Saturday 11 October 2014

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.



தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-

-த.ராஜன்

1 comment: