Saturday, 11 October 2014

மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் அவர்கள் எழுதிய 44 பக்க குறுநாவல் இது.


முன்னுரையில் இதன் களம் சிறைச்சாலை என்றவுடன், இந்த நாவலைப் படிக்கும் ஆவல் தானாகவே தொற்றிக் கொண்டது. நான் ஏற்கனவே சொன்னது போல, புத்தகம் நாம் காண இயலாத பல்வேறு உலகங்களுக்கு நம் கை பிடித்துக் கூட்டிச்செல்லும். சிறைச்சாலை - நாம் காண முடிந்த உலகமா என்ன?

அதிலும் காதல் கதை என்று எங்கோ கேள்விப்பட்ட ஞாபகம். எனக்கு ஆர்வம் பிடிகொள்ளவில்லை. சிறைச்சாலையில் காதலா? ஆண்களுக்கு வேறு சிறை, பெண்களுக்கு வேறு சிறை என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். பின் எப்படி அங்கே காதல் சாத்தியமாகும்? ஒரு வேலை ஆணுக்கும் ஆணுக்கும் காதலா என்று குதர்க்கமாக என் மனம் சிந்தித்து சிரித்தது.

ஆண்களின் சிறையையும் பெண்களின் சிறையையும் பிரிப்பது ஒரு பிரமாண்டமான மதில் தான். இப்போது புரிந்திருக்குமே இங்கே காதல் எப்படி சாத்தியம் என்று. இந்த நாவலை அவர் நினைத்திருந்தால் 400 பக்கத்திற்கு எழுதியிருக்க முடியும். அந்த மாதிரியான ஒரு கதைக் களம். வெறும் 44 பக்கத்தில் நொறுக்கிவிட்டிருக்கிறார்.

அவர் உடன் இருக்கும் சிறைத் தோழர்கள் ஏதோ ஒரு நந்நாளில் விடுதலை அடைந்து போகும் போது, இவர் மட்டும் சிறையில் தனித்திருக்கிறார். அந்த சோகத்தையே நூறு பக்கத்திற்கு எழுதியிருக்க முடியும். ஆனால் பஷீர் இரண்டு பத்திகளில் அதை நிறுத்திக்கொண்டார். கற்பனையில் அவர் அனுபவிக்கும் மனப் போராட்டத்தை நம்மால் உணர முடியும் படி செய்து காட்டியிருக்கிறார்.

ஒரு 44 பக்க குறுநாவல் திரைப்படமாக வந்திருக்கிறதென்றால் அதன் ஆழத்தை யோசித்துப்பாருங்கள். கதையின் கடைசிப் பக்கத்தைப் படிக்கவும் என் மனதில் ஒரு வித இனம் புரியாத உணர்ச்சி. அதனாலேயே இதைப் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.


-த.ராஜன்

No comments:

Post a Comment