Friday 1 April 2016

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்


தனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது, தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

லிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி வரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.

எலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது.  தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

முதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.

ஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-
ராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-
தாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-

இது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.

- த.ராஜன்

No comments:

Post a Comment