர் கதே. நான் மட்டுமல்ல, தன்னைத் தொட்டவர் எவருடைய வாழ்க்கையையும் பொன்னாக மாற்றாமல் விட்டதில்லை இந்த இரஸவாதி. இந்த நாவலை எழுதிய உடன் உலகப்புகழை எய்துகிறார். ஐரோப்பியா முழுவதும் மனித மனங்களெல்லாம் தீப்பற்றி எறிகிறது. வாழ்ந்தால் வெர்தரைப் போல வாழ வேண்டும் என்று ஐரோப்பிய இளைஞர்களெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தை ஓர் இலட்சிய புருஷனாக கனவு கண்டனர். அதே போல் யுவதிகளெல்லாம் வெர்தர் போன்ற ஒரு லட்சியக் காதலன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்கித் தவித்தனர் - இரா.குப்புசாமி.

இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான் – எமர்சன்.

நாவலில் முதல் நாற்பது பக்கங்களில் நான் ரசித்த சில பத்திகளை இங்கே தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.

மனித ஜீவன்களிலேயே மிக அழகான ஒருத்தியை நான் கண்டேன். எப்படி என்று சரியாக உனக்குச் சொல்வது அவ்வளவு சுலபமானதில்லை. நான் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே அதைத் தெளிவாகச் சித்தரிப்பது சாத்தியமில்லை.

தேவதை என்றவுடனேயே சொர்க்கத்திலிருக்கும் அவனது மனைவியைப் பற்றிச் சொல்கிறார்கள். அவனுக்கு அப்படியொருத்தி இருக்கிறாளா? இருந்துவிட்டுப் போகட்டும். இவள் எவ்வளவு அழகானவள் என்றோ ஏன் அத்தனை நேர்த்தி மிக்கவள் என்றோ என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிடுமளவு அழகானவள் என்று மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியம்.

oOo

பேரன்பும் மனஉறுதியும் உள்ளவள். பரபரப்பான இந்த உலகில் ஆச்சரியமூட்டும் அமைதியும் எளிமையும் கொண்டவள்.

அவளைப் பற்றிய பலவீனமான இந்த எல்லாச் சொற்களும் அவளுடைய உண்மையான இயல்பின் சிறு சாரத்தையும் சொல்ல இயலாத வெற்று உளறல்களே.

oOo

அவளது தன்மையிலும் தோற்றத்திலும் குரலிலும் என் முழு மனமும் ஒன்றியிருக்க நான் அவளுக்கு சம்பிரதாயமான பாராட்டுகளைத் தெரிவித்தேன். அவள் தனது கையுறைகளையும் விசிறியையும் எடுத்து வர அறைக்குள் சென்ற சொற்ப நேரம் ஆச்சரியத்திலிருந்து நான் விடுபட உதவியது.

oOo

இங்கே எப்படி நான் வந்தேன், மலை உச்சியில் நின்றபடி அழகான பள்ளத்தாக்கை எப்படி ரசித்திருக்கிறேன், இங்கே சுற்றியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னை எப்படி வசீகரத்துள்ளது என்பதெல்லாம் பெரும் ஆச்சரியம்தான். அதோ அங்கே அந்தக் குறுங்காடு. நீ அதன் அடர்நிழலில் அமிழ்ந்துவிட முடியுமா? மலைத்தொடர்களும் நெருக்கமான பள்ளத்தாக்குகளும்! அவற்றில் என்னை நான் தொலைத்துவிட முடியுமா? அங்கும் இங்குமாய் நான் தவித்தலைகிறேன். எனக்கு இப்போது என்ன வேண்டுமென்றே தெரியவில்லை.

oOo

நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவனுக்கு லோதே என்னமாதிரி தோன்றுவாள் என்பதை, நோய்ப் படுக்கையில் வாடிக் கிடக்கும் பலரையும்விட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய பாவப்பட்ட இதயத்தால் உணரமுடிந்தது.

oOo

திரும்பி வரும் வழியில் இப்படி எல்லா விஷயத்திலும் தேவைக்கதிகமாக ஈடுபாடு காட்டுவதைச் சொல்லி கடுமையாகத் திட்டினாள். இப்படி நடந்துகொள்வது அழிவிலேயே கொண்டுபோய்விடும் என்றும் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தாள். ஓ என் தேவதையே! உனக்காக நான் உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

oOo

உண்மையில் சொல்கிறேன், வில்ஹெம், ஞானஸ்நானத்தின் போது கூட அவ்வளவு புனிதத்துவத்தை நான் உணர்ந்ததில்லை. லோதே மேலே வந்தபோது தேசத்தின் பாவங்களையெல்லாம் புனித நீரினால் கழுவிப் போக்கிய ஒரு தேவனின் காலில் விழுவதுபோல அவளது காலில் விழுந்துவிட விரும்பினேன்.

oOo

லோதேவின் பார்வையை நான் யாசித்து நின்றேன். அய்யோ! அந்தக் கண்கள் இங்கும் அங்குமாய் எதை எதையோ பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவளை மட்டுமே பார்த்தவாறு லயித்து நிற்கிற என் மீது அவளது பார்வை படவில்லை. என் இதயம் அவளுக்கு ஆயிரம் முறையாவது கையசைத்திருக்கும். ஆனால் அவள் என்னைப் பார்க்கவேயில்லை. வண்டி புறப்பட்டு ஓட என் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் அவளையே பார்த்திருந்தேன். அவள் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அவளது தலையலங்காரம் ஜன்னலுக்கு வெளியே தெரிந்ததைப் பார்த்தேன். ஓ! அவள் என்னைத்தான் பார்க்கிறாளா? அப்படித்தானா என்று நிச்சயமாய் சொல்ல முடியாமல்தான் நான் தவித்து நின்றேன். அவள் என்னைத்தான் பார்த்தாள் என்று நினைத்துக்கொள்வதுதான் ஒரே ஆறுதல். இருக்கலாம். இன்றைய இரவு நல்லிரவாக அமையட்டும். நான் எவ்வளவு குழந்தைத்தனமாயிருக்கிறேன்?

oOo

அவளை நான் எப்படி விரும்புகிறேன் என்று யாராவது கேட்கும்போது, விரும்புவது என்கிற அந்த வார்த்தையையே நான் வெறுக்கிறேன். லோதே என்ற தேவதையால் அனுக்கிரகிக்கப்பட்ட இதயம் கொண்ட ஒருவன் அவளை விரும்புகிறேன் என்று சாதாரணமாய் சொல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும். விரும்புவதாம்! முன்பு ஒரு நாள் யாரோ ஒருவன் கவிஞர் ஓசியானை நான் எந்த அளவு விரும்புகிறேன் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

oOo

இல்லையில்லை, என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளவில்லை. கரிய அவள் கண்களில் என் மீதும், என்னுடைய எதிர்காலத்தின் மீதும் ஒரு அக்கறை இருப்பதை என்னால் அறிய முடிகிறது. அவள் என்னைக் காதலிக்கிறாள். ஓ! அவள் என்னைக் காதலிக்கிறாள்.  (இந்த விஷயத்தில் என்னுடைய இதயத்தை நான் நன்றாகவே நம்பலாம்) இந்தச் சொற்களில் உள்ள சொர்க்க சுகத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறதா?

என்னை அவள் காதலிக்கிறாள்! என்று நினைக்கும்போதே என் கண்ணெதிரில் எனக்கு நானே எத்தனை மேலானவனாய்த் தெரிகிறேன். ஒருவேளை நான் இப்படி உணர்ச்சிவசப்படுவதை எண்ணி என் மீது நீ பரிதாபப்படலாம். அவள் என்னைக் காதலக்கத் தொடங்கியதிலிருந்து என்னை நானே ஆராதிக்கத் தொடங்கவிட்டேன்.

oOo

எனக்கு அவள் புனிதமானவள். அவள் எதிரில் ஆசைகளனைத்தும் அடங்கிப் போகின்றன. அவளுடன் இருக்கும்போது நான் என்ன நினைக்கிறேன் என்பதே எனக்குத் தெரிவதில்லை. என்னவோ என் இதயம் நரம்புகள் அனைத்திலும் தத்தளிப்பது போலவே இருக்கும்.

oOo

காதலற்ற இதயங்களுக்கு இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்க முடியம், வில்ஹெம்?

oOo

தவிர்க்கமுடியாத ஒரு வேலையினால் இன்று என்னால் லோதேவைப் போய் பார்க்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும்? இன்று அவளிடம் எனக்குப் பதிலாக யாராவது ஒருவர் சென்று என்னை நினைவுபடுத்தட்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய வேலைக்காரனை அனுப்பினேன். அவன் திரும்பி வருவதற்குள்தான் நான் எப்படித் தவித்துப் போனேன்? மறுபடி அவனைப் பாரக்கத்தான் நான் எத்தனை ஆசையாய் இருந்தேன்? அவனை அணைத்துக்கொள்ள சற்றும் கூச்சப்படாதவனாய் இருந்திருந்தால் நான் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டிருப்பேன்.

பொலோனா என்ற ஒரு கல்லைப் பற்றிச் சொல்வார்கள். பகலில் அதை சூரிய ஒளியில் வைத்துவிட்டால் சூரியக் கதிர்களை அது உள்வாங்கிக் கொள்ளுமாம். இரவானதும் அது கதிர்களைத் துப்பி ஒளி கொடுக்குமாம். அந்த வேலைக்காரனும் அப்படித்தான். அவனது முகத்திலும், கன்னங்களிலும், கோட்டுப் பொத்தான்களின் மீதும், சட்டையின் கழுத்துப் பட்டையின் மீதும் அவளது கண்கள் வர்ஷித்த உணர்ச்சிகளனைத்துமே மிகப் புனிதமானவை. விலை மதிப்பற்றவை. அந்த கணத்தில் அந்த வேலைக்காரனுக்கு ஆயிரம் பொன் தந்து யாராவது கேட்டிருந்தாலும் நான் அவனை விட்டுத் தந்திருக்கமாட்டேன். அவன் வந்து என் முன்னால் நின்றதுமே நான் அத்தனை சந்தோஷப்பட்டேன். இதைக் கேட்டு நீ சிரிக்காமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக. இவை எல்லாமே நம்மை மகிழ்விக்கும் சலனச் சித்திரங்கள்தானா வில்ஹெம்?

oOo

அவளை அடிக்கடி பார்க்கக்கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடிந்தால்தானே! ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆசைக்கு நான் அடிபணிந்துவிடுகிறேன். உடனடியாகவே இன்றோடு சரி, நாளைக்கு அவளைப் பார்க்கக்கூடாது என்று மிக சிரத்தையாக உறுதியெடுத்துக்கொள்வேன். மறுநாள் விடிய வேண்டியதுதான். உடனேயே ஆவலைத் தடுக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, எனக்குத் தெரியாமலேயே, அவளிடம் போய் நின்றுவிடுவேன். முன்தினம் மாலையில் அவள் 'நாளைக்கு நீங்கள் வருவீர்கள்தானே?' என்று கேட்டிருப்பாள் (அப்படிக் கேட்டபின் யார்தான் வராமல் இருக்க முடியும்?) அல்லது அந்த நாள் மிக ரம்மியமாக அமைந்துவிட நான் வாஹெம்முக்கு நடக்கத் தொடங்கிவிடுவேன். அங்கிருந்து பிறகு அவள் இருக்குமிடத்திற்குச் செல்ல இன்னும் அரை மணித் தொலைவுதானே. அவளது பிரசன்னத்திற்கு வெகு அருகில் எப்போதுமே நான் இருப்பதால் நொடியில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவேன். என்னுடைய பாட்டி மந்திர மலையைப் பற்றி ஒரு கதை சொல்லுவாள். அந்த மலையை மிக நெருங்கி வரும் கப்பல்கள் எல்லாமே தமது இருப்புப்பாளங்களையும், ஆணிகளையும் இழந்து மலையை நோக்கி இழுக்கப்பட்டு பரிதாபமாக நொறுங்கி உடைந்து மூழ்கிவிடுமாம்.

oOo

இந்நாவல் ஒரு பொக்கிஷம். கடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் தூசி படிந்த கடைசி சில பிரதிகளே இருந்தன. உங்கள் கண்ணில் எங்கேனும் பட்டால் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழினி பதிப்பகம் | விலை ரூ 60/-

- த.ராஜன்

Friday 2 October 2015

இப்ப நான் என்ன செய்ய?

இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வேறொருவரை மனதில் வைத்து எழுதப்பட்டது. உங்களை நினைவுபடுத்தினால் அது எதேர்ச்சையே. நிர்வாகம் பொறுப்பல்ல ;)
oOo
புத்தகம் இரவல் தருவதிலொன்றும் எனக்கு தயக்கமிருந்ததில்லை. புத்தகம் வாசிப்பவர்களே குறைவு. ஆர்வமாக நம்மிடம் கேட்கும் பொழுது அதை மறுப்பது பெரும்பாவம் தான். ஆனால் வாங்கிச் சென்றவர்களின் செயலோ எல்லையற்ற கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைக்கக் கூடியதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. புத்தகத்தின் முனை மடிப்பது, ஆங்காங்கே கிறுக்குவது, புத்தகத்தில் தூசி பூசித் தருவது, பல் குத்த காகிதம் கிழிப்பது என புத்தகம் மீது நடத்தும் வன்முறைக்கு அளவே இல்லை. இதை அவர்கள் வன்முறை என்று அறியாதது தான் வருத்தம்.
இசையைப் பெரிதும் மதிக்கும் இசைக்கலைஞர்கள், அவர்களின் இசைக்கருவியை இசைக்கத் தெரியாதவர்களைத் தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு புத்தகமும் அப்படித் தான். ஆக ‘வாழ்கையில் பணம் யாரிடமும் கடனாக வாங்கக் கூடாதது. புத்தகம் கடனாகக் கொடுக்கக் கூடாதது’ எனும் லதாமகனின் பொன்மொழியைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தேன்.
இருப்பினும் ஆசையாகக் கேட்பவர்களிடம் மறுக்க முடிவதில்லை. பல்வேறு நிபந்தனைகள் விதித்த பின்பே புத்தகம் வாசிக்கத் தருகிறேன். யாரும் கடைபிடிப்பதாக இல்லை. சிலரோ புத்தகத்தைத் திருப்பித் தருவதே இல்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் நட்பிற்குள் ஏற்பட்ட விரிசல்களில் முக்கிய பங்கு வகித்தது பணம் தான். சில நேரங்களில் கொடுக்க முடிகின்றது. பல நேரங்களில் முடிந்ததில்லை. ஒருவரிடம் வாங்கியதை எப்படி திருப்பிக் கொடுக்காமல் இருக்க முடிகின்றது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது பணமாக இருக்கட்டும் அல்லது ஒன்றுக்கும் உதவாததாகக் கூட இருக்கட்டும்.
காதலிக்கு பரிசளிப்பதற்காக மதிமாறன் ஆயிரம் ரூபாய் வேண்டுமென்றான். ஏடிஎம்மில் நுழையவும் ஆயிரத்தி ஐநூறாக கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான். கொடுத்து நான்கு வருடங்கள் ஆகின்றது இன்னும் வரவில்லை. வினோத் மூவாயிரம் வாங்கி இரண்டாயிரம் மட்டும் திருப்பிக்கொடுத்தான். ஏழு முறை கேட்ட பின்பு தான் இதுவும் கிடைத்தது. ‘இவ்வளவு சம்பாதிக்ற. மூவாயிரத்துக்கு இப்படி அழுவுற’ என்று வியாக்யானம் வேறு. வசந்த் இருபதாயிரம் வாங்கி பத்தொன்பதாயிரம் கொடுத்தான். அத்தை மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கல்லூரில் சேர்க்க ஏழாயிரம் வேண்டுமென்றார் அத்தை. ஹோகயா. மகளின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க அண்ணன் ஒருவனுக்கு ஐநூறு. முருகன் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்ததால் அவன் வாங்கிய சோனி வால்க்மேன்க்கு ஐயாயிரம் எனது கார்டில் உருவப்பட்டது. இரண்டே மாதத்தில் தருகிறேன் என்று லக்ஷ்மி வாங்கிய மூவாயிரம் ரூபாயை மூன்று ஆண்டுகளில் முப்பது முறை கேட்டதால் எனது அழைப்பை தற்போது ஏற்பதில்லை. எம்மீ படிக்கிறேன் என்று சத்யபாமாவில் சேர்ந்து முப்பதாயிரம் தண்டம் கட்டினேன். சில பல சில்லறைக் கடனுதவி.
இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். அதற்குள் வீடு கட்ட வேண்டுமென அப்பாவின் ஆசை. அனுமானித்ததை விட கூடுதல் செலவு தற்போது. கடன் வாங்குவதில் சிறிதும் உடன்பாடில்லாத நான் இரண்டு லட்சம் ரூபாய் நண்பனிடம் வாங்கியாகிவிட்டது. இன்னும் இரண்டு லட்சத்திற்கு கைக்கு மீறி செலவிருக்கின்றது. என் திருமணத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று பலவாறு கற்பனை செய்த அனேக விஷயங்களைக் கைவிட்டாகிவிட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க ‘இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ’ என அடி வயித்தில் பீதி கிளம்பத் தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
‘இதுவரைக்கும் யாரையுமே லவ் பண்ணதில்லையா’ என்பவர்களிடம் ‘அதுலலாம் உடன்பாடு இல்லங்க – லவ்வுனாலே ப்ராப்ளம் தான் – யாருனே தெரியாத பொண்ண பாத்து பேசி கல்யாணம் பண்றதுல ஒரு கிக்கு’ இப்படி பலவாறு பிட்டு போடுவது வழக்கம். ஆனால் யாருமே என்னை ஏறெடுத்துப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை.
மே 1, 2015 அன்று பெண் பார்த்து நவம்பர் 22, 2015 கல்யாணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த ஐந்து மாதங்களில் எத்தனைப் பெண்கள்! அப்பப்ப்பா! காலைத் தேநீர் வேளையில் பார்க்கும் பச்சைப் பெண் (முதல் சந்திப்பில் பச்சை சுடிதார் அணிந்திருந்தாள்) – நான்காவது மாடியின் கண்ணு (செம்ம கண்ணு) பொண்ணு -  பக்கத்துக்கு ப்ளாக்கில் இருந்து வரும் லிப்ஸ்டிக் பொண்ணு – மாலை தேநீர் வேளையில் பார்க்கும் சின் (Chin) பொண்ணு – என் ஆளுடன் தொலைபேசுகையில் பார்க்கும் க்யூட் பொண்ணு – ஸ்கூட்டர் பொண்ணு – தெத்துப்பல் பொண்ணு - நைன்டி பைவ் மார்க் பொண்ணு – சரவணபவனின் தோசைப் (தோசையை இரண்டு கைகளாலும் பிய்த்து சாப்பிடுவதில் கொள்ளை அழகு) பொண்ணு – பெயர் வைக்காத சிறு அழகிகள். இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள் என்பது தான் விஷயம். இப்ப நான் என்ன செய்ய?
- த.ராஜன்

புலி பருகிய அத்திப்பழச்சாறு

நண்பர் புலிக்கு (தீவிர விஜய் ரசிகர் என்பதால் புலி என்றே அழைப்போம்) இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம். அவரது காதலி – வருங்கால மனைவி ஏதோ வார இதழில் படித்து இந்தத் தகவலைப் புலியிடம் சூசகமாகச் சொல்லியிருக்கிறாள். அதாவது அத்திப்பழச்சாறில் பல்வேறு விசேஷ குணங்கள் அடங்கியிருப்பதாகவும் அதைத் தினம் பருகினால் திருமண வாழ்வு செழிக்கும் என்றும். புலி தனக்கு திருமணம் என்று நண்பர்களிடம் சொல்லவும் அனைவரும் சொல்லிவைத்தார் போல அத்திப்பழச்சாறு பருகச் சொல்லவும் புலியின் தீவிரம் விரித்தியடைந்தது.
ஆக காலைக்கடன்களின் பட்டியலில் அத்திபழச்சாறையும் சேர்த்துக்கொண்டார் புலி.
இக்கதையை எழுதுவதற்கு காரணம் அத்திப்பழச்சாறின் ப்ராண்ட் அம்பாசிடராக புலி மாறியது தான். புலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களைக் கொடிய முறையில் மனச்சலவை செய்து கொண்டிருந்தார். மாதுளை சாப்பிடச் சொல்லி சத்யா சொல்ல, அதை மறுத்து அடுத்த நொடியே ‘மை வோட் இஸ் பார் ஃபிக்’ என்றார் புலி. மாதுளை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புலி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. ‘பார்த்து புலி. தினமும் அத்திப்பழச்சாறு சாப்பிட்டு இரத்தத்திற்கு பதில் வேறு எதுவும் ஓடப் போகிறது’ என்ற கலாய்ப்பிற்கெல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. கண்ணன், ‘தன் தாத்தாவின் ஊரில் அத்திப்பழம் நுகர்ந்து பார்க்கக் கூட கிடைக்காது என்றும் அவருக்கு பதினேழு குழந்தைகள் என்றும் சொல்லி, அத்திப்பழச்சாறு பருகாமலே இது எப்படி சாத்தியமாயிற்று’ என்று கேள்வி எழுப்பினான். புலி சிரித்து மழுப்பினார்.
அத்திப்பழச்சாறு தாயார் செய்து தரும் ஜூஸ் மாஸ்டரை தெய்வத்திற்கு நிகராக நடத்தினார் புலி. ‘ஜாதா ப்ரூட். சோட்டா பானி’ என்னும் மந்திரத்தை தினமும் ஜூஸ் மாஸ்டரின் காதில் ஓதுவது வழக்கம். தினமும் இவர் பருகுவதைப் பார்த்து ஜூஸ் மாஸ்டர் என்ன நினைத்தாரோ நாளாக நாளாக நீரின் அளவு அத்திப்பழச்சாறில் அதிகமாகிக்கொண்டிருந்தது. ‘கல்யாணத்திற்கு பின் ஏதேனும் நேர்ந்தால் ஜூஸ் மாஸ்டர் தான் பொறுப்பு. இந்தப் பாவம் ஜூஸ் மாஸ்டரைச் சும்மா விடுமா?’ என்று வெறி கொண்ட வேங்கையானர் புலி. புலி கோபப்பட்டு அன்று தான் பார்க்கிறோம். கோபம் என்பதை விட அறச்சீற்றம் எனலாம். எப்படியாவது தான் அத்திப்பழச்சாறு பருகுவதன் காரணத்தை ஹிந்தியில் ஜூஸ் மாஸ்டரிடம் சொல்லிவிட வேண்டுமென்று ஆவேசமானார்.
தினமும் அத்திப்பழச்சாறு பருகுவதால் நேரும் பக்கவிளைவை புலி அறிந்திருக்கவில்லை. அது பற்றி புலியின் காதலி வார இதழில் வாசித்த ‘அத்திப்பழச்சாறும் ஆண்மை வீரியமும்’ என்ற கட்டுரையிலேயே ஒரு ஸ்டார் போட்டு கீழே  குறிப்பிடப்பட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
அந்தக் குறிப்பு:அக்குறிப்பு இருந்த பகுதியைக் காதலியின் தாத்தா காது குடையக் கிழித்துச் சென்றதால் ஆவணப்படுத்த இயலவில்லை. மன்னிக்கவும்.
- த.ராஜன்

Monday 21 September 2015

மீனெறி தூண்டில்

ஆதிக்கு நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். சிவா ஏற்கனவே பதினோரு பெண்களை இரு தலையாகக் காதலித்திருப்பதாகவும் தற்போது காதலித்துக் கொண்டிருப்பது பதினான்காவது பெண் என்றும் சிவாவின் காதல் கதையினை ஆதி தன் காதலி மாயாவிடம் வெகு சுவாரசியமாக சொல்லிக்கொண்டிருந்தான். ஏதோ நினைவு வந்தவனாக, சிவா இத்தனை பெண்களைக் காதலிக்கிறானே ஒழிய அவன் மிகவும் கண்ணியமானவன் என்றும் அவனது சுண்டு விரல் நகம் கூட எந்தப் பெண்ணின் மீதும் பட்டதில்லை என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாயா பதறியவளாக, சிவாவோட பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அவனது நட்பை அறவே துண்டித்து விட வேண்டுமென்று காதலோடு கட்டளையிட்டாள் அல்லது எச்சரித்தாள் என்றும் கொள்ளலாம்.

oOo

கோகுல் (ப்ளே பாய், மன்மதன், தன் கற்பை சிறு வயதிலேயே இழந்தவன் இத்யாதி இத்யாதி) ஆதியை என்றுமில்லாமல் தொலைபேசியில் அழைத்தான். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் எனினும் படிப்பிற்குப் பின் தேவையில்லாமல் பேசிக்கொள்வதில்லை. காரணமே இல்லாமல் ஒரு பையனும் இன்னொரு பையனும் பேசிக்கொள்வது அனாவசியமானது என்று இருவருமே நம்புபவர்கள்.

‘திருமணத்திற்காக எனக்கு நானே பெண் பார்க்கிறேன். அதற்காக நாளை காலை ஐந்து மணிக்கு உன் வீட்டிற்கு வருகிறேன். குளிப்பதற்காக மட்டும். ஓரிரு மணி நேரத்தில் கிளம்பி விடுவேன்’ என்றான். ஆதிக்கோ ஒன்பது மணி தான் அதிகாலை. இருந்தாலும் பெண் பார்க்கும் சமாச்சாரம் என்பதால் மனதை தயார் செய்து கொண்டான். பத்து பத்து நிமிட இடைவெளிகளில் மூன்று முறை அழைத்து எந்த பேருந்தில் வருவது என மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை வேறு வேறு விதமாக கேட்டு சரியாக பத்து மணிக்கு வந்து சேர்ந்தான். நேராக பெங்களூரில் இருந்து இங்கு வருவதாக இருந்ததாகவும் பின் தான் பார்க்கவிருக்கும் பெண்ணிற்கு, அவளின் உடலின் மேல் அதிக அக்கறை காரணமாக காலையிலே எழுந்து நடை பயிற்சி மேற்கொள்வதால் பெசன்ட் நகரில் சந்திப்பிற்கு முன் சந்திப்பு நிகழ்த்தி விட்டு வந்ததாகச் சொன்னான்.

‘பெண் வீட்டிற்கு நீ மட்டும் தனியாகச் சென்று பார்க்க போகிறாயா’ என்று அசட்டுத்தனமாக எழுந்த கேள்வியை நல்ல வேளை ஆதி கேட்கவில்லை. ஈஸியாரில் ஓர் அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், அங்கு செல்ல அவளே கார் எடுத்து வருவதாகவும், அவளுக்கு வோட்கா தனக்கு பிராண்டி வாங்கி வைத்திருப்பதாகவும் கோகுல் பெருமினான். ஆதிக்கு வாயடைத்துவிட்டதால் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியவில்லை.

சரக்கு மட்டும் தானா அல்லது வேறு எதுவும் உண்டா என ஆதி கேட்டதற்கு மணமுடிக்கப் போகும் பெண் என்பதால் இது போன்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் பேசிப் பழக மட்டுமே செல்வதாகவும் கூறிச் சென்றான்.

பின்பொருநாள். அன்று ரெஸார்ட்டில் அப்பெண் இவன் முன் ஆசையைத் தூண்டும் விதமாக நடந்தும் இவன் தவறாக எதுவும் நடந்துகொள்ளக் கூடாதென்று வைராக்கியமாக இருந்ததாகவும், நமக்குள் இன்னும் எதுவும் உறுதி ஆகவில்லை என்பதால் அதற்குள் எதுவும் வேண்டாமென்று அவளுக்கு அறிவுரை கூறியதாகவும், ‘இப்போது எனக்கு உன் காதல் வேண்டும் வருங்காலம் பற்றி எனக்கு கவலையில்லை’ என்று அப்பெண் கூறிய வார்த்தைகளில்  இருந்த நியாயம் பிடித்துப்போகவே இருவரும் இருமுறை சல்லாபத்தில் ஈடுபட்டதாகச் சொன்னான். கூடவே இது போன்ற பெண்ணை மணக்க மனமில்லாமல் தற்போது வேறு பெண் பார்த்திருப்பதாகச் சொன்னான். ஒவ்வொரு விஷயம் சொல்லச் சொல்ல ஆதி ‘யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல்’ என பிதற்றிக்கொண்டிருந்தான் தன்னையுமறியாமல்.

அழைப்பைத் துண்டிக்கவும் அழகிய பெண் கோகுலின் கன்னம் உரசியபடியிருக்கும் புகைப்படம் ஒன்றை ஆதிக்கு அனுப்பி வைத்திருந்தான். கூடவே ‘ஷீ இஸ் மை நியூ கேர்ள் பிரண்டு’ என்றொரு காப்ஷன்.

oOo

ஆதிக்கோ நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். மாயாவிடம் கோகுலின் கதையைச் சொல்லும் போது ‘யூ ஆர் மை ரோல் மாடல்’ என்ற தனது உணர்ச்சிமிக்க வசனத்தை கத்தரிக்க மறந்துவிடக்கூடாது என நினைவில் வைத்துக்கொண்டான். சிவாவிற்கே மாயா அப்படியென்றால் இப்போது கோகுலின் கதையைச் சொன்னால் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவாள் என்ற சந்தேகம் எழுந்தது.

எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்றும் அவன் ஒரு ஞானப் பழம் என்றும் ஹரியின் கதையை மாயாவிடம் முன்பொருநாள் சொன்ன போது, ஹரியைத் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை நினைத்து ‘அய்யோயோயோயோ பாவம்’ என்று மாயா வருந்தியது குறிப்பிடத்தக்கது.

- த.ராஜன்

பின் குறிப்பு: இக்கதைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்திருந்தால், ‘சம்பந்தம் துளியும் இல்லை’ என்பது தான் பதில்.

ஜவ்வு மிட்டாய்

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயைத் தீண்டும் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டித் தீண்டி தீயை மூட்டுகிறாயே தூண்டித் தூண்டி தேனை ஊற்றுகிறாயே நீயே காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள் என்னை ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள்ரேகை நீளச் செய்கிறதே காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை யாரடி முதல் சொல்வது நீயா இல்லை நானா யார் இது மாற்றம் ஏன் இது என்ன மாயம் இது எதுவரை போகும் உன்னைப் பார்த்த நாள் முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உனை நான் உனை நான் உனை நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்ல கட்டும் ஊரு விட்டு ஊரு வந்து காதல் கடிதம் தீட்டவே மேகம் கருக்குது தப்புசிக்கு தப்புசிக்கு மின்னல் சிரிக்குது தப்புசிக்கு தப்புசிக்கு சாரல் ஏன் அடியே என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு பூவே மெட்டு பாடு கட்டிக் கலந்தாடி கவி பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் பெண் என்று பிறந்தாய் ஏன் என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே வா என் அன்பே வா ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் இல்லா தனி அறையில் ஒரு குரல் போலே நீ பாதி நான் பாதி கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா அந்த நதியின் கரையை நான் தேடும் செவ்வந்தி பூ இது ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே கண்ணுல காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு எனவே வானவில் என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நிலவே நிலவே சரிகமபதநி பாடு நிலாவே தேன் கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் நீ நாம் வாழவே உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய் என்னில் உன்னையே நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தான் காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே என் அன்பே நானும் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ என்பது எதுவரை எதுவரை நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச கூடாது வெறும் பேச்சில் சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்.

- த.ராஜன்

Tuesday 8 September 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை, செய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். மனைவியின் மறைவிற்குப் பின் ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன். அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம். அறை முழுவதும் புத்தகங்கள். அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாதது. பல்வேறு வகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்தி வைத்திருந்தார். சாய்வு நாற்காலியின் மேல் யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்தது. அருகே ஒரு பென்சில். அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கி வந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

‘உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

‘இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது நேரம் அது குறித்து பேசலாம்’

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப் பற்றி பேச என்ன கசக்கவா போகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத் தயார்' என்றபடி சிரித்தார். அதே சிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன் சந்திரசேகர் எழுதிய ‘நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகு காலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமான நாவல்'

'எனக்கும் ஓரளவிற்கு தான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர் பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்ப மாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போது தான் வாசிக்கிறேன். இது தான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்தி பெறாமல் இருப்பது வருத்தமே. அவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர் குறித்து பேச வேண்டாமா? நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் ‘நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். கட்டாயம் படித்துப் பாருங்கள். அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும் போது அவர் குறித்து விரிவாக நிச்சயம் பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

‘இசை குறித்து அபார ஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான். அது குறித்து கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டி. ஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார். இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள். இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள்  மனதில் தோன்றச் செய்யும். இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தரவேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும். இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டிவிட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ. 230/-

- த.ராஜன்

Tuesday 1 September 2015

மாயக்கண்ணாடி - 2


oOo

The Diving Bell and the Butterfly (2007) - Julian Schnabel

திடீர் மாரடைப்பிற்கு பின் அவனது உடலில் எதுவும் வேலை செய்யவில்லை, ஒரே ஒரு கண்ணைத் தவிர. கண்ணிமைகளை ஒரு முறை இமைத்தால் எஸ், இருமுறை இமைத்தால் நோ. இவ்வாறு உரையாடி ஒரு புத்தகம் எழுதுகிறான். புத்தகம் வெளி வந்த சில நாட்களில் இறந்தும் போகிறான். பேஸ்ட் ஆன் அ ட்ரூ ஸ்டோரி. இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த இரு விஷயங்கள் - ஒன்று அவன் கண்ணின் வழியே காண்பதாக படமாக்கியிருப்பது - இரண்டவாது அவன் மனதின் குரலை நம்மால் கேட்க முடியும் என்பது.


Gloomy Sunday (1999) - Rolf Schubel

தன் காதலிக்காக ஒரு பாடலைக் கம்போஸ் செய்கிறான். அப்பாடலைக் கேட்பவர்களுக்கு தன் உணர்வுகளை எங்கோ இட்டுச்சென்று தற்கொலை செய்யத் தூண்டுகிறது. இன்ட்டரெஸ்டிங்லஇப்படத்தின் நாயகி - கொள்ளை அழகு! அழகின் அதிசயம்! இவளுக்காக மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.


Amadeus (1984) - Milos Forman

இசையைப் பெரிதும் நேசிப்பவர்கள் தவறவிடக்கூடாத முக்கியமான திரைப்படம். மொஸார்டின் வாழ்வைப் பற்றிய காவியம் இப்படம். மொஸார்ட், நான்கு வயதில் முதல் பாடலைக் கம்போஸ் செய்கிறான். பில்லியர்ட்ஸ் மேஜையில் பந்தை உருட்டி விட்டபடி சர்வ சாதாரணமாக ஏற்கனவே அவன் மூளையில் பதிந்திருக்கும் பாடல்களை டிக்டேட் செய்வது போல் கம்போஸ் செய்கிறான். ஒரு நோட் கூட அடித்து திருத்தும் வழக்கம் இல்லை. பல நூறு பாடல்களை இயற்றிவிட்டு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இறந்து போகிறான். மொஸார்ட்டாக நடத்திருக்கும் நாயகனின்  (Tom Hulce) உடல் மொழி அபாரம். படம் பார்த்தது முதல் இன்று வரை அவரைப் போலவே கைகளை அசைத்துக்கொண்டிருக்கிறேன் :) இப்படத்தை இசைக்காவியம் என வர்ணிக்கிறார் எஸ்.ரா.


The Piano (1993) - Jane Campion

இதுவரை என் வாழ்வில் பார்த்த சிறந்த/பிடித்த திரைப்படங்களின் பட்டியலில் இதற்கு முதன்மையான இடம் உண்டு. நாவலில் 'கன்னி'யைப் போல.

'இப்போ நீங்க கேக்றது என்னோட குரல் இல்ல, என் மனசோட குரல். ஆறு வயசுல இருந்து நான் ஊமை ஆயிட்டேன். அதுக்கான காரணம் என்னனு எனக்கே தெரியாது. ஆனா நான் ஊமையா இருக்றேன்னு ஒரு நாளும் நெனச்சது இல்ல. ஏன்னா என்கிட்டே பியானோ இருக்கு'. இவ்வாறு படம் தொடங்குகின்றது.

கணவனை இழந்த ஏடாவிற்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை - ஃப்ளோரா. பிறருடன் பேசுவதற்கு சைகை மொழி. அதை பிறர்க்கு மொழிபெயர்ப்பவளாக ஃப்ளோரா. ஏடாவிற்கு இருப்பத்தைந்து வயது இருக்கலாம். மேலே சொன்ன வசனம் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியின் குரலில் வருகிறது. அது ஒரு பெண்ணின் குரலாக அல்லாமல் ஒரு சிறுமியின் குரலில் தொடங்குவதிலேயே உச்சம் தொடுகிறார் இயக்குனர். ஏடா ஆறு வயதில் தான் பேசிய கடைசி குரலாக இருக்கலாம். நினைவிலிருக்கும் தன் குரல்.
இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பதை பிற்பாடு அறிந்தேன்.

Jane Campion is a New Zealand screenwriter, producer, and director. Campion is the second of four women ever nominated for the Academy Award for Best Director and is also the first female filmmaker in history to receive the Palme d'Or, which she received for directing the acclaimed film The Piano (1993), for which she also won the Academy Award for Best Original Screenplay – Wiki.

இசையை உணர முடியுமேயன்றி யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஊமைகளின் மொழியும் அப்படித்தான். வாய் பேச முடியாத ஏடா(ADA), இசையின் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். பேச்சு அவமதிக்கப்படுவதைக் கூட ஏற்றுக்கொள்பவர்கள், தன் உணர்வு சிறிதும் சீண்டப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். பெரும்பாலும் ஒருவரின் உணர்வை அலட்சியம் செய்பவர்கள், அந்த உணர்வை புரிந்துகொள்ளாதவர்களாகவோ அல்லது  புரிந்துகொள்வதற்கு அவசியம் இல்லை என்றெண்ணுபவர்களாகவோ இருப்பர். இங்கே ஏடாவின் மொழி இசை - பியானோ. அவளைச் சுற்றியிருப்பவர்கள் இவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவா போகிறார்கள்?

வாய்ப்பமையும் போது இப்படம் பற்றி விரிவாக எழுத அவா. உங்களைப் பார்க்கத் தூண்டுவதற்காக இக்குட்டி அறிமுகம்.

- த.ராஜன்

Monday 3 August 2015

சதுரங்க வேட்டை - H.வினோத்

என் நண்பன் ஒருத்தன் சொல்வான் - 'பணம் தான் ராஜன் எல்லாம். சொந்தம் பந்தம் அப்பா அம்மா எல்லாம் ஒண்ணுமே கெடையாது. இவ்வளவு ஏன் ஃப்ரண்ட்ஷிப் கூட பணம்ன்னு வரும்போது பல்ல இளிச்சிடும்'. இதையெல்லாம் மீறி அன்பு, காதல், பாசம் என்றாலும் பல சமயங்களில் அவன் சொன்ன வார்த்தைகள் தான் சரியோ என்று தோன்றும். விதிவிலக்குகளை விட்டுவிடுவோம். விதிவிலக்குகள் எப்போதுமே விதிவிலக்கு. பணத்தின் முன் எல்லாமே ஆட்டம் கண்டுவிடுமென்பதை யாரும் மறுக்க முடியாது.

விதவிதமாக ஏமாந்து கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் வாழ வேண்டியது தான் தற்போதைய நிலை. இயற்கை. எதார்த்தம். இவ்வளவு ஏன் நம்மை நாமே ஏமாற்றி தான் வாழ வேண்டியிருக்கிறது. யார் ஏமாற்றுகிறார்கள் யார் உண்மையான அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்பதையே பிரித்தறிய முடியாத நிலை. பாதிவிலையில் பொருள் கிடைத்தால் அது தேவையில்லையென்றாலும் வாங்கிவிடுகிறோம். இதெல்லாம் தவறில்லை என்று மனம் எண்ணும் வரை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். நாம் ஏமாறுவது தான் பலரின் முதலீடு. இப்படத்திலுள்ள ஒரு வசனம் - 'நானா யாரயும் தேடி போய் ஏமாத்தல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்'.
 
சதுரங்கவேட்டை. இப்படத்தில் என் மனம் கவர்ந்த சில வசனங்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணய எதிர்பாக்கக்கூடாது. அவன் ஆசைய தூண்டனும்.
ஏமாத்துறது தப்பில்லையா சார்?

குற்ற உணர்ச்சி இல்லாம பண்ற எதுவுமே தப்பு இல்ல.
பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்ன்னா அந்த பணத்த சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணாலும் பண்ணக்கூடாது.
இந்த சமூகம் நமக்கு என்ன பண்ணுச்சோ அதத்தான் இந்த சமூகத்துக்கு நாம திரும்ப பண்றோம்.
உனக்குலாம் யாருய்யா காந்திபாபுன்னு பேரு வச்சது?

உண்மையாவும் நேர்மையாவும் வாழனுங்க்றதுக்காக எங்க அம்மாப்பா வச்ச பேருய்யா.
அப்றம் தம்பி. உன் ஹிஸ்டரி ஜியோகிராபிலாம் என்ன. ஏன் பண்ண?

ஏன் பண்ணேன்னு சொல்றதுக்கு என்கிட்ட பெரிய கத இருக்கு சார். சொன்னா ஃபுல் கதையையும் கேட்டுட்டு, இப்படி தப்பு பண்ற எல்லாருக்குமே ஒரு கத இருக்குன்னு சொல்வீங்க. எதுக்கு சார் டைம் வேஸ்ட். பணம் வேணும். செஞ்சேன். அவ்வளவு தான்.
இவ்வளவு பேர ஏமாத்தி உனக்கு எதுக்குடா இவ்வளவு பணம்?

கோவில்ல விஐபி வரிசைல சாமி கும்புட பணம் வேணாமா சார்? இப்பலாம் அண்ணன் தங்கச்சி பாசம் அம்மா பையன் பாசம்ன்னு படம் எடுத்தாகூட க்ளீஷேன்னு சொல்லிட்றாங்க. எப்பவுமே க்ளீஷே ஆகாம இருக்ற ஒரே விஷயம். பணம் மட்டும் தான்.
என் சர்வீஸ்ல இவ்வளவு ஃப்ராட் பண்றவன இப்பதான் பாக்றேன்.

சார் நான் நல்லவன் சார்.

நீயா?

சார், ஏழையா இருந்து நல்லவனா இருக்றதுக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்றதுக்கும் நெறையவே வித்யாசம் இருக்கு சார். நான் பணக்கார நல்லவனா இருக்க ஆசப்பட்றேன். இது தப்பா?
உன்கிட்ட ஏமாந்தவன நெனச்சிப்பாத்தியா. எத்தன பேர் ஏமாந்துருப்பான். எவ்வளவு பெரிய பாவம்.

கோழி மேல பரிதாபப்பட்டா சிக்ஸிட்டிஃபைவ் சாப்ட முடியாது. அப்புறம் நானா யாரயும் தேடி போய் ஏமாத்தல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். சொல்லப்போனா இந்த மாதிரி விஷயத்துக்குலாம் என் மேல கேஸே போடக்கூடாது சார். இப்ப எலெக்ஷன்ல தமிழ்நாட்ட சிங்கப்பூரா மாத்துறேன்னு ஓட்டு கேட்டு ஜெயிக்றாங்க. அஞ்சு வருஷத்துக்கு அப்புறமும் தமிழ்நாடு தமிழ்நாடாவே தான் இருக்கு. அப்ப அவங்க நம்மல ஏமாத்திட்டாங்க தான. அவங்க ஏமாத்திட்டாங்கன்னு உங்களால அவங்க மேல கேஸ் போட முடியுமா சார்?
ஏமாறது ஏமாத்துறது இதெல்லாம் இயற்கையான விஷயம்.
சார் நீங்க என்ன அடிக்கலாம் கொல்லலாம். ஆனா தண்டிக்க முடியாது சார். ஏன்னா நான் ஏழையும் இல்ல முட்டாளும் இல்ல.
டேய் ஏன்டா இப்படி பண வெறி புடிச்சி அலயுற?

சார் என்னைக்காவது பசியோட இருந்துருக்கீங்களா. இந்த உலகத்துல எல்லாமே இருந்தும் ஆனா எதுவுமே உங்களுக்கு இல்லன்னு இருந்துருக்கீங்களா. பசிக்காக பயம், கோவம், வன்மம், தனிமை உணர்ச்சி. நமக்கு மட்டும் ஏன் இப்படி. இந்த உலகத்துல நமக்கு யாருமே இல்ல. இது மோசமான உலகம். உயிர் வாழனும்ன்னா என்ன வேணா பண்ணலாம்ன்னு கொல வெறியோட இருந்துருக்கீங்களா சார்? உங்க அம்மாவ அடக்கம் பண்ண ஆயிரம் ரூபா காசு இல்லாம அனாத பொணம்ன்னு கையெழுத்து போட்ருக்கீங்களா சார்?
என்ன சார் அவன பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களா?

இயற்கையோட சமநிலை தவறும்போது நடக்ற அழிவு மாதிரி. மனுஷனோட சமநிலை தவறும் போதும் நடந்துருது.
வாழ்க்கைல பணம் தான் முக்கியம்ன்னு முடிவு பண்ணிட்ட. ஒரு நாள் பணம் மட்டுமே முக்கியமில்லன்னு தோணும் போது செஞ்ச தப்புக்கெல்லாம் என்ன பண்ண போற?

ஹா ஹா ஹா. காமெடி பண்ணாதீங்க சார். அப்படி எதுவுமே நடக்காது. பிகாஸ் மனி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.

ஹீரோ திருந்தி வாழ நினைப்பது. வாழ விடமால் பழைய சுழலில் சிக்குவது. கர்ப்பிணி மனைவி. அவளைக் கொல்வதற்காக அருகிலிருக்கும் வில்லன் அவளின் செயல் கண்டு திருந்துவது என இரண்டாம் பாதி சூர மொக்கை. 'ஹா ஹா ஹா. காமெடி பண்ணாதீங்க சார். அப்படி எதுவுமே நடக்காது. பிகாஸ் மனி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.' இந்த வரியோடு படம் முடிந்திருக்கலாம். அது தான் எதார்த்தம்.

இடைவேளை வரை - 9/10
இடைவேளைக்குப் பிறகு - 1/10

- த.ராஜன்

Friday 31 July 2015

12 Angry Men(1957) - Sidney Lumet

எதைத் தேடிச் செல்கிறோமோ அதற்கான பாதையை கண்டடைவோம். புத்தக வாசிப்பில் தீவிரமாக நுழைந்த பொழுது - எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரை, புத்தகம் குறித்த நீயா நானா, ப்ளாக் (Blog) மூலமாக நண்பர்கள் - அவர்களின் பரிந்துரை, புத்தக நிலையங்களின் நிகழ்வுகள் - அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமென தொடந்து பல வாசல்கள் திறந்தவண்ணமிருந்தன. தற்போது சினிமா குறித்த தேடல். கடந்த பதிவில் தல பாலாஜியின் பரிந்துரையின்படி பார்க்க நேர்ந்த திரைப்படம் தான் 12 Angry Men.


ஒரே ஓர் அறையில் பன்னிரு ஆண்களுடன் முழுத் திரைப்படமும். மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிறுவனின் வழக்கைக் குறித்து சாமானியர்கள் பன்னிருவர் விவாதித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும். அவ்வளவு தான் கதை. அபாரமான கதைக்களமும் கிடையாது - ஆனால் வசனங்களின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் விறுவிறுப்பான திரைப்படமாகவும் நம் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்யும் வண்ணமும் அமைந்திருக்கின்றது இப்படம்.

ரஷ்ய இயக்குனர் Nikita Mikhalkov இதேத் திரைப்படத்தை 2007ம் ஆண்டு ரீமேக் செய்திருக்கிறார்.

கல்லூரி காலங்களில் பார்த்து வியந்த 'Exam(2009) by Stuart Hazeldine' திரைப்படமும் ஒரே அறையில் முழுக்க படமாக்கப்பட்ட திரைப்படம். இதே போல் தமிழில் நடந்த ஓர் அற்புத முயற்சி நாராயண் நாகேந்திர ராவ் இயக்கிய 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே'. இப்படத்தின் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது. மனதை வருடும் இசை மழையைப் போல. 'என்னுயிரே' பாடலின் மூன்று வெர்ஷன்களும் ஒவ்வொரு ஃப்ளேவர். மழை பொழிந்த மாலை வேளையில் இத்திரைப்படத்தைக் காண்பது அலாதி இன்பம்.

ஓர் அறையில் படமாக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்களின் பட்டியலை இணையத்தில் காண முடிகின்றது. நீங்க ஏற்கனவே பார்த்த அனுபவமேதுமிருப்பின் பகிரவும்.

- த.ராஜன்

Monday 20 July 2015

மாயக்கண்ணாடி

எனது இலக்கியப் பயணம் சிறப்பாக தொடங்கியதற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதல் முக்கிய பங்காற்றியது. அவரின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் இருந்தே எனது இலக்கியப் பயணம் தொடங்கியது. தற்போது சினிமாவிற்கு அவரது நூறுசிறந்த உலகத் திரைப்படங்களின் பட்டியலையே நாடியிருக்கிறேன். சினிமா பற்றிய அவருடைய புத்தகங்களுக்கு எதிர்மறையான பல கருத்துகள் இருப்பினும் அதன்மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அவரது வலைத்தளத்தில் சினிமா பற்றி 135 கட்டுரைகள் இருக்கின்றன. சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

அவர் பரிந்துரைக்கும் நூறு படங்களில் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் நான் பார்க்கும் திரைப்படங்கள் பற்றி (எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில்) அறிமுகப் பதிவு ஒன்றை 'மாயக்கண்ணாடி' (உபயம்: நஸ்ருதீன் ஷா) என்ற பெயரில் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். கடந்த வாரத்தில் பார்த்த நான்கு திரைப்படங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் இதோ.


The Bicycle Thief (1948) by Vittorio De Sica

பல பேர் போட்டியிடும் போஸ்டர் ஒட்டும் வேலை நாயகனுக்கு கிடைகின்றது. சைக்கிள் இருந்தால் தான் வேலை. தனது கல்யாணத்திற்கு வந்த பரிசுப் பொருளை விற்று மனைவி சைக்கிள் வாங்கித் தருகிறாள். முதல் நாள் வேலைக்கு செல்லும் போது மனைவியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. நாயகனிடமும் தான். முதல் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது கண் முன்னே சைக்கிளை திருடிச் செல்கிறான். திருடு போன சைக்கிளைத் தேடி நாயகனும் அவனது மகனும் அலைவது தான் கதை. வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Psycho (1960) by Alfred Hitchcock

இதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் முன்னுதாரணமாக இந்தப் படம் தான் இருந்திருக்குமென எண்ணுகிறேன். இந்தப் படத்தின் கருவைச் சொன்னால் பார்க்கப்போகும் உங்களுக்கு சுவாரசியம் இருக்காது. பாருங்க :) கெளதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Run Lola Run (1998) by Tom Tykwer

காதலனிடமிருந்து லோலாவிற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது. இருபது நிமிடத்தில் ஒரு லட்சம் ஜெர்மன் மார்க்ஸ் ஏற்பாடு செய்யுமாறு லோலாவிடம் கேட்கிறான். அப்படி முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றுவிடுவதாக சொல்கிறான். ஓட ஆரம்பிக்கிறாள் லோலா. மூன்று க்ளைமாக்ஸ். மூன்று ஓட்டங்கள். ஒவ்வொன்றும் வேறு சிலரின் திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக எடுக்கப்பட்டதாக விக்கி கூறுகிறார். அது பற்றி விவரங்கள் ஏதும் தெரியவில்லை எனக்கு. சிம்பு தேவனின் 'ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

City of God (2002) by Fernando Meirelles

தாறுமாறு தக்காளிசோறு படம். கத்தியைத் தீட்டுவதாக படம் ஆரம்பிக்கின்றது. கோழிகளை வெந்நீரில் முக்கி ரெக்கையைப்  பிய்த்து தோலை உரிப்பதை ஒரு கோழி பார்த்துக்கொண்டிருகின்றது. அந்தக் கோழியின் முகத்தில் தெரியும் பீதி. கோழியைக் கூட எதார்த்தமாக நடிக்க வைக்க முடிகிறது அவர்களால். கேங்ஸ்ட்டர் மூவி. இதன் பாதிப்பில் ஏதும் தமிழில் திரைப்படம் வந்திருப்பதாக கேள்விப்படவில்லை. தமிழில் கேங்ஸ்ட்டர் மூவி எடுக்கக் வேண்டுமென்றால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னும் சில வருடங்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைப் போல நானும் உலகப் படங்கள் பற்றி பெரிய பெரிய புத்தகங்கள் எழுத வேண்டும் :)

- த.ராஜன்

Monday 13 July 2015

A Separation by Asghar Farhadi

உறவுகளுக்குள் நடைபெரும் ஆகப்பெரிய சண்டைகள் பலவற்றில் அநேகமானவை உப்பு சப்பில்லாத விஷயங்களால் தான் என்று நான் சொன்னால் அதை யாரும் மறுக்கத் துணிய மாட்டீர்கள் என நம்புகிறேன்.
          
A Separation - ஈரானியத் திரைப்படம். உலக சினிமா என்ற உடன் - கதவை இடது கையால் மூடுவது இதைக் குறிக்கின்றது - இரத்தம் வளைந்து வளைந்து போவதாகக் காட்டியது இதைக் குறிக்கின்றது - இப்படி அப்படி அது இது நொட்டு நொசுக்கு என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை தற்போது. ஈரானில் என்றில்லை நம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் அன்றாட விஷயம் தான் கதைக்களம் என்பதால் மனதிற்கு அருகில் வைத்து ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்க முடியும். திரைப்படம் என்பதால் ரசனை!


விவாகரத்திற்காக கோர்ட்டில் வாதிடுவதாக கணவன் மனைவியின் வாக்குவாதத்துடன் தொடங்குகிறது திரைப்படம். அவர்களுக்கு பதினோரு வயதில் ஒரு பெண் குழந்தை. நாயகனுக்கு நோய்வாய்ப்பட்ட வயோதிகத் தந்தை. மனைவி இல்லாததால் தந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பெண் (கர்ப்பமான பெண்). அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் அல்லது தவறாக புரிந்துகொள்ள நேர்வதால் இவர்களுக்குள் நிகழும் பிரச்சனைகளை, உணர்வுகளை எதார்த்தமாக சித்தரிக்கும் அற்புதம் இப்படம்.

முக்கியமான பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கின்றது. விருதுகளின் பட்டியல் விவரங்களுக்கு விக்கியை நாடவும்.

இரண்டாம் உலகம் திரைப்படத்தில் அப்பாவிற்கு குண்டி கழுவிவிடும் காட்சியைக் கண்டு கண் கலங்கியது ஞாபகம் வருகின்றது. இது போன்றதொரு காட்சிகளை செல்வராகவன் தவிர வேறு யாரும் தமிழில் நிகழ்த்த முடியாது எனத்தோன்றியது அப்போது. தன்னைப் பார்த்து முகம் சுளிக்காமல், எந்தவித ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகாமல் தன் வாழ்வின் கடைசிக் காலங்களைக் கழிக்கும் முதியோர்கள் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இப்படி வாய்த்துவிடும். இப்படத்தில் தந்தையை மகன் கவனித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் உச்சம்.


வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத் திட்ட நேர்ந்து பின் தந்தையைக் குளிப்பாட்டும் பொழுது தந்தையின் முதுகில் முகம் புதைத்து மகன் அழும் காட்சி உன்னதத்தின் உச்சம். படத்தின் இறுதியில் நாயகனின் மகளும் வேலைக்கார பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இரு நொடிகள் உன்னதத்தின் அடுத்த உச்சம். இதுவரை பார்க்காதவர்கள் தவரவிடாதீர்கள்.

குடும்பங்களில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை இவ்வளவு எதாரத்தத்துடன் சினிமாவாக்க எப்படி முடிகிறது அவர்களால்?! இது ஏன் ஓரளவு கூட தமிழில் சாத்தியமாகவில்லை என்பது மட்டும் புரிய மாட்டேனென்கிறது. உலக சினிமா குறித்து பேசும் பலரும் கூறும் வசனம் இது. அடுத்த சந்ததியினராவது இந்த வரியைப் பயன்படுத்தாமல் போக வேண்டுகிறேன்.

- த.ராஜன்

(கடந்த ஞாயிறன்று பனுவலில் இப்படத்தை திரையிட்டார்கள். இதில் மெம்பர் ஆகும் பொருட்டு சிறந்த முறையில் திரையிட ஏற்பாடு செய்யலாம் என்றார் செந்தில் அண்ணன். சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்)