Monday 2 November 2015

காதலின் துயரம் - கதே

இலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு நிலைகளைக் கடந்த போதும் அதன் சுகம் - சோகம் இன்றும் என்றும் அதே நிலைதானோ என்றும் தோன்றுகிறது.

சில அற்புதமான புத்தகங்களின் அறிமுகம் கிடைத்த அனுபவமெல்லாம் விசித்திரமானது. ‘கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்’ என்னும் மொபைல் கேமின் மூலம் அறிமுகமான நண்பரின் பரிந்துரையில் தான் 'கன்னி' வாசித்தேன். 'கன்னி' ஓர் அற்புதம். அப்படி ஓர் அற்புதத்தை பரிந்துரைத்த அவரின் மற்றொரு பரிந்துரை தான் 'கதேயின் காதலின் துயரம்'. காதலை நேசிக்கும் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

நாவல் வாசித்து முடித்து முன்னுரை வாசித்தால் ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம். இது வெளியான ஆண்டு 1774. இந்தக் குறுநாவல் ஜெர்மன் மொழியின் நவீன புனைகதை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதே இந்த நாவலை எழுதியபோது அவருடைய வயது 24. மேலும் பல ஆச்சரியங்களைக் இங்கு கூறாமல் விட்டுவிடுறேன். முன்னுரை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

கிரேக்க துன்பியல் நாடகத்தின் சாயலைக் கொண்ட இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் இளமையின் துடிப்பும் வாழ்வின் புதிர்வழிகளில் மாட்டிக்கொண்ட திகைப்பும் காதலின் பித்தும் அது விளைவிக்கும் தனிமையின் துயரமும் வெகு இயல்பாகவும் கூராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது - எம்.கோபாலகிருஷ்ணன்.

கடவுளும் என் தாய் தந்தையரும் எனக்கு உயிரையும் உடலையும் அளித்தனர் எனில் என் வாழ்வை எனக்கு அளித்தவர் கதே. நான் மட்டுமல்ல, தன்னைத் தொட்டவர் எவருடைய வாழ்க்கையையும் பொன்னாக மாற்றாமல் விட்டதில்லை இந்த இரஸவாதி. இந்த நாவலை எழுதிய உடன் உலகப்புகழை எய்துகிறார். ஐரோப்பியா முழுவதும் மனித மனங்களெல்லாம் தீப்பற்றி எறிகிறது. வாழ்ந்தால் வெர்தரைப் போல வாழ வேண்டும் என்று ஐரோப்பிய இளைஞர்களெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தை ஓர் இலட்சிய புருஷனாக கனவு கண்டனர். அதே போல் யுவதிகளெல்லாம் வெர்தர் போன்ற ஒரு லட்சியக் காதலன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்கித் தவித்தனர் - இரா.குப்புசாமி.

இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான் – எமர்சன்.

நாவலில் முதல் நாற்பது பக்கங்களில் நான் ரசித்த சில பத்திகளை இங்கே தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.

மனித ஜீவன்களிலேயே மிக அழகான ஒருத்தியை நான் கண்டேன். எப்படி என்று சரியாக உனக்குச் சொல்வது அவ்வளவு சுலபமானதில்லை. நான் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே அதைத் தெளிவாகச் சித்தரிப்பது சாத்தியமில்லை.

தேவதை என்றவுடனேயே சொர்க்கத்திலிருக்கும் அவனது மனைவியைப் பற்றிச் சொல்கிறார்கள். அவனுக்கு அப்படியொருத்தி இருக்கிறாளா? இருந்துவிட்டுப் போகட்டும். இவள் எவ்வளவு அழகானவள் என்றோ ஏன் அத்தனை நேர்த்தி மிக்கவள் என்றோ என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிடுமளவு அழகானவள் என்று மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியம்.

oOo

பேரன்பும் மனஉறுதியும் உள்ளவள். பரபரப்பான இந்த உலகில் ஆச்சரியமூட்டும் அமைதியும் எளிமையும் கொண்டவள்.

அவளைப் பற்றிய பலவீனமான இந்த எல்லாச் சொற்களும் அவளுடைய உண்மையான இயல்பின் சிறு சாரத்தையும் சொல்ல இயலாத வெற்று உளறல்களே.

oOo

அவளது தன்மையிலும் தோற்றத்திலும் குரலிலும் என் முழு மனமும் ஒன்றியிருக்க நான் அவளுக்கு சம்பிரதாயமான பாராட்டுகளைத் தெரிவித்தேன். அவள் தனது கையுறைகளையும் விசிறியையும் எடுத்து வர அறைக்குள் சென்ற சொற்ப நேரம் ஆச்சரியத்திலிருந்து நான் விடுபட உதவியது.

oOo

இங்கே எப்படி நான் வந்தேன், மலை உச்சியில் நின்றபடி அழகான பள்ளத்தாக்கை எப்படி ரசித்திருக்கிறேன், இங்கே சுற்றியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னை எப்படி வசீகரத்துள்ளது என்பதெல்லாம் பெரும் ஆச்சரியம்தான். அதோ அங்கே அந்தக் குறுங்காடு. நீ அதன் அடர்நிழலில் அமிழ்ந்துவிட முடியுமா? மலைத்தொடர்களும் நெருக்கமான பள்ளத்தாக்குகளும்! அவற்றில் என்னை நான் தொலைத்துவிட முடியுமா? அங்கும் இங்குமாய் நான் தவித்தலைகிறேன். எனக்கு இப்போது என்ன வேண்டுமென்றே தெரியவில்லை.

oOo

நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவனுக்கு லோதே என்னமாதிரி தோன்றுவாள் என்பதை, நோய்ப் படுக்கையில் வாடிக் கிடக்கும் பலரையும்விட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய பாவப்பட்ட இதயத்தால் உணரமுடிந்தது.

oOo

திரும்பி வரும் வழியில் இப்படி எல்லா விஷயத்திலும் தேவைக்கதிகமாக ஈடுபாடு காட்டுவதைச் சொல்லி கடுமையாகத் திட்டினாள். இப்படி நடந்துகொள்வது அழிவிலேயே கொண்டுபோய்விடும் என்றும் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தாள். ஓ என் தேவதையே! உனக்காக நான் உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

oOo

உண்மையில் சொல்கிறேன், வில்ஹெம், ஞானஸ்நானத்தின் போது கூட அவ்வளவு புனிதத்துவத்தை நான் உணர்ந்ததில்லை. லோதே மேலே வந்தபோது தேசத்தின் பாவங்களையெல்லாம் புனித நீரினால் கழுவிப் போக்கிய ஒரு தேவனின் காலில் விழுவதுபோல அவளது காலில் விழுந்துவிட விரும்பினேன்.

oOo

லோதேவின் பார்வையை நான் யாசித்து நின்றேன். அய்யோ! அந்தக் கண்கள் இங்கும் அங்குமாய் எதை எதையோ பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவளை மட்டுமே பார்த்தவாறு லயித்து நிற்கிற என் மீது அவளது பார்வை படவில்லை. என் இதயம் அவளுக்கு ஆயிரம் முறையாவது கையசைத்திருக்கும். ஆனால் அவள் என்னைப் பார்க்கவேயில்லை. வண்டி புறப்பட்டு ஓட என் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் அவளையே பார்த்திருந்தேன். அவள் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அவளது தலையலங்காரம் ஜன்னலுக்கு வெளியே தெரிந்ததைப் பார்த்தேன். ஓ! அவள் என்னைத்தான் பார்க்கிறாளா? அப்படித்தானா என்று நிச்சயமாய் சொல்ல முடியாமல்தான் நான் தவித்து நின்றேன். அவள் என்னைத்தான் பார்த்தாள் என்று நினைத்துக்கொள்வதுதான் ஒரே ஆறுதல். இருக்கலாம். இன்றைய இரவு நல்லிரவாக அமையட்டும். நான் எவ்வளவு குழந்தைத்தனமாயிருக்கிறேன்?

oOo

அவளை நான் எப்படி விரும்புகிறேன் என்று யாராவது கேட்கும்போது, விரும்புவது என்கிற அந்த வார்த்தையையே நான் வெறுக்கிறேன். லோதே என்ற தேவதையால் அனுக்கிரகிக்கப்பட்ட இதயம் கொண்ட ஒருவன் அவளை விரும்புகிறேன் என்று சாதாரணமாய் சொல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும். விரும்புவதாம்! முன்பு ஒரு நாள் யாரோ ஒருவன் கவிஞர் ஓசியானை நான் எந்த அளவு விரும்புகிறேன் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

oOo

இல்லையில்லை, என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளவில்லை. கரிய அவள் கண்களில் என் மீதும், என்னுடைய எதிர்காலத்தின் மீதும் ஒரு அக்கறை இருப்பதை என்னால் அறிய முடிகிறது. அவள் என்னைக் காதலிக்கிறாள். ஓ! அவள் என்னைக் காதலிக்கிறாள்.  (இந்த விஷயத்தில் என்னுடைய இதயத்தை நான் நன்றாகவே நம்பலாம்) இந்தச் சொற்களில் உள்ள சொர்க்க சுகத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறதா?

என்னை அவள் காதலிக்கிறாள்! என்று நினைக்கும்போதே என் கண்ணெதிரில் எனக்கு நானே எத்தனை மேலானவனாய்த் தெரிகிறேன். ஒருவேளை நான் இப்படி உணர்ச்சிவசப்படுவதை எண்ணி என் மீது நீ பரிதாபப்படலாம். அவள் என்னைக் காதலக்கத் தொடங்கியதிலிருந்து என்னை நானே ஆராதிக்கத் தொடங்கவிட்டேன்.

oOo

எனக்கு அவள் புனிதமானவள். அவள் எதிரில் ஆசைகளனைத்தும் அடங்கிப் போகின்றன. அவளுடன் இருக்கும்போது நான் என்ன நினைக்கிறேன் என்பதே எனக்குத் தெரிவதில்லை. என்னவோ என் இதயம் நரம்புகள் அனைத்திலும் தத்தளிப்பது போலவே இருக்கும்.

oOo

காதலற்ற இதயங்களுக்கு இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்க முடியம், வில்ஹெம்?

oOo

தவிர்க்கமுடியாத ஒரு வேலையினால் இன்று என்னால் லோதேவைப் போய் பார்க்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும்? இன்று அவளிடம் எனக்குப் பதிலாக யாராவது ஒருவர் சென்று என்னை நினைவுபடுத்தட்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய வேலைக்காரனை அனுப்பினேன். அவன் திரும்பி வருவதற்குள்தான் நான் எப்படித் தவித்துப் போனேன்? மறுபடி அவனைப் பாரக்கத்தான் நான் எத்தனை ஆசையாய் இருந்தேன்? அவனை அணைத்துக்கொள்ள சற்றும் கூச்சப்படாதவனாய் இருந்திருந்தால் நான் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டிருப்பேன்.

பொலோனா என்ற ஒரு கல்லைப் பற்றிச் சொல்வார்கள். பகலில் அதை சூரிய ஒளியில் வைத்துவிட்டால் சூரியக் கதிர்களை அது உள்வாங்கிக் கொள்ளுமாம். இரவானதும் அது கதிர்களைத் துப்பி ஒளி கொடுக்குமாம். அந்த வேலைக்காரனும் அப்படித்தான். அவனது முகத்திலும், கன்னங்களிலும், கோட்டுப் பொத்தான்களின் மீதும், சட்டையின் கழுத்துப் பட்டையின் மீதும் அவளது கண்கள் வர்ஷித்த உணர்ச்சிகளனைத்துமே மிகப் புனிதமானவை. விலை மதிப்பற்றவை. அந்த கணத்தில் அந்த வேலைக்காரனுக்கு ஆயிரம் பொன் தந்து யாராவது கேட்டிருந்தாலும் நான் அவனை விட்டுத் தந்திருக்கமாட்டேன். அவன் வந்து என் முன்னால் நின்றதுமே நான் அத்தனை சந்தோஷப்பட்டேன். இதைக் கேட்டு நீ சிரிக்காமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக. இவை எல்லாமே நம்மை மகிழ்விக்கும் சலனச் சித்திரங்கள்தானா வில்ஹெம்?

oOo

அவளை அடிக்கடி பார்க்கக்கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடிந்தால்தானே! ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆசைக்கு நான் அடிபணிந்துவிடுகிறேன். உடனடியாகவே இன்றோடு சரி, நாளைக்கு அவளைப் பார்க்கக்கூடாது என்று மிக சிரத்தையாக உறுதியெடுத்துக்கொள்வேன். மறுநாள் விடிய வேண்டியதுதான். உடனேயே ஆவலைத் தடுக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, எனக்குத் தெரியாமலேயே, அவளிடம் போய் நின்றுவிடுவேன். முன்தினம் மாலையில் அவள் 'நாளைக்கு நீங்கள் வருவீர்கள்தானே?' என்று கேட்டிருப்பாள் (அப்படிக் கேட்டபின் யார்தான் வராமல் இருக்க முடியும்?) அல்லது அந்த நாள் மிக ரம்மியமாக அமைந்துவிட நான் வாஹெம்முக்கு நடக்கத் தொடங்கிவிடுவேன். அங்கிருந்து பிறகு அவள் இருக்குமிடத்திற்குச் செல்ல இன்னும் அரை மணித் தொலைவுதானே. அவளது பிரசன்னத்திற்கு வெகு அருகில் எப்போதுமே நான் இருப்பதால் நொடியில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவேன். என்னுடைய பாட்டி மந்திர மலையைப் பற்றி ஒரு கதை சொல்லுவாள். அந்த மலையை மிக நெருங்கி வரும் கப்பல்கள் எல்லாமே தமது இருப்புப்பாளங்களையும், ஆணிகளையும் இழந்து மலையை நோக்கி இழுக்கப்பட்டு பரிதாபமாக நொறுங்கி உடைந்து மூழ்கிவிடுமாம்.

oOo

இந்நாவல் ஒரு பொக்கிஷம். கடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் தூசி படிந்த கடைசி சில பிரதிகளே இருந்தன. உங்கள் கண்ணில் எங்கேனும் பட்டால் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழினி பதிப்பகம் | விலை ரூ 60/-

- த.ராஜன்

1 comment:

  1. குட்டிப...
    பெண்... புதையலடா!!!!

    ReplyDelete