Friday 31 July 2015

12 Angry Men(1957) - Sidney Lumet

எதைத் தேடிச் செல்கிறோமோ அதற்கான பாதையை கண்டடைவோம். புத்தக வாசிப்பில் தீவிரமாக நுழைந்த பொழுது - எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரை, புத்தகம் குறித்த நீயா நானா, ப்ளாக் (Blog) மூலமாக நண்பர்கள் - அவர்களின் பரிந்துரை, புத்தக நிலையங்களின் நிகழ்வுகள் - அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமென தொடந்து பல வாசல்கள் திறந்தவண்ணமிருந்தன. தற்போது சினிமா குறித்த தேடல். கடந்த பதிவில் தல பாலாஜியின் பரிந்துரையின்படி பார்க்க நேர்ந்த திரைப்படம் தான் 12 Angry Men.


ஒரே ஓர் அறையில் பன்னிரு ஆண்களுடன் முழுத் திரைப்படமும். மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிறுவனின் வழக்கைக் குறித்து சாமானியர்கள் பன்னிருவர் விவாதித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும். அவ்வளவு தான் கதை. அபாரமான கதைக்களமும் கிடையாது - ஆனால் வசனங்களின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் விறுவிறுப்பான திரைப்படமாகவும் நம் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்யும் வண்ணமும் அமைந்திருக்கின்றது இப்படம்.

ரஷ்ய இயக்குனர் Nikita Mikhalkov இதேத் திரைப்படத்தை 2007ம் ஆண்டு ரீமேக் செய்திருக்கிறார்.

கல்லூரி காலங்களில் பார்த்து வியந்த 'Exam(2009) by Stuart Hazeldine' திரைப்படமும் ஒரே அறையில் முழுக்க படமாக்கப்பட்ட திரைப்படம். இதே போல் தமிழில் நடந்த ஓர் அற்புத முயற்சி நாராயண் நாகேந்திர ராவ் இயக்கிய 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே'. இப்படத்தின் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது. மனதை வருடும் இசை மழையைப் போல. 'என்னுயிரே' பாடலின் மூன்று வெர்ஷன்களும் ஒவ்வொரு ஃப்ளேவர். மழை பொழிந்த மாலை வேளையில் இத்திரைப்படத்தைக் காண்பது அலாதி இன்பம்.

ஓர் அறையில் படமாக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்களின் பட்டியலை இணையத்தில் காண முடிகின்றது. நீங்க ஏற்கனவே பார்த்த அனுபவமேதுமிருப்பின் பகிரவும்.

- த.ராஜன்

Monday 20 July 2015

மாயக்கண்ணாடி

எனது இலக்கியப் பயணம் சிறப்பாக தொடங்கியதற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதல் முக்கிய பங்காற்றியது. அவரின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் இருந்தே எனது இலக்கியப் பயணம் தொடங்கியது. தற்போது சினிமாவிற்கு அவரது நூறுசிறந்த உலகத் திரைப்படங்களின் பட்டியலையே நாடியிருக்கிறேன். சினிமா பற்றிய அவருடைய புத்தகங்களுக்கு எதிர்மறையான பல கருத்துகள் இருப்பினும் அதன்மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அவரது வலைத்தளத்தில் சினிமா பற்றி 135 கட்டுரைகள் இருக்கின்றன. சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

அவர் பரிந்துரைக்கும் நூறு படங்களில் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் நான் பார்க்கும் திரைப்படங்கள் பற்றி (எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில்) அறிமுகப் பதிவு ஒன்றை 'மாயக்கண்ணாடி' (உபயம்: நஸ்ருதீன் ஷா) என்ற பெயரில் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். கடந்த வாரத்தில் பார்த்த நான்கு திரைப்படங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் இதோ.


The Bicycle Thief (1948) by Vittorio De Sica

பல பேர் போட்டியிடும் போஸ்டர் ஒட்டும் வேலை நாயகனுக்கு கிடைகின்றது. சைக்கிள் இருந்தால் தான் வேலை. தனது கல்யாணத்திற்கு வந்த பரிசுப் பொருளை விற்று மனைவி சைக்கிள் வாங்கித் தருகிறாள். முதல் நாள் வேலைக்கு செல்லும் போது மனைவியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. நாயகனிடமும் தான். முதல் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது கண் முன்னே சைக்கிளை திருடிச் செல்கிறான். திருடு போன சைக்கிளைத் தேடி நாயகனும் அவனது மகனும் அலைவது தான் கதை. வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Psycho (1960) by Alfred Hitchcock

இதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் முன்னுதாரணமாக இந்தப் படம் தான் இருந்திருக்குமென எண்ணுகிறேன். இந்தப் படத்தின் கருவைச் சொன்னால் பார்க்கப்போகும் உங்களுக்கு சுவாரசியம் இருக்காது. பாருங்க :) கெளதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Run Lola Run (1998) by Tom Tykwer

காதலனிடமிருந்து லோலாவிற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது. இருபது நிமிடத்தில் ஒரு லட்சம் ஜெர்மன் மார்க்ஸ் ஏற்பாடு செய்யுமாறு லோலாவிடம் கேட்கிறான். அப்படி முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றுவிடுவதாக சொல்கிறான். ஓட ஆரம்பிக்கிறாள் லோலா. மூன்று க்ளைமாக்ஸ். மூன்று ஓட்டங்கள். ஒவ்வொன்றும் வேறு சிலரின் திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக எடுக்கப்பட்டதாக விக்கி கூறுகிறார். அது பற்றி விவரங்கள் ஏதும் தெரியவில்லை எனக்கு. சிம்பு தேவனின் 'ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

City of God (2002) by Fernando Meirelles

தாறுமாறு தக்காளிசோறு படம். கத்தியைத் தீட்டுவதாக படம் ஆரம்பிக்கின்றது. கோழிகளை வெந்நீரில் முக்கி ரெக்கையைப்  பிய்த்து தோலை உரிப்பதை ஒரு கோழி பார்த்துக்கொண்டிருகின்றது. அந்தக் கோழியின் முகத்தில் தெரியும் பீதி. கோழியைக் கூட எதார்த்தமாக நடிக்க வைக்க முடிகிறது அவர்களால். கேங்ஸ்ட்டர் மூவி. இதன் பாதிப்பில் ஏதும் தமிழில் திரைப்படம் வந்திருப்பதாக கேள்விப்படவில்லை. தமிழில் கேங்ஸ்ட்டர் மூவி எடுக்கக் வேண்டுமென்றால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னும் சில வருடங்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைப் போல நானும் உலகப் படங்கள் பற்றி பெரிய பெரிய புத்தகங்கள் எழுத வேண்டும் :)

- த.ராஜன்

Monday 13 July 2015

A Separation by Asghar Farhadi

உறவுகளுக்குள் நடைபெரும் ஆகப்பெரிய சண்டைகள் பலவற்றில் அநேகமானவை உப்பு சப்பில்லாத விஷயங்களால் தான் என்று நான் சொன்னால் அதை யாரும் மறுக்கத் துணிய மாட்டீர்கள் என நம்புகிறேன்.
          
A Separation - ஈரானியத் திரைப்படம். உலக சினிமா என்ற உடன் - கதவை இடது கையால் மூடுவது இதைக் குறிக்கின்றது - இரத்தம் வளைந்து வளைந்து போவதாகக் காட்டியது இதைக் குறிக்கின்றது - இப்படி அப்படி அது இது நொட்டு நொசுக்கு என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை தற்போது. ஈரானில் என்றில்லை நம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் அன்றாட விஷயம் தான் கதைக்களம் என்பதால் மனதிற்கு அருகில் வைத்து ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்க முடியும். திரைப்படம் என்பதால் ரசனை!


விவாகரத்திற்காக கோர்ட்டில் வாதிடுவதாக கணவன் மனைவியின் வாக்குவாதத்துடன் தொடங்குகிறது திரைப்படம். அவர்களுக்கு பதினோரு வயதில் ஒரு பெண் குழந்தை. நாயகனுக்கு நோய்வாய்ப்பட்ட வயோதிகத் தந்தை. மனைவி இல்லாததால் தந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பெண் (கர்ப்பமான பெண்). அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் அல்லது தவறாக புரிந்துகொள்ள நேர்வதால் இவர்களுக்குள் நிகழும் பிரச்சனைகளை, உணர்வுகளை எதார்த்தமாக சித்தரிக்கும் அற்புதம் இப்படம்.

முக்கியமான பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கின்றது. விருதுகளின் பட்டியல் விவரங்களுக்கு விக்கியை நாடவும்.

இரண்டாம் உலகம் திரைப்படத்தில் அப்பாவிற்கு குண்டி கழுவிவிடும் காட்சியைக் கண்டு கண் கலங்கியது ஞாபகம் வருகின்றது. இது போன்றதொரு காட்சிகளை செல்வராகவன் தவிர வேறு யாரும் தமிழில் நிகழ்த்த முடியாது எனத்தோன்றியது அப்போது. தன்னைப் பார்த்து முகம் சுளிக்காமல், எந்தவித ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகாமல் தன் வாழ்வின் கடைசிக் காலங்களைக் கழிக்கும் முதியோர்கள் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இப்படி வாய்த்துவிடும். இப்படத்தில் தந்தையை மகன் கவனித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் உச்சம்.


வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத் திட்ட நேர்ந்து பின் தந்தையைக் குளிப்பாட்டும் பொழுது தந்தையின் முதுகில் முகம் புதைத்து மகன் அழும் காட்சி உன்னதத்தின் உச்சம். படத்தின் இறுதியில் நாயகனின் மகளும் வேலைக்கார பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இரு நொடிகள் உன்னதத்தின் அடுத்த உச்சம். இதுவரை பார்க்காதவர்கள் தவரவிடாதீர்கள்.

குடும்பங்களில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை இவ்வளவு எதாரத்தத்துடன் சினிமாவாக்க எப்படி முடிகிறது அவர்களால்?! இது ஏன் ஓரளவு கூட தமிழில் சாத்தியமாகவில்லை என்பது மட்டும் புரிய மாட்டேனென்கிறது. உலக சினிமா குறித்து பேசும் பலரும் கூறும் வசனம் இது. அடுத்த சந்ததியினராவது இந்த வரியைப் பயன்படுத்தாமல் போக வேண்டுகிறேன்.

- த.ராஜன்

(கடந்த ஞாயிறன்று பனுவலில் இப்படத்தை திரையிட்டார்கள். இதில் மெம்பர் ஆகும் பொருட்டு சிறந்த முறையில் திரையிட ஏற்பாடு செய்யலாம் என்றார் செந்தில் அண்ணன். சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்)

Tuesday 7 July 2015

காதல்! காதல்! காதல்!

இந்த ஆறு மாதங்களில் ஆறே படங்கள் தான் பார்த்திருக்கிறேன். அதிலொன்று குப்பை. அதை விட்டுவிடுவோம். மீதி ஐந்தைப் பற்றியும் தனித் தனிக் கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். இயலாமல் போனது. ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு அறிமுகம்.

The Perfume
சாதரணமாக இப்படத்தை அணுகும் போது ‘பெண்களைக் கொன்று ஃபெர்பியூம் தயாரிக்கிறான்’ இது தான் கதை என்றே தோன்றும். இதுவரை பார்த்தவர்களும் இனி பார்க்கப் போகிறவர்களும் ஃபெர்பியூமை ‘காதலின் குறியீடாக’ எண்ணி அணுகிப் பாருங்களேன்.

இறுதியில் எல்லோருக்கும் காதலைப் பகிர்ந்துவிட்டு தன்னோடு அன்பைப் பகிர யாருமில்லாமல் நாயகன் தவிக்குமிடம் நம் இதயத்தை உலுக்கிச் செல்லும்.



Miracle in Cell No.7
‘I am  Sam’ என்றொரு அமெரிக்கத் திரைப்படம் 2011ல் வெளியானது. அதன் பாதிப்பில் - பாதிப்பு என்பதை விட அதன் காப்பியில் தமிழில் உருவான திரைப்படம் தான் 'தெய்வத் திருமகள்'. தெய்வத் திருமகளைக் கொண்டாடுபவர்கள் தயவு செய்து ‘I am Sam’ பார்க்கவும்.

அதே கதைக் களம் தான் ‘Miracle in Cell No.7’. ஒரு வேளை ‘I am Sam’-யின் பாதிப்பில் கூட இத்திரைபடத்தை உருவாக்கியிருக்கலாம். அந்தக் கதையை உள்வாங்கி வேறொரு திரைப்படத்தை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இப்படத்தை அறிமுகப்படுத்தியவருடன் படம் பார்த்துவிட்டு வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். தங்கள் அழைபிற்காகவும் காத்திருக்கிறேன்.


Ida
முழுவதும் கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். நீள்வாக்கிலான அசையாத ஃப்ரேம். வெகு சொற்பமான பின்னணி இசை.

கன்னியாஸ்திரி ஆகப் போகும் இளம் பெண் ஒரு புறம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் ஒரு புறம். இருவரும் சந்திக்கும் நிலை உருவாகின்றது. இருவரும் ஒவ்வொருவரால் இன்ஃப்ளுயன்ஸ் ஆகிறார்கள். இருவருக்குமான முடிவு என்ன என்பது கதை. Ida தன் தலைமுடியை முதன் முறையாகக் கண்ணாடியில் பார்க்கும் தருணம், ‘தி ஃபெர்பியூம்’ திரைப்படத்தின் இறுதியில் எல்லோருக்கும் காதலைப் பகிர்ந்துவிட்டு தன்னோடு அன்பைப் பகிர யாருமில்லாமல் நாயகன் தவிக்குமிடத்திற்கு நிகர்.


Whiplash
இசை கற்க விரும்புபவர்களுக்கு ஓரிடத்தில் சலிப்பேற்பட்டு பாதியில் கற்பதை நிறுத்தி விடும் நிலை ஏற்படும்.  பின்பேதேனும் இசை தொடர்பான உன்னத நிகழ்வைக் காணும் வேளையில் மீண்டும் கற்கத் தோன்றும் உத்வேகம் தோன்றும். அப்படி ஒரு உன்னதம் இந்த ‘Whiplash’. இப்படம் பார்த்த பின் இளம் டிரம்மர் (மாணவன்) ஹீரோவாகவும், இன்ஸ்ட்ரக்டர் வில்லனாகவும் உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் இப்படத்தை அணுகிய விதம் தவறு என்பதை மட்டும் அறிக.


A Millionaire's First Love
படத்தில் சினிமாத்தனங்கள் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும் காதல் மலரும் சில தருணங்கள் அற்புதம். காதலைப் பற்றி என்ன சொல்ல?! பாருங்க பாருங்க. பாத்துட்டு சொல்லுங்க :)


வாய்ப்பிருந்தால் பின் வரும் காலங்களில் பார்க்கவிருக்கும் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் விரிவான பதிவெழுதுகிறேன். இந்த ஐந்து திரைப்படங்கள் குறித்து விவாதிக்க விரும்புவோர் (படங்கள் பார்த்த பின்) ஆபீஸ் ரூம் வரவும்.

- த.ராஜன்