Saturday 11 October 2014

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்

தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் 1988-ல் எழுதிய நாவல் இது.

இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல் என்று இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற மதத்தை விடவும் இஸ்லாம் மதத்தின் மீது எனக்கு கூடுதல் பற்று உண்டு. காரணம்;

வட்டி - வங்கியில் பணம் சேமித்து வைத்திருந்தாலும் கூட அதிலிருந்து கிடைக்கும் வட்டியைத் தனக்கு சொந்தமாகக் கருத மாட்டார்கள். தான் சம்பாதிக்காமல் வேறு வழியில் கிடைக்கும் பொருள் தனக்கு சொந்தமல்ல என்பது அவர்களுடைய கோட்பாடு.

நோன்பு - நோன்பு சமயங்களில் அவர்கள் கொள்ளும் கட்டுப்பாடு அபாரமானது.

பெண்களின் நற்குணங்கள் - இஸ்லாமியப் பெண்களுக்குக் கொடுக்கப் பட்ட சுதந்திரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் நற்பண்புகள் அலாதியானது.

நிர்வாணம் - அனாவசியமாக நிர்வாணமாக இருக்கக் கூடாது எனும் கொள்கை. இதிலென்ன இருக்கிறது என எண்ணுபவர்கள் அதன் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரியாணி - இவர்கள் வைக்கும் பிரியாணிக்கு நான் அடிமை. அதுவும் குறிப்பாக பிரியாணிக்கு வைக்கும் சாம்பார் (திருநெல்வேலி பகுதிகளில் வைக்கப்படும் சாம்பார்). ஆணும் பெண்ணும் போல அப்படியொரு காம்பினேஷன்.

எனக்கு முஸ்லீம் நண்பர்கள் அதிகம். அவர்கள் வீட்டின் சமையலறை வரை செல்லும் அளவிற்கு நெருக்கம் உடையவர்கள். அப்படி இருந்த போதிலும் பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருந்ததைப் போல அவர்களின் வாழ்க்கை முறையில் நிறைய விஷயங்கள் புரியாத புதிராகவே இருந்தது. இந்த நாவல் அதைத் தகர்த்தெரிகிறது.

அது போக இந்த நாவல் குறிப்பிட்ட ஒரு இஸ்லாம் சமூகத்தின் கதை மட்டும் அல்ல. அதில் அகமதுக்குப் பதிலாக கணேசன், ஜோசஃப் என எந்தப் பெயரைப் போட்டாலும் பொருந்தும். இது நம் எல்லோருடைய கதையும் தான்.

ஒரு கடலோர கிராமத்தின் கதையின் ஒவ்வொரு மாந்தர்களும் நம் சமூகத்தில் கண்டு வளர்ந்த ஒருவர் போலவே வலம் வருகிறார்கள். வெறும் ஒரு சமூகத்தின் வாழ்க்கை என்று பாராமல் இந்த நாவலைப் பல்வேறு காரணங்களுக்காக வாசிக்கலாம்.

வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளி - இவர் முதலாளித்துவத்தின் உச்சமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு சமூகத்தை தன் காலடிக்குக் கீழேயே இருக்க வேண்டுமென நினைக்கும் ஒரு முதலாளியின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக இதைப் படிக்கலாம்.

செய்யதினா முஸ்தபா இம்பிச்சி கோயா தங்ஙள் - மக்களின் மூட நம்பிக்கைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாழும் ‘உயர்ந்த’ மனிதர்.

மோதினார் அசனார் லெப்பை - முதலாளிக்கு ஒத்து ஊதி வாழும் பல ஜீவன்களில் ஒருவன். இப்படிப் பட்ட ஜீவன்கள் இல்லையெனில் முதலாளி எப்படி? முதலாளித்துவம் எப்படி?

மஹ்மூது - தனது அடுத்த சந்ததியாவது இது போன்ற முதலாளிகளின் பிடியில் சிக்காமல் வாழ வேண்டுமென முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கும் எளியவன்.

மஹபூப்கான் - ஊர் மக்கள் ஹராமாகக் கருதும் ஆங்கிலப் பள்ளியின் ஆசிரியர் இவர். ஊரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி தன் சமூகத்தை முன்னுக்கு கொண்டு வர நினைக்கும் நல்லுள்ளம்.

உசன் பிள்ளை - ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கும் கடும் உழைப்பாளி. ஆனால் தான் விற்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் மற்றவர்களை ஒப்பிடும் போது பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் ஊர் மக்களின் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளானாலும் கூட அதைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத ஆள்.

முதலாளியின் வீட்டில் வாழும் பெண்கள் - முதலாளியின் மனைவியை, நூஹூ பாத்திமாவை, ஆயிஷாவை நினைத்து நாம் வருத்தம் கொள்ளாமல் இருக்க முடியாது.

இவர்கள் போக கதைகளில் வரும் சிறு சிறு கதை மாந்தர்களின் சித்தரிப்பும் அபாரம். ஒவ்வொருவரும் உங்கள் மனதிலிருந்து நீங்க சில நாட்கள் ஆகும்.

பொழுது போக்குக்காக மட்டும் படிக்க வேண்டுமென்று நினைத்தாலும் கூட இந்த நாவல் உங்களை ஏமாற்றாது. கதையைக் கொண்டு செல்லும் விதம், கதையின் ஆழம், நடை, சுவாரசியம் என மிரட்டியிருக்கிறார். தோப்பில் முஹம்மது மீரானை இவ்வளவு காலம் வாசிக்காமல் இருந்ததற்காக வருந்தினேன்.


இது வரை புத்தக வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் இந்த நாவலிலிருந்து தொடங்குங்களேன்.

காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.160/-


-த.ராஜன்

1 comment: