Monday 21 September 2015

மீனெறி தூண்டில்

ஆதிக்கு நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். சிவா ஏற்கனவே பதினோரு பெண்களை இரு தலையாகக் காதலித்திருப்பதாகவும் தற்போது காதலித்துக் கொண்டிருப்பது பதினான்காவது பெண் என்றும் சிவாவின் காதல் கதையினை ஆதி தன் காதலி மாயாவிடம் வெகு சுவாரசியமாக சொல்லிக்கொண்டிருந்தான். ஏதோ நினைவு வந்தவனாக, சிவா இத்தனை பெண்களைக் காதலிக்கிறானே ஒழிய அவன் மிகவும் கண்ணியமானவன் என்றும் அவனது சுண்டு விரல் நகம் கூட எந்தப் பெண்ணின் மீதும் பட்டதில்லை என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாயா பதறியவளாக, சிவாவோட பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அவனது நட்பை அறவே துண்டித்து விட வேண்டுமென்று காதலோடு கட்டளையிட்டாள் அல்லது எச்சரித்தாள் என்றும் கொள்ளலாம்.

oOo

கோகுல் (ப்ளே பாய், மன்மதன், தன் கற்பை சிறு வயதிலேயே இழந்தவன் இத்யாதி இத்யாதி) ஆதியை என்றுமில்லாமல் தொலைபேசியில் அழைத்தான். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் எனினும் படிப்பிற்குப் பின் தேவையில்லாமல் பேசிக்கொள்வதில்லை. காரணமே இல்லாமல் ஒரு பையனும் இன்னொரு பையனும் பேசிக்கொள்வது அனாவசியமானது என்று இருவருமே நம்புபவர்கள்.

‘திருமணத்திற்காக எனக்கு நானே பெண் பார்க்கிறேன். அதற்காக நாளை காலை ஐந்து மணிக்கு உன் வீட்டிற்கு வருகிறேன். குளிப்பதற்காக மட்டும். ஓரிரு மணி நேரத்தில் கிளம்பி விடுவேன்’ என்றான். ஆதிக்கோ ஒன்பது மணி தான் அதிகாலை. இருந்தாலும் பெண் பார்க்கும் சமாச்சாரம் என்பதால் மனதை தயார் செய்து கொண்டான். பத்து பத்து நிமிட இடைவெளிகளில் மூன்று முறை அழைத்து எந்த பேருந்தில் வருவது என மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை வேறு வேறு விதமாக கேட்டு சரியாக பத்து மணிக்கு வந்து சேர்ந்தான். நேராக பெங்களூரில் இருந்து இங்கு வருவதாக இருந்ததாகவும் பின் தான் பார்க்கவிருக்கும் பெண்ணிற்கு, அவளின் உடலின் மேல் அதிக அக்கறை காரணமாக காலையிலே எழுந்து நடை பயிற்சி மேற்கொள்வதால் பெசன்ட் நகரில் சந்திப்பிற்கு முன் சந்திப்பு நிகழ்த்தி விட்டு வந்ததாகச் சொன்னான்.

‘பெண் வீட்டிற்கு நீ மட்டும் தனியாகச் சென்று பார்க்க போகிறாயா’ என்று அசட்டுத்தனமாக எழுந்த கேள்வியை நல்ல வேளை ஆதி கேட்கவில்லை. ஈஸியாரில் ஓர் அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், அங்கு செல்ல அவளே கார் எடுத்து வருவதாகவும், அவளுக்கு வோட்கா தனக்கு பிராண்டி வாங்கி வைத்திருப்பதாகவும் கோகுல் பெருமினான். ஆதிக்கு வாயடைத்துவிட்டதால் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியவில்லை.

சரக்கு மட்டும் தானா அல்லது வேறு எதுவும் உண்டா என ஆதி கேட்டதற்கு மணமுடிக்கப் போகும் பெண் என்பதால் இது போன்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் பேசிப் பழக மட்டுமே செல்வதாகவும் கூறிச் சென்றான்.

பின்பொருநாள். அன்று ரெஸார்ட்டில் அப்பெண் இவன் முன் ஆசையைத் தூண்டும் விதமாக நடந்தும் இவன் தவறாக எதுவும் நடந்துகொள்ளக் கூடாதென்று வைராக்கியமாக இருந்ததாகவும், நமக்குள் இன்னும் எதுவும் உறுதி ஆகவில்லை என்பதால் அதற்குள் எதுவும் வேண்டாமென்று அவளுக்கு அறிவுரை கூறியதாகவும், ‘இப்போது எனக்கு உன் காதல் வேண்டும் வருங்காலம் பற்றி எனக்கு கவலையில்லை’ என்று அப்பெண் கூறிய வார்த்தைகளில்  இருந்த நியாயம் பிடித்துப்போகவே இருவரும் இருமுறை சல்லாபத்தில் ஈடுபட்டதாகச் சொன்னான். கூடவே இது போன்ற பெண்ணை மணக்க மனமில்லாமல் தற்போது வேறு பெண் பார்த்திருப்பதாகச் சொன்னான். ஒவ்வொரு விஷயம் சொல்லச் சொல்ல ஆதி ‘யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல்’ என பிதற்றிக்கொண்டிருந்தான் தன்னையுமறியாமல்.

அழைப்பைத் துண்டிக்கவும் அழகிய பெண் கோகுலின் கன்னம் உரசியபடியிருக்கும் புகைப்படம் ஒன்றை ஆதிக்கு அனுப்பி வைத்திருந்தான். கூடவே ‘ஷீ இஸ் மை நியூ கேர்ள் பிரண்டு’ என்றொரு காப்ஷன்.

oOo

ஆதிக்கோ நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். மாயாவிடம் கோகுலின் கதையைச் சொல்லும் போது ‘யூ ஆர் மை ரோல் மாடல்’ என்ற தனது உணர்ச்சிமிக்க வசனத்தை கத்தரிக்க மறந்துவிடக்கூடாது என நினைவில் வைத்துக்கொண்டான். சிவாவிற்கே மாயா அப்படியென்றால் இப்போது கோகுலின் கதையைச் சொன்னால் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவாள் என்ற சந்தேகம் எழுந்தது.

எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்றும் அவன் ஒரு ஞானப் பழம் என்றும் ஹரியின் கதையை மாயாவிடம் முன்பொருநாள் சொன்ன போது, ஹரியைத் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை நினைத்து ‘அய்யோயோயோயோ பாவம்’ என்று மாயா வருந்தியது குறிப்பிடத்தக்கது.

- த.ராஜன்

பின் குறிப்பு: இக்கதைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்திருந்தால், ‘சம்பந்தம் துளியும் இல்லை’ என்பது தான் பதில்.

ஜவ்வு மிட்டாய்

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயைத் தீண்டும் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டித் தீண்டி தீயை மூட்டுகிறாயே தூண்டித் தூண்டி தேனை ஊற்றுகிறாயே நீயே காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள் என்னை ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள்ரேகை நீளச் செய்கிறதே காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை யாரடி முதல் சொல்வது நீயா இல்லை நானா யார் இது மாற்றம் ஏன் இது என்ன மாயம் இது எதுவரை போகும் உன்னைப் பார்த்த நாள் முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உனை நான் உனை நான் உனை நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்ல கட்டும் ஊரு விட்டு ஊரு வந்து காதல் கடிதம் தீட்டவே மேகம் கருக்குது தப்புசிக்கு தப்புசிக்கு மின்னல் சிரிக்குது தப்புசிக்கு தப்புசிக்கு சாரல் ஏன் அடியே என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு பூவே மெட்டு பாடு கட்டிக் கலந்தாடி கவி பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் பெண் என்று பிறந்தாய் ஏன் என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே வா என் அன்பே வா ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் இல்லா தனி அறையில் ஒரு குரல் போலே நீ பாதி நான் பாதி கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா அந்த நதியின் கரையை நான் தேடும் செவ்வந்தி பூ இது ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே கண்ணுல காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு எனவே வானவில் என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நிலவே நிலவே சரிகமபதநி பாடு நிலாவே தேன் கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் நீ நாம் வாழவே உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய் என்னில் உன்னையே நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தான் காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே என் அன்பே நானும் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ என்பது எதுவரை எதுவரை நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச கூடாது வெறும் பேச்சில் சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்.

- த.ராஜன்

Tuesday 8 September 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை, செய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். மனைவியின் மறைவிற்குப் பின் ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன். அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம். அறை முழுவதும் புத்தகங்கள். அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாதது. பல்வேறு வகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்தி வைத்திருந்தார். சாய்வு நாற்காலியின் மேல் யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்தது. அருகே ஒரு பென்சில். அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கி வந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

‘உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

‘இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது நேரம் அது குறித்து பேசலாம்’

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப் பற்றி பேச என்ன கசக்கவா போகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத் தயார்' என்றபடி சிரித்தார். அதே சிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன் சந்திரசேகர் எழுதிய ‘நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகு காலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமான நாவல்'

'எனக்கும் ஓரளவிற்கு தான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர் பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்ப மாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போது தான் வாசிக்கிறேன். இது தான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்தி பெறாமல் இருப்பது வருத்தமே. அவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர் குறித்து பேச வேண்டாமா? நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் ‘நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். கட்டாயம் படித்துப் பாருங்கள். அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும் போது அவர் குறித்து விரிவாக நிச்சயம் பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

‘இசை குறித்து அபார ஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான். அது குறித்து கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டி. ஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார். இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள். இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள்  மனதில் தோன்றச் செய்யும். இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தரவேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும். இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டிவிட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ. 230/-

- த.ராஜன்

Tuesday 1 September 2015

மாயக்கண்ணாடி - 2


oOo

The Diving Bell and the Butterfly (2007) - Julian Schnabel

திடீர் மாரடைப்பிற்கு பின் அவனது உடலில் எதுவும் வேலை செய்யவில்லை, ஒரே ஒரு கண்ணைத் தவிர. கண்ணிமைகளை ஒரு முறை இமைத்தால் எஸ், இருமுறை இமைத்தால் நோ. இவ்வாறு உரையாடி ஒரு புத்தகம் எழுதுகிறான். புத்தகம் வெளி வந்த சில நாட்களில் இறந்தும் போகிறான். பேஸ்ட் ஆன் அ ட்ரூ ஸ்டோரி. இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த இரு விஷயங்கள் - ஒன்று அவன் கண்ணின் வழியே காண்பதாக படமாக்கியிருப்பது - இரண்டவாது அவன் மனதின் குரலை நம்மால் கேட்க முடியும் என்பது.


Gloomy Sunday (1999) - Rolf Schubel

தன் காதலிக்காக ஒரு பாடலைக் கம்போஸ் செய்கிறான். அப்பாடலைக் கேட்பவர்களுக்கு தன் உணர்வுகளை எங்கோ இட்டுச்சென்று தற்கொலை செய்யத் தூண்டுகிறது. இன்ட்டரெஸ்டிங்லஇப்படத்தின் நாயகி - கொள்ளை அழகு! அழகின் அதிசயம்! இவளுக்காக மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.


Amadeus (1984) - Milos Forman

இசையைப் பெரிதும் நேசிப்பவர்கள் தவறவிடக்கூடாத முக்கியமான திரைப்படம். மொஸார்டின் வாழ்வைப் பற்றிய காவியம் இப்படம். மொஸார்ட், நான்கு வயதில் முதல் பாடலைக் கம்போஸ் செய்கிறான். பில்லியர்ட்ஸ் மேஜையில் பந்தை உருட்டி விட்டபடி சர்வ சாதாரணமாக ஏற்கனவே அவன் மூளையில் பதிந்திருக்கும் பாடல்களை டிக்டேட் செய்வது போல் கம்போஸ் செய்கிறான். ஒரு நோட் கூட அடித்து திருத்தும் வழக்கம் இல்லை. பல நூறு பாடல்களை இயற்றிவிட்டு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இறந்து போகிறான். மொஸார்ட்டாக நடத்திருக்கும் நாயகனின்  (Tom Hulce) உடல் மொழி அபாரம். படம் பார்த்தது முதல் இன்று வரை அவரைப் போலவே கைகளை அசைத்துக்கொண்டிருக்கிறேன் :) இப்படத்தை இசைக்காவியம் என வர்ணிக்கிறார் எஸ்.ரா.


The Piano (1993) - Jane Campion

இதுவரை என் வாழ்வில் பார்த்த சிறந்த/பிடித்த திரைப்படங்களின் பட்டியலில் இதற்கு முதன்மையான இடம் உண்டு. நாவலில் 'கன்னி'யைப் போல.

'இப்போ நீங்க கேக்றது என்னோட குரல் இல்ல, என் மனசோட குரல். ஆறு வயசுல இருந்து நான் ஊமை ஆயிட்டேன். அதுக்கான காரணம் என்னனு எனக்கே தெரியாது. ஆனா நான் ஊமையா இருக்றேன்னு ஒரு நாளும் நெனச்சது இல்ல. ஏன்னா என்கிட்டே பியானோ இருக்கு'. இவ்வாறு படம் தொடங்குகின்றது.

கணவனை இழந்த ஏடாவிற்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை - ஃப்ளோரா. பிறருடன் பேசுவதற்கு சைகை மொழி. அதை பிறர்க்கு மொழிபெயர்ப்பவளாக ஃப்ளோரா. ஏடாவிற்கு இருப்பத்தைந்து வயது இருக்கலாம். மேலே சொன்ன வசனம் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியின் குரலில் வருகிறது. அது ஒரு பெண்ணின் குரலாக அல்லாமல் ஒரு சிறுமியின் குரலில் தொடங்குவதிலேயே உச்சம் தொடுகிறார் இயக்குனர். ஏடா ஆறு வயதில் தான் பேசிய கடைசி குரலாக இருக்கலாம். நினைவிலிருக்கும் தன் குரல்.
இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பதை பிற்பாடு அறிந்தேன்.

Jane Campion is a New Zealand screenwriter, producer, and director. Campion is the second of four women ever nominated for the Academy Award for Best Director and is also the first female filmmaker in history to receive the Palme d'Or, which she received for directing the acclaimed film The Piano (1993), for which she also won the Academy Award for Best Original Screenplay – Wiki.

இசையை உணர முடியுமேயன்றி யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஊமைகளின் மொழியும் அப்படித்தான். வாய் பேச முடியாத ஏடா(ADA), இசையின் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். பேச்சு அவமதிக்கப்படுவதைக் கூட ஏற்றுக்கொள்பவர்கள், தன் உணர்வு சிறிதும் சீண்டப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். பெரும்பாலும் ஒருவரின் உணர்வை அலட்சியம் செய்பவர்கள், அந்த உணர்வை புரிந்துகொள்ளாதவர்களாகவோ அல்லது  புரிந்துகொள்வதற்கு அவசியம் இல்லை என்றெண்ணுபவர்களாகவோ இருப்பர். இங்கே ஏடாவின் மொழி இசை - பியானோ. அவளைச் சுற்றியிருப்பவர்கள் இவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவா போகிறார்கள்?

வாய்ப்பமையும் போது இப்படம் பற்றி விரிவாக எழுத அவா. உங்களைப் பார்க்கத் தூண்டுவதற்காக இக்குட்டி அறிமுகம்.

- த.ராஜன்