Monday 2 November 2015

பூங்காற்று புதிரானது

நாம் எத்தனையோ பெண்களை கண்கொட்டாமல் பார்த்தாலும் நம்மை ஒரு பெண், ஒரு நொடி பார்ப்பதற்கு ஈடாகதல்லவா? அதன் சுகமே தனி அல்லவா? பட்டாம்பூச்சி பறப்பது, தலைக்கு மேல் பல்பு எறிவது, மின்னல் தாக்குவது எல்லாம் நடக்கும். அது வெறும் வர்ணனை மட்டும் அல்ல என்பதை அனுபவித்தவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு பெண். அழகிய இளம் பெண். என் வீட்டின் அருகிலே குடி வந்திருந்தாள். குழந்தைகளைக் காணும் போதெல்லாம் இவ்வாறு வர்ணிப்பது வழக்கம் - குட்டி மூக்கு, குட்டி காது, குட்டி விரலு, குட்டி கண்ணு என. கிட்டத்தட்ட இந்த வர்ணனைகள் அவளுக்கும் பொருந்தும். கண்களைத் தவிர. அவள் பார்த்தாள் போதும் அந்த நாள் புண்ணியம் எய்திவிடும்.

என் பாக்கியம் அவ்வப்போது தெருவில் அவளைக் காணும் பாக்கியம் கிடைத்தது. தினம் தினம் புண்ணியமும் சேர்த்துக்கொண்டிருந்தேன். இருவரும் பார்வையைப் பரிமாறிக்கொண்டோம். என் இதயம் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருந்தது.

அவளின் சில பழக்கவழக்கங்கள், சில முக அசைவுகள் என் முன்னாள் காதலிகளில் ஒருத்தியின் சாயலை ஒத்திருந்தது. பார்த்தவுடன் இவளைப் பிடித்துப் போக, அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த முன்னாள் காதல் 'ஒரு தலைக் காதல்' என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தோழிகளிடம் என்னை அவள், 'அவன் ஒரு லூசு' என்று சொன்னதாக பிற்பாடு அறிந்தேன். நான் லூசு இல்லை என்பதை நிரூபிக்க முயற்சி செய்த அனைத்தும் வீணானது. இன்றும் அவள் மனதில் ஒரு லூசாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருக்கட்டும். அவளிடம் சாத்தியமாகாததை இவளிடம் அடையத் துடித்தது மனம். உடனே தப்பான எண்ணம் வேண்டாம். உங்களைப் போல என்னுடைய மனம் கள்ளங்கபடம் கொண்டது அல்ல.

அவளிடம் பேசுவது என்று முடிவெடுத்தேன். ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசுவது இங்கே மிகவும் சுலபம். அதுவே ஒரு ஆண் பெண்ணிடம் பேசுவதென்றால் சாதாரண காரியமில்லை. ஒன்று பேச மறுத்து அவமானப்படுத்துவார்கள் இல்லையேல் ஒற்றை வார்த்தை பதில்களில் நம் மூக்கை அறுப்பார்கள். பெண்களை நேரடியாக கேலி செய்யும் ஆண்கள் - பெண்களிடம் பேசவே அஞ்சும் ஆண்கள். இருவரையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்றெண்ணுகிறேன். ஆக சுமூகமான உரையாடல் நிகழ்த்தலாம் என்றெண்ணினேன். <தற்பெருமை அல்லது சுயதம்பட்டம்>

'இரண்டு நாள் தான் பார்த்திருக்கிறாய். அதற்குள்ளாகவா?' என்று நண்பன் பதறினான். 'இங்க என்ன தோணுதோ (இதயம்) அத பேசுவேன் இங்க என்ன தோணுதோ (மூளை) அத பண்ணுவேன்' எனும் இளைய தளபதியின் வசனத்தை அவனிடம் உதிர்த்தேன். எனக்கும் இதற்கு முன் யாரிடமும் இவ்வாறு பேசி அனுபவமேதும் இல்லை தான். இருந்தாலும் அவளின் பார்வை 'என்னோடு பேசு' என்பது போலவே அழைத்தது. இதற்கு முன்பும் சிலரிடம் பேசாமல் பார்வைகளிலே முடிந்த உறவுகள் ஏராளம். கோபிகிருஷ்ணனின் படைப்புகள் வேறு இவளிடம் பேசிவதில் ஒன்றும்  பிழையில்லை என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்துக்கொண்டிருந்தது. அதற்கு அவர் காரணம் அல்ல. என் கொழுப்பு தான்.

அவளின் தொலைபேசி எண் திருடியதெல்லாம் தனிக் கதை. அது இங்கு வேண்டாம். இப்படி இப்படியெல்லாம் பேசி அசத்த வேண்டுமென்று பல முறை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.
< 
இனி வாட்சப் உரையாடல்:

'ஹலோ'

சில நொடிகள் எந்த பதிலும் இல்லை. இந்த இடத்தில என் இதயம் என்ன செய்து கொண்டிருக்குமென்று நான் வர்ணிக்கத் தேவையில்லை தானே?!

'ஹலோ. சாரி. மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?'

சந்தோஷமும் சோகமும் ஒரு சேரத் தாக்கியது.

'கருப்பு சட்ட போட்டு ஒரு பையன் உங்கள குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தானே. அவன் தான்' என்றேன் வெகுளியாக. ஹ்யூமர் முயற்சித்தால் பெண்களுக்கு பிடிக்குமே என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் போலும்.

'தெரியல. நான் பாக்கலயே'
> 
கதம் கதம். பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள முடியாதென்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதன் பின், இப்போதெல்லாம் மருந்துக்கு கூட தரிசனங்கள் கிட்டுவதில்லை.

இரண்டு நாட்களாக ‘பொன்முட்டையிடும் வாத்து கதை’ தான் மனதில் உழன்று கொண்டிருக்கிறது.


- த.ராஜன்

No comments:

Post a Comment