Monday, 20 July 2015

மாயக்கண்ணாடி

எனது இலக்கியப் பயணம் சிறப்பாக தொடங்கியதற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதல் முக்கிய பங்காற்றியது. அவரின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் இருந்தே எனது இலக்கியப் பயணம் தொடங்கியது. தற்போது சினிமாவிற்கு அவரது நூறுசிறந்த உலகத் திரைப்படங்களின் பட்டியலையே நாடியிருக்கிறேன். சினிமா பற்றிய அவருடைய புத்தகங்களுக்கு எதிர்மறையான பல கருத்துகள் இருப்பினும் அதன்மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அவரது வலைத்தளத்தில் சினிமா பற்றி 135 கட்டுரைகள் இருக்கின்றன. சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

அவர் பரிந்துரைக்கும் நூறு படங்களில் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் நான் பார்க்கும் திரைப்படங்கள் பற்றி (எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில்) அறிமுகப் பதிவு ஒன்றை 'மாயக்கண்ணாடி' (உபயம்: நஸ்ருதீன் ஷா) என்ற பெயரில் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். கடந்த வாரத்தில் பார்த்த நான்கு திரைப்படங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் இதோ.


The Bicycle Thief (1948) by Vittorio De Sica

பல பேர் போட்டியிடும் போஸ்டர் ஒட்டும் வேலை நாயகனுக்கு கிடைகின்றது. சைக்கிள் இருந்தால் தான் வேலை. தனது கல்யாணத்திற்கு வந்த பரிசுப் பொருளை விற்று மனைவி சைக்கிள் வாங்கித் தருகிறாள். முதல் நாள் வேலைக்கு செல்லும் போது மனைவியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. நாயகனிடமும் தான். முதல் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது கண் முன்னே சைக்கிளை திருடிச் செல்கிறான். திருடு போன சைக்கிளைத் தேடி நாயகனும் அவனது மகனும் அலைவது தான் கதை. வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Psycho (1960) by Alfred Hitchcock

இதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் முன்னுதாரணமாக இந்தப் படம் தான் இருந்திருக்குமென எண்ணுகிறேன். இந்தப் படத்தின் கருவைச் சொன்னால் பார்க்கப்போகும் உங்களுக்கு சுவாரசியம் இருக்காது. பாருங்க :) கெளதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Run Lola Run (1998) by Tom Tykwer

காதலனிடமிருந்து லோலாவிற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது. இருபது நிமிடத்தில் ஒரு லட்சம் ஜெர்மன் மார்க்ஸ் ஏற்பாடு செய்யுமாறு லோலாவிடம் கேட்கிறான். அப்படி முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றுவிடுவதாக சொல்கிறான். ஓட ஆரம்பிக்கிறாள் லோலா. மூன்று க்ளைமாக்ஸ். மூன்று ஓட்டங்கள். ஒவ்வொன்றும் வேறு சிலரின் திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக எடுக்கப்பட்டதாக விக்கி கூறுகிறார். அது பற்றி விவரங்கள் ஏதும் தெரியவில்லை எனக்கு. சிம்பு தேவனின் 'ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்' திரைப்படம் இதன் பாதிப்பில் தான் எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

City of God (2002) by Fernando Meirelles

தாறுமாறு தக்காளிசோறு படம். கத்தியைத் தீட்டுவதாக படம் ஆரம்பிக்கின்றது. கோழிகளை வெந்நீரில் முக்கி ரெக்கையைப்  பிய்த்து தோலை உரிப்பதை ஒரு கோழி பார்த்துக்கொண்டிருகின்றது. அந்தக் கோழியின் முகத்தில் தெரியும் பீதி. கோழியைக் கூட எதார்த்தமாக நடிக்க வைக்க முடிகிறது அவர்களால். கேங்ஸ்ட்டர் மூவி. இதன் பாதிப்பில் ஏதும் தமிழில் திரைப்படம் வந்திருப்பதாக கேள்விப்படவில்லை. தமிழில் கேங்ஸ்ட்டர் மூவி எடுக்கக் வேண்டுமென்றால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னும் சில வருடங்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைப் போல நானும் உலகப் படங்கள் பற்றி பெரிய பெரிய புத்தகங்கள் எழுத வேண்டும் :)

- த.ராஜன்

No comments:

Post a Comment