இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வேறொருவரை மனதில் வைத்து எழுதப்பட்டது. உங்களை நினைவுபடுத்தினால் அது எதேர்ச்சையே. நிர்வாகம் பொறுப்பல்ல
oOo
புத்தகம் இரவல் தருவதிலொன்றும் எனக்கு தயக்கமிருந்ததில்லை. புத்தகம் வாசிப்பவர்களே குறைவு. ஆர்வமாக நம்மிடம் கேட்கும் பொழுது அதை மறுப்பது பெரும்பாவம் தான். ஆனால் வாங்கிச் சென்றவர்களின் செயலோ எல்லையற்ற கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைக்கக் கூடியதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. புத்தகத்தின் முனை மடிப்பது, ஆங்காங்கே கிறுக்குவது, புத்தகத்தில் தூசி பூசித் தருவது, பல் குத்த காகிதம் கிழிப்பது என புத்தகம் மீது நடத்தும் வன்முறைக்கு அளவே இல்லை. இதை அவர்கள் வன்முறை என்று அறியாதது தான் வருத்தம்.
இசையைப் பெரிதும் மதிக்கும் இசைக்கலைஞர்கள், அவர்களின் இசைக்கருவியை இசைக்கத் தெரியாதவர்களைத் தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு புத்தகமும் அப்படித் தான். ஆக ‘வாழ்கையில் பணம் யாரிடமும் கடனாக வாங்கக் கூடாதது. புத்தகம் கடனாகக் கொடுக்கக் கூடாதது’ எனும் லதாமகனின் பொன்மொழியைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தேன்.
இருப்பினும் ஆசையாகக் கேட்பவர்களிடம் மறுக்க முடிவதில்லை. பல்வேறு நிபந்தனைகள் விதித்த பின்பே புத்தகம் வாசிக்கத் தருகிறேன். யாரும் கடைபிடிப்பதாக இல்லை. சிலரோ புத்தகத்தைத் திருப்பித் தருவதே இல்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் நட்பிற்குள் ஏற்பட்ட விரிசல்களில் முக்கிய பங்கு வகித்தது பணம் தான். சில நேரங்களில் கொடுக்க முடிகின்றது. பல நேரங்களில் முடிந்ததில்லை. ஒருவரிடம் வாங்கியதை எப்படி திருப்பிக் கொடுக்காமல் இருக்க முடிகின்றது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது பணமாக இருக்கட்டும் அல்லது ஒன்றுக்கும் உதவாததாகக் கூட இருக்கட்டும்.
காதலிக்கு பரிசளிப்பதற்காக மதிமாறன் ஆயிரம் ரூபாய் வேண்டுமென்றான். ஏடிஎம்மில் நுழையவும் ஆயிரத்தி ஐநூறாக கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான். கொடுத்து நான்கு வருடங்கள் ஆகின்றது இன்னும் வரவில்லை. வினோத் மூவாயிரம் வாங்கி இரண்டாயிரம் மட்டும் திருப்பிக்கொடுத்தான். ஏழு முறை கேட்ட பின்பு தான் இதுவும் கிடைத்தது. ‘இவ்வளவு சம்பாதிக்ற. மூவாயிரத்துக்கு இப்படி அழுவுற’ என்று வியாக்யானம் வேறு. வசந்த் இருபதாயிரம் வாங்கி பத்தொன்பதாயிரம் கொடுத்தான். அத்தை மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கல்லூரில் சேர்க்க ஏழாயிரம் வேண்டுமென்றார் அத்தை. ஹோகயா. மகளின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க அண்ணன் ஒருவனுக்கு ஐநூறு. முருகன் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்ததால் அவன் வாங்கிய சோனி வால்க்மேன்க்கு ஐயாயிரம் எனது கார்டில் உருவப்பட்டது. இரண்டே மாதத்தில் தருகிறேன் என்று லக்ஷ்மி வாங்கிய மூவாயிரம் ரூபாயை மூன்று ஆண்டுகளில் முப்பது முறை கேட்டதால் எனது அழைப்பை தற்போது ஏற்பதில்லை. எம்மீ படிக்கிறேன் என்று சத்யபாமாவில் சேர்ந்து முப்பதாயிரம் தண்டம் கட்டினேன். சில பல சில்லறைக் கடனுதவி.
இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். அதற்குள் வீடு கட்ட வேண்டுமென அப்பாவின் ஆசை. அனுமானித்ததை விட கூடுதல் செலவு தற்போது. கடன் வாங்குவதில் சிறிதும் உடன்பாடில்லாத நான் இரண்டு லட்சம் ரூபாய் நண்பனிடம் வாங்கியாகிவிட்டது. இன்னும் இரண்டு லட்சத்திற்கு கைக்கு மீறி செலவிருக்கின்றது. என் திருமணத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று பலவாறு கற்பனை செய்த அனேக விஷயங்களைக் கைவிட்டாகிவிட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க ‘இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ’ என அடி வயித்தில் பீதி கிளம்பத் தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்ப நான் என்ன செய்ய?
oOo
‘இதுவரைக்கும் யாரையுமே லவ் பண்ணதில்லையா’ என்பவர்களிடம் ‘அதுலலாம் உடன்பாடு இல்லங்க – லவ்வுனாலே ப்ராப்ளம் தான் – யாருனே தெரியாத பொண்ண பாத்து பேசி கல்யாணம் பண்றதுல ஒரு கிக்கு’ இப்படி பலவாறு பிட்டு போடுவது வழக்கம். ஆனால் யாருமே என்னை ஏறெடுத்துப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை.
மே 1, 2015 அன்று பெண் பார்த்து நவம்பர் 22, 2015 கல்யாணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த ஐந்து மாதங்களில் எத்தனைப் பெண்கள்! அப்பப்ப்பா! காலைத் தேநீர் வேளையில் பார்க்கும் பச்சைப் பெண் (முதல் சந்திப்பில் பச்சை சுடிதார் அணிந்திருந்தாள்) – நான்காவது மாடியின் கண்ணு (செம்ம கண்ணு) பொண்ணு - பக்கத்துக்கு ப்ளாக்கில் இருந்து வரும் லிப்ஸ்டிக் பொண்ணு – மாலை தேநீர் வேளையில் பார்க்கும் சின் (Chin) பொண்ணு – என் ஆளுடன் தொலைபேசுகையில் பார்க்கும் க்யூட் பொண்ணு – ஸ்கூட்டர் பொண்ணு – தெத்துப்பல் பொண்ணு - நைன்டி பைவ் மார்க் பொண்ணு – சரவணபவனின் தோசைப் (தோசையை இரண்டு கைகளாலும் பிய்த்து சாப்பிடுவதில் கொள்ளை அழகு) பொண்ணு – பெயர் வைக்காத சிறு அழகிகள். இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள் என்பது தான் விஷயம். இப்ப நான் என்ன செய்ய?
- த.ராஜன்
No comments:
Post a Comment