Tuesday 25 November 2014

கருக்கலைப்பு

பெண்களைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும் போதும் தோன்றுவதால் எனக்கு வண்ணத்துப்பூச்சிகளையும் பிடிக்கும். சிறு வயதில் எட்ட நின்று அதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பேன். ஒரு நாள் (அன்று தான் நான் வயதுக்கு வந்தேன் என்று நினைக்கிறேன்) திடீரென ஒரு வண்ணத்துப்பூச்சி பயந்து பயந்து காற்றில் மேலும் கீழும் ஆடியவாறே என் அருகே வந்து இதயத்தின் மீது அமர்ந்து பின் நுகர்ந்து பார்த்துவிட்டு சலிப்புடன் சென்றது. அந்த நாள் முதல் அது வருவதும் நுகர்ந்து பார்த்துவிட்டுச் செல்வதும் தினம் தினம் நடந்தது.

இதுவரை வண்ணத்துப்பூச்சியை ஒரு பூவின் மீது அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன் - அபூர்வமாக வேறொரு வண்ணத்துப்பூச்சியின் மீது அமர்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு வேளை என் இதயத்தை பூ என்று நினைத்துவிட்டதோ? இல்லை வேறொரு வண்ணத்துப்பூச்சி என்று நினைத்துவிட்டதோ?

பின்பொருநாள் அந்த அதிசயம் நடந்தது.

காற்றில் மிதந்து வந்த வண்ணத்துப்பூச்சி அதிசயமாய் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு இதயத்தின் மீது அமர்ந்து தேன் பருக ஆரம்பித்தது. அன்று தான் அங்கே தேன் சுரந்திருக்கின்றது. அன்று தான் அவள் என் இதயத்தில் குடியேறியிருந்தாள்.

அன்று முதல் இரத்தத்தை தேனாகக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை அது தேன் பருகும் போதும் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் பரவச நிலையில் இருந்தேன். நாளாக நாளாக கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தது. தேன் பருகிய உற்சாகத்தில் என் முகத்தில் வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் சிறகடித்து என் முகமும் வண்ணமயமானதாக உணர்ந்தேன். நானும் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறிக்கொண்டிருந்தேன். சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருந்தது. சில நேரங்களில் அது சுமையாகத் தோன்றினாலும் கூட எனக்கு பிடித்திருந்தது. பிரசவத்தில் தாயின் வலியைப் போல.

என் இதயம் இனி நிரந்தரமாக அவளுக்குத் தான் என்று நினைத்திருந்தேன். பட்டாவை அவள் பெயருக்கெல்லாம் மாற்ற எண்ணியிருந்தேன். என்ன பிரச்சனை என்று புரியவில்லை. கேட்டதற்கு கழிப்பறை சரியில்லை என ஏதோ சொல்லி காலி செய்து கிளம்பிவிட்டாள்.

வாடகைக்கு கிடைக்குமா என சிலர் இப்போது கேட்கிறார்கள். வீட்டிலோ வேறொருத்தியின் பெயருக்கு பட்டா போடப் பார்க்கிறார்கள்.

வண்ணத்துப்பூச்சிகள் இப்போது நுகர்ந்து பார்க்கக் கூட வருவதில்லை.


- த.ராஜன்

Wednesday 15 October 2014

ஏ ஆர் ரஹ்மான் தோசை

நயன்தாரா தான் முதலில் என்னைப் பார்த்து சொன்னது - என் முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக முடி அடர்த்தியாக இருந்தது. அவள் சொன்ன பிறகு தான் அதை நான் கவனிக்கிறேன். திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

"எனக்கு இப்படி இருந்தா பிடிக்காதுன்னு தெரியும்ல? அப்புறம் ஏன் இந்த மாதிரி ஸ்டைல்ல தாடி வைக்கிற?"

"இல்லடா செல்லம். எனக்கே இப்படி இருக்றது தெரியாது. நீ சொன்ன அப்புறம் தான் நானே கவனிக்றேன்"

oOo

கல்யாண மண்டபம் போன்ற நீளமான கட்டிடத்தின் பக்கவாட்டில் நானும் என் பள்ளி நண்பன் சுதர்சனும் இருந்தோம். அந்தக் கட்டிடத்தின் பக்கவாட்டில் சீரான இடைவெளியில் வேம்பு நட்டுவைத்திருந்தார்கள். ஒரு வேப்பமரத்தின் அடியில் அவன் தோசை சுட்டுக் கொண்டிருந்தான்.

"என்ன தோசைடா வேணும்?" என்றான்.

"ஏ ஆர் ரஹ்மான் தோசை சுட்டு வைடா. எனக்கு ரொம்ப அவசரம். சுச்சூ போய்ட்டு வரேன்"

அந்தக் கட்டிடத்தின் கடைக்கோடியில் ஏதோ ஒரு வங்கியின் ஏடிம் இருந்தது. அதற்குள் இரண்டு பெண்கள் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் எடுத்துக் கொண்டிருந்தார் மற்றொருவர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் என்னைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, பணம் எடுக்க வரிசையில் நிற்பது போல் நின்று அவசரமாகக் கழித்தேன். இரு கைகளையும் பேண்ட்டில் துடைத்துவிட்டு தோசை சாப்பிட வந்தேன். அதற்குள் அவன் இரண்டு தோசை சுட்டு வைத்திருந்தான். ஒரு ஏ ஆர் ரஹ்மான் தோசை, ஒரு யுவன் ஷங்கர் ராஜா தோசை.

"டேய் வெண்ண. எனக்கு தான் யுவன் ஷங்கர் ராஜா தோசை பிடிக்காதுல? அப்புறம் ஏன்டா?" என்றேன் கோபமாக.

"புதுசா ட்ரை பண்ணிருக்கேன்டா"

யுவன் ஷங்கர் ராஜா தோசையை சாப்பிட ஆரம்பித்தேன். ராம் படத்திலிருந்து ஆராரிராரோ பாடல் ஒலித்தது.

"டேய் இது ஏற்கனவே வந்த பாட்டு தானடா?"

“அதே மாதிரி இல்லாம, கொஞ்சம் எஃபெக்ட்ஸ்லாம் சேத்துருக்கேன். சாப்ட்டு பாரு”

கொஞ்சம் சட்னியை நன்றாக தோய்த்து சாப்பிடும் போது, புதிதாக சேர்த்திருந்த எஃபெக்ட்ஸ் எல்லாம் தெளிவாகக் கேட்டது.

oOo

அதே இடத்தில் இப்போது அடுப்பெல்லாம் இல்லை. என் முன்னே என்னுடன் பணிபுரியும் மைத்ரேயா வந்து நின்றார். அல்லி அர்ஜூன், ட்ராகன் போன்று நடித்த படம் ஒன்று வெளிவந்திருப்பதாக சொன்னார். அதைக் கேட்டு ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும் போதே என் முன்னே ட்ராகன் அல்லி அர்ஜூன் வந்து நின்றார்.

வாயெல்லாம் உப்பி, உடல் முழுக்க கருப்பு ரோமங்களாக இருந்தது.

"மைத்ரேயா, ட்ராகன் மாதிரி இல்லயே. குரங்கு மாதிரில இருக்கு" என்றேன்.

அல்லி அர்ஜூன் உடனே ட்ராகன் போல ஓடிக் காண்பித்தார். குரங்கு போன்றே இருந்தது.

அடுத்த நொடியில் ஸ்கிரீனில் அல்லி அர்ஜூன் இல்லை. நானும் மைத்ரேயாவும் மட்டும் தான்.

oOo

"மைத்ரேயா, அப்படியே அச்சு அசல் குரங்கு மாதிரி தான் இருக்குது" என்று கூறி அதே ஸ்டைலில் பவ்லிங் போட்டுக் காண்பித்தேன்.

நான் பெளவ்லிங் போட்டுக் காண்பிக்கவும் அங்கிருந்து இருபது பேர் எனக்கும் 'பெளவ்லிங் போடு' என்று பேட்டைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்கள்.

ஒருவனுக்கு பெளவ்லிங் போடவும், அவன் அடித்த பந்து முள் வேலியைத் தாண்டி விழுந்தது. அதை எடுப்பதற்கு செல்லவும் பரம்ஸ் அடித்த பந்தும் அதே முள் வேலியைத் தாண்டி விழுந்தது.

பரம்ஸ் "ராஜன், அந்த பந்தையும் எடுத்து போட்ரு" என்றார்.

நான் செருப்பேதும் அணிந்திருக்கவில்லை. "யாராவது செருப்பு கொடுங்களேன், ஒரே முள்ளா இருக்கு" என்றேன்.

யாரோ ஒருவன் "இத யூஸ் பண்ணிக்கோ" என்று தூக்கி வீசினான். ஒன்று பாரகன் செருப்பு, இன்னொன்று வேறு ஏதோ இருபது ரூபாய் செருப்பு. இரண்டும் பல வருடங்கள் உபயோகித்து ஊக்கினால் தைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதைப் போட்டுக்கொண்டு முள் வேலியைத் தாண்டி பந்தை எடுப்பதற்காகச் சென்றேன். சாக்கடையில் செருப்பு மாட்டிக் கொண்டு பிய்ந்து விடுமோ என்று நினைத்தேன். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. ஒரு பந்தைக் கண்டு கொண்டேன். ஆனால் முட்டை போண்டாவில் முட்டையைச் சுற்றி இருக்கும் கடலை மாவைப் போல பந்தைச் சுற்றி மலம் இருந்தது. யக். முகத்தை அஷ்ட கோணத்தில் சுழித்துக் கொண்டு, இரண்டு விரல்களால் தூக்கிக் காட்டி, "இத இனி யூஸ் பண்ண முடியாது" என்று சொல்லிவிட்டு இன்னொரு பந்தை எடுக்கச் சென்றேன்.

அதை எடுக்கச் செல்கையில் கால் வழுக்கி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தேன். விழுந்து புரண்டேன். விழுந்து புரண்ட பின் தான் அது சாக்கடை அல்ல மலம் என்று புரிந்தது. பின்புறம், புறங்கை எல்லாம் மலம். வாயின் ஓரத்திலும். துப்பியபடியே அருகே இருந்த கதவைத் திறந்தேன். இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். "என்னப்பா என்னாச்சு?" என்றார்கள்.

"வாயெல்லாம் ஆயிடுச்சுணே. கழுவணும்ணே” என்றேன் கண்களில் நீர் முட்ட.

"இந்த பக்கம் பைப் இருக்கு பாருப்பா. கழுவிக்கோ" என்றார்.

அவர் சுட்டிய இடத்திலிருந்த பைப்பைத் திறக்கவும் திடுக்கிட்டு விழித்தேன். மணி காலை 5.08.

தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. ஏனோ நீர் அருந்த மனம் வரவில்லை.

- .ராஜன்


எனக்கு கனவு வராத நாட்களே கிடையாது. அனேக பேருக்கு அது ஏனோ நினைவில் இருப்பதில்லை. அவ்வப்போது நான் கண்ட கனவை நண்பர்களிடம் சொல்லும் போது சுவாரசியமாக இருப்பதாகத் தோன்றியது. கனவு பற்றிய எண்ணற்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன தான் பல்வேறு விளக்கம் கொடுத்தாலும் கனவுலகம் விசித்திரமானது தான். சுவாரசியமான பல கனவுகளைத் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன் இந்தப் பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து. பிகு: இந்தப் பதிவில்(கனவில்) நான் குறிப்பிட்ட எதுவும் கற்பனையல்லை. அனைத்துமே கனவில் கண்டது.

Saturday 11 October 2014

பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர்

கடல் சார்ந்த நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜோ டி குரூஸின் 'ஆழி சூழ் உலகு', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்', ஜான் பான்வில்லின் 'கடல்' மற்றும் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' வாசித்து முடித்தாகிவிட்டது. இந்த நான்கு நாவல்களிலும் துயரம் கொட்டிக் கிடப்பதால் எனக்குள்ளும் தொடர்ந்து ஏதோ பாரம் அழுத்துவது போலவே இருந்தது. அதனால் ஒரு மாறுதலுக்காக வைக்கம் முகமது பஷீரின் 'பாத்துமாவின் ஆடு' நாவலை எடுத்தேன். இது ஒரு 100 பக்க குறுநாவல் என்பது தான் ஒரே காரணமே தவிர, இது ஒரு நகைச்சுவை சார்ந்த நாவல் என்பது முன்னரே தெரியாது.

இந்த நாவல் வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். நான்கைந்து தம்பி தங்கைகள் அவர்களின் ஏழெட்டு குழந்தைகள் என ஒரு பெரும் கூட்டமே ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறது. கூடவே கோழிகள், அகதிப் பூனைகள் மற்றும் அவர் தங்கை பாத்துமாவின் ஆடு. தேசாந்திரியாகத் திரிந்து வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது நடைபெறும் ஒரு சில மாதங்களின் நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வுடன் இந்நாவலில் சித்தரித்திருக்கிறார்.

பஷீரின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார். அவரது தங்கை பாத்துமாவின் ஆடு, அவர் எழுதிய 'பால்யகால சகி' மற்றும் 'சப்தங்கள்' நாவலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அது வரை சும்மா நின்று கொண்டிருந்தவர், அவர் படுக்கையிலிருக்கும் போர்வையை சாப்பிட ஆரம்பிக்கவும் "அத சாப்பிடாத. எங்கிட்ட வேற பிரதி இல்ல. நான் அப்புறமா என்னோட 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' நாவலைத் தரேன்" என்று சொல்வார். சொன்னது போல பின்னொருநாளில் அந்த நாவலை உண்ணவும் கொடுக்கிறார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் அவரது வீட்டைக் கடக்கும் போது அவரைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு செல்வர். தன்னிடம் வந்து குழந்தைகள் ஆட்டோகிராப் வாங்க ஆசைப்படுகிறார்கள் என தனக்குள்ளாக அவர் கற்பனை செய்து கொள்வார். அதே போல் ஒரு நாள் அவரை நோக்கி சிறுமிகள் வரவும் இவரும் ஆட்டோகிராப் தருவதற்கு ஆயத்தமாவார். குழந்தைகளோ அவர் வீட்டிலிருக்கும் சம்பங்காய்களை வாங்குவதற்காக வந்திருப்பார்கள்.

இந்த இடங்களிலெல்லாம் பஷீரின் நையாண்டி அல்டிமேட்.

ஆட்டிற்கு புத்தகத்தைத் தின்னக் கொடுக்கும் பஷீர், தன் போர்வையைத் தின்னத் தொடங்கும் போது பதறுகிறார் - எழுத்தாளரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் சிறுமிகள் - இது போல் பல காட்சிகளில் நாம் மனம் விட்டுச் சிரித்தாலும் அதில் ஒளிந்திருக்கும் சோகம் சொல்லி மாளாதது. நாவல் முழுவதும் அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் துயரம் சார்ந்த அம்சங்களே. இதே கதையை நான் எழுதியிருந்தால் ஒரு அழுகுணி நாவலாகவே இருந்திருக்கும். தன் துயரத்தின் உச்சத்தையும் நகைச்சுவையாக சித்தரிக்க முடிந்ததே இந்த நாவலின் வெற்றி என்று எனக்குத் தோன்றுகிறது.


வாசித்துப் பாருங்களேன். வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தில் எழுதி குளச்சல் மு யூசஃப்பின் அருமையான மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை: 90.

- த.ராஜன்

கடல்

கடலிற்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்குமென்று நினைக்கிறேன். கடலின் மீது எப்போதும் ஒரு வித மயக்கம். என்னுள் புதைந்து கிடைந்த கடலின் மீதான காதலைத் தட்டி எழுப்பியது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகு' நாவல். கடலின் மீதும் கடல் சார்ந்து வாழும் மீனவர்கள் மீதும் காதல் வயப்படச் செய்துவிட்டார் ஜோ டி குருஸ். கடல் சார்ந்த எல்லா நாவல்களையும் வாசித்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

நான் அறிந்த கடல் சார்ந்த நாவல்கள்.

கடலுக்கு அப்பால் - .சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - .சிங்காரம்
கடல்புரத்தில் - வண்ணநிலவன்
ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்
கொற்கை - ஜோ டி குருஸ்
கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
கடல் - ஜான் பான்வில்
கடல் புறாசாண்டில்யன்
தண்ணீர் தேசம்வைரமுத்து

என் குடும்பத்தில் ஐம்பது சதவிகிதம் கிறிஸ்தவர்களாகவும் ஐம்பது சதவிகிதம் இந்துவாகவும் இருப்பதால் இரண்டு மதங்களின் வழிபாட்டையும் ருசித்திருக்கிறேன். சிறு வயதில் வருடா வருடம் குடும்பத்தோடு உவரி செல்வது வழக்கம். பத்து பதினைந்து பேர் வேன் பிடித்து அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி வருவோம். திருநெல்வேலியிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் உவரியை அடையலாம். ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது. நாவலில் வரும் சர்ச்சையும் நல்ல தண்ணீர் கிணறையும் கதை மாந்தர்களின் குடும்பத்தையும் விவரிக்கும் போது நான் பார்த்து ரசித்த உவரியை மனதில் கற்பனை செய்து கொண்டேன்.



இது உவரியின் மெயின் சர்ச். மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெற்றெடுத்தவர்களால் கை விடப்பட்ட முதியோர்களை இங்கு அதிகம் பார்க்கலாம். ஆலயத்திற்கு இடது புறம், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கு அறைகள் கிடைக்கும். அதிகாலையில் எழுந்து ஃப்ரஷ்ஷாக மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவோம். கடலில் குத்தாட்டம் போட்டு விட்டு கோவிலின் பின்புறத்திலிருக்கும் நல்ல தண்ணீர் கிணற்றில் சென்று குளித்து வருவோம். இவையெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆன பின்பும் இன்றும் மனதில் அழியாச் சித்திரமாக இருக்கின்றது. இதையெல்லாம் நினைக்கும் போது மீண்டும் இனி எப்போது அங்கே செல்வோம் என்ற ஏக்கம் நெஞ்சை அழுத்துகின்றது. சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து சுற்றுலா செல்வதென்பது இந்த தலைமுறையில் சாத்தியமே இல்லை போலும்.


மேற்கண்ட படத்திலிருப்பது அதே உவரி ஆலயத்தின் அருகிலுள்ள மற்றுமொரு சர்ச். ஆன்ட்ரூ சர்ச் என்று கூகுள் சொல்கிறார். எனக்கு சரியாக நினைவில்லை. அந்தக் கோவிலிருந்து நடந்தே இங்கு சென்று விடலாம். இவ்வாறு நடந்து போகும் வேலையில் அங்கு வசிக்கும் மீனவ குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். வலை பின்னிக்கொண்டும், கூட்டமாக சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். இவர்கள் ஏனோ இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கின்றார்கள். அதனாலயே 'கடல்புரத்தில்' நாவல் வாசிக்கும் போதும் சரி, இப்போது 'ஆழி சூழ் உலகு' நாவல் வாசித்துக் கொண்டிருக்கும் போதும் சரி ஏற்கனவே சொன்னது போல் உவரியை மனதில் கற்பனை செய்து கொள்கிறேன்.



சிறியவர்களாகிய எங்களுக்கு ஆன்ட்ரூ சர்ச் பிடிப்பதில்லை. சிறுவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு 'நாங்க ஏரோ ப்ளேன் சர்ச்சுக்கு போறோம்' என்று தனியாக கழண்டுவிடுவோம். ஒவ்வொரு முறை உவரி வரும் போதும் இந்தக் கோவிலுக்குச் செல்வது அலாதியான இன்பம்.


இன்று காலை 'ஆழி சூழ் உலகு' நாவல் குறித்து சில பதிவுகளை வாசிக்கும் போது மயிர் கூச்செறியச் செய்யும் தகவல் ஒன்று  கிடைத்தது. ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது என்று சொன்னேன் அல்லவா? ஆமந்துறை என்பது ஒரு கற்பனைப் பெயராம். உண்மையான பெயர் உவரியாம்.

- த.ராஜன்

கன்னி – II


கடந்த வாரம் சேலம் சென்றிருந்தேன். அண்ணனின் மகனுக்குப் பிறந்தநாள் விழா. ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் அங்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் தொத்திக் கொண்டது. சென்னையில் கிடைக்காத புத்தகமா இங்கே கிடைக்கப் போகிறதென்று அண்ணியும் பெரியம்மாவும் அங்கே செல்வதைத் தடை செய்ய முயற்சி செய்தார்கள். அவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் நிற்பதே பரமசுகம். ஏற்கனவே வாசிக்காத பல புத்தகங்கள் இருப்பதால் இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கலாம் என்று சென்றேன்.

காலச்சுவடு பதிப்பகத்தில் தளவாய்சிங்கத்தின் முழுத் தொகுப்பும் 60% கழிவில் கிடைத்தது. அதையும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலையும் வாங்கிக் கொண்டு தமிழினி பதிப்பகத்தில் ஜெயமோகனின் ‘காடு’ நாவல் வாங்கச் சென்றேன். இது நான் திட்டமிட்டு வாங்கலாம் என்றிருந்த புத்தகம். ‘காடு’ நாவலின் அருகே சு.வேணுகோபாலின் ‘ஒரு துளித் துயரம்’ என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததால் அதையும் வாங்கிக் கொண்டு பில் போடச் சென்ற போது தான் எனக்கான இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

"ஒரு துளித் துயரம் வாசிச்சிருக்கீங்களா?" என்றார்.

"இல்ல சார், இந்த புக் பத்தி ஃப்ரண்ட் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்"

"அந்த புக்க எழுதினது நான் தான்"

"சார்ர்ர்ர்!"

எனது சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இதற்கு முன் அவர் புத்தகம் ஏதும் வாசித்திருந்தால் அதைப் பற்றி சிறிது நேரம் அவரோடு உரையாடியிருக்கலாம்.

அவரிடம் ‘ஒரு துளித் துயரம்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு "ஃப்ரான்சிஸ் கிருபாவோட ‘கன்னி’ நாவல் இப்போ எங்கயுமே கிடைக்கிறது இல்லையே? அடுத்த பதிப்பு போடலயா சார்?" என்றேன்.

"அடுத்த வருஷத்துல வந்துடும்னு நினைக்கிறேன்"

"சார், ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் இருந்தா கிடைக்குமா?"

அவரது மொபைலில் நம்பரைத் தேட ஆரம்பித்ததும் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. ரசித்து வாசித்த நாவலின் நாயகனிடம் பேசப் போகிறோம் என்ற குதூகலம்.

என் துரதிர்ஷ்டம் அவரிடம் கிருபாவின் எண் இல்லை. "இங்க காஷியர் ஒருத்தர் இருப்பார். சாப்பிட போய்ருக்கிறார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. கிடைக்கும்" என்றார்.

அவரது (சு.வேணுகோபால்) மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

வேறு சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்த பொழுது அந்தக் காஷியர் (தமிழினி பதிப்பகத்தின் உரிமையாளர் என்பதைப் பிற்பாடு தெரிந்து கொண்டேன்) இருந்தார்.

கடையில் அதிகக் கூட்டம் இருந்ததால் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அவர் பார்க்கும் பொழுது இன்முகத்துடன் இருக்கவேண்டுமென்றெண்ணியதால் சிரித்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் தலைவரைப் பார்த்ததும் அசடு வழிந்து சிரிக்கும் தொண்டனைப் போல ஒரு எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்தேன்.

"சொல்லுங்க" என்றார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேணுகோபால் சார்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்க கிட்ட ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் கேட்டேன். உங்ககிட்ட கேக்க சொன்னாங்க"

"எதுக்குப்பா நம்பர்?"

"அவரோட கன்னி நாவல் வாசிச்சேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் அவர் கிட்ட பேசலாம்னு"

"ஓ... கன்னி வாசிச்சிருக்கீங்களா? எப்படி இருந்துச்சு?"

"இதுவரைக்கும் நான் வாசிச்சதுலயே பெஸ்ட் கன்னி தான் சார்"

"ம்ம்ம்ம். கிருபா எனக்கு ஃப்ரண்ட் தான். அவனத் தான் நானும் தேடிட்டு இருக்கிறேன். அவன் நம்பர் உங்களுக்கு கிடச்சாலும் அவன் கிட்ட பேசாதீங்க"

அதிர்ச்சியுடன், "ஏன் சார் இப்டி சொல்றீங்க?" என்றேன்.

"பேசவேணாம்ப்பா. அது உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது"

“…………”

"கன்னி நாவல் எல்லாம் புரிஞ்சதா?"

"அந்த நாவல முழுசா புரிஞ்சுக்க முடியல. எனக்கு நிறய சந்தேகம் இருந்துச்சு"

அவசரமாய் "வாங்க வாங்க. இங்க உக்காருங்க. பேசுவோம். என்ன சந்தேகம் சொல்லுங்க?"

"சந்தேகம்னு சொல்றத விட நான் புரிஞ்சது சரியான்னு தெரியனும். நாவல் முழுக்க வந்த அமலா, கடைசில காணாம போய்ட்ராங்க. கடைசி சேப்டர் ஃபுல்லா சாரா. சாராக்கும் அமலாக்கும் நிறய ஒற்றுமை இருக்கு. அதனால அமலாவும் சாராவும் ஒன்னுனு தோணுது"

"ச்சே  ச்சே அதெல்லாம் இல்லவே இல்ல. சாரா வேற. அமலாக்கும் பாண்டிக்கும் காதல் கிடையாது"

“அப்படி  அமலாவும் சாராவும் ஒன்னு இல்லனு சொன்னாலும், அமலா மேல இருந்த காதல் தான் உடனே பாண்டிக்கு சாரா மேல வந்துச்சு"

"அந்த புக்ல அவங்க ரெண்டு பேருக்கும் காதல்ன்னு எங்க வருது சொல்லுங்க?"

"எங்கயும் நேரடியா இல்ல. ஆனா மறைமுகமா அவர் நிறய இடத்துல சொல்றார்"

"ம்ம்ம் ஹ்ம்ம் இல்ல"

‘கன்னி’ நாவலைப் பற்றிய அவரது பார்வையைத் தெரிந்துகொள்ளலாம் என கேட்டுப் பார்த்தேன். "இன்னொரு முறை நாவலை வாசிங்க. உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். அது நிச்சயமா இன்னொரு முறை வாசிக்கிற மாதிரியான நாவல் தான்" என்றார்.

அது நிச்சயமாக இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கும்படியான நாவல் என்பதால் வேறெதுவும் பேசாமல் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தேன்.

"இன்னொரு முறை வாசிச்சிட்டு ஸ்பென்சர் (தமிழினி பதிப்பகம் ஸ்பென்சரின் தரைத் தளத்தில் உள்ளது) வாங்க. பேசுவோம்" என்றார்.
"கண்டிப்பா. கன்னி நாவல் அடுத்த பதிப்பு விடலாமே சார். எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது.”

"அடுத்த பதிப்பு விட்டு என்ன செய்ய? புரிய மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. கொஞ்ச பேர் தான் அந்த நாவல ரசிக்கிறாங்க"

"அவர் அப்டி ஒரு நாவல எழுதிட்டு அதுக்கு அப்புறம் ஏன் சார் எதும் எழுதல?"

நீண்ட பெருமூச்சு மட்டும் பதிலாய் வந்தது.

"யாரோட புக்லாம் வாசிச்சிருக்கீங்க?" என்றார்.

"குறிப்பிட்டு யாரையும் வாசிக்கல. தமிழ்ல க்ளாஸிக்ஸ்ன்னு சொல்ற புக்ஸ்லாம் வாசிச்சிட்டு இருக்கிறேன்"

“க்ளாஸிக்ஸ்னா?”

கெத் ஆனா புத்தகத்தின் பெயரைச் சொல்லி அசத்தலாம் என்று எண்ணியதால், அவர் கேட்கவும் ஒரு எழுத்தாளர் பெயரும் நினைவில் வர வில்லை.

"எஸ்.ராமகிருஷ்ணன்ட்ட இருந்து தான் ஸ்டார்ட் பண்ணேன். அவர் சிறந்த புத்தகம்னு காமிச்ச புக்ஸ். தமிழ் க்ளாஸிக் ஸீரீஸ்ன்னு வர்ற புக்ஸ்லாம் வாசிக்கிறேன்" என்றேன்.

“எஸ்.ராமகிருஷ்ணன்க்கே இலக்கியம்னா என்னனு தெரியாது. இதுல அவர் என்ன புக்ஸ் சொல்றது?"

"ஹா ஹா அது என்னவோ உண்மை தான். அவரோட யாமம்,  நிமித்தம் வாசிச்சிட்டு கடுப்பாகிடுச்சு"

"இப்போவாது புரிஞ்சுகிட்டீங்களே. அதுவே நல்ல விஷயம்”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் சில நாவல்களைப் பரிந்துரைத்தார்.

"கைல பணம் இல்ல. கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?" என்றேன்.

“உங்களுக்கு எவ்ளவ் புக்ஸ் வேணுமோ எடுத்துகோங்க. சென்னை வந்த அப்புறம் கொடுங்க"

"இல்ல சார். அது சரியா வராது"

“அட. நீங்க காசே கொடுக்காட்டியும் பரவால. எடுத்துட்டு போங்க. 'கன்னி ரீடர்க்கு இது கூட பண்ண மாட்டனா?'" என்றார்.

சும்மா யாராவது புத்தகம் பரிந்துரைத்தாலே வாங்கி விடுவது எனது வழக்கம். இதற்கு மேல் வாங்காமல் இருந்தால் எப்படி!

அவர் பரிந்துரைத்த புத்தகங்கள்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை
சு.வேணுகோபாலின் ஆட்டம்
கண்மணி குணசேகரனின் அஞ்சலை
பால்ஸாக்கின் செந்நிற விடுதி

எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அட்டகாசம்!

பலராலும் மாபெரும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் ஒரு சில படைப்புகளைத் தவிர பலவற்றின் அருகில் அண்ட முடியாது. அப்படியிருக்கையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இவர்கள் போன்ற சிலரின் படைப்புகள் வேறு பரிணாமத்தில் இருக்கின்றது.

‘கன்னி’ நாவலை மறுவாசிப்பு செய்து விரைவில் விரிவாக எழுதுகிறேன்.


- த.ராஜன்

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.



தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-

-த.ராஜன்