Tuesday 21 June 2016

கழைக்கூத்தாடியின் இசை - தேவிபாரதி

இருபத்தைந்து ஆண்டுகளாக இலக்கியத்தில் தொடர்ந்து தனது பங்களிப்பதைத் தந்துகொண்டிருக்கும் தேவிபாரதியின் அறிமுகம் மூன்று மாதங்களுக்கு முன்பே கிடைத்தது. எனது சிறுகதை அடுக்குகளிலிருந்த தேவிபாரதியின் 'வீடென்ப' தொகுப்பைப் பார்த்துவிட்டு 'தேவிபாரதி வாசிச்சிருக்கீங்களா?' என்றார் நண்பர் பிறைசூடி. இத்தொகுப்பை யாருடைய பரிந்துரையில் வாங்கினேன் என்பதே நினைவில் இல்லை. காலச்சுவடு அரங்கில் இனாமாகத் தந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். 'முக்கியமான ஆளு. வாசிச்சிடுங்க' என்ற பிறைசூடியின் பரிந்துரையாலே இவரை வாசிக்க நேர்ந்தது. அவரின் பரிந்துரையை ஒரு போதும் உதாசீனப்படுத்தியதில்லை. இலக்கியப்பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பதற்கு அவ்வப்போது யாரேனும் ஒருவரை என்னிடம் அனுப்பி வைத்து விடுவார் இலக்கியக்கடவுள். தற்போது பிறைசூடி. குறிப்பாக சிறுகதைகளில் தீவிரமான விவாதங்களில் இவருடன் ஈடுபட்டதுண்டு. 'தற்கால சிறுகதைகள் வாசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மாஸ்டர்ஸ்களையும் வாசிக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தும் ஜீவன். ‘அவர்களை ஏன் மாஸ்டர்ஸ் என்கிறார்கள் என யோசித்ததுண்டா? ஜீரோ முதல் நூறு என அளவுகோல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக பெஞ்ச்மார்க்கை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் ஒப்பிட்டுப்பாருங்கள். இருபதுக்கும் மேற்பட்ட ரமேஷ்:பிரேமின் கதைகளில் 'மூன்று பெர்நார்கள்' மட்டும் ஏன் சிறந்த கதையாக எஸ்.ராமகிருஷ்ணனால் அடையாளப்படுத்தப்படுகிறது?' என ஒவ்வொரு முறையும் ஏதேனும் கேள்விகளையும் எழுப்பி உரையாடலை நிறைவு செய்வார்.

சிறுகதைகளில் முன்னோடியாக பெரும்பட்டியல் நம்மிடமுள்ளது. இன்று ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டிருந்த (தடம் இதழுக்காக எழுதப்பட்டது) 'சிறுகதையின் வழிகள்' எனும் கட்டுரை மிக விரிவாகவே சிறுகதையின் வரலாற்றை அலசியிருக்கின்றது. போலி செய்வதை, சொன்னதைத் திருப்பிச் சொல்வதை எந்தக் கலைஞனும் விரும்பமாட்டான் எனும் கே.என்.செந்திலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ஏதேனும் ஒரு வழியைப் பிரத்யேகமாக தனக்கென தேர்ந்தெடுப்பதன் மூலமே தனித்துவமான இடத்தை தமிழ் இலக்கியத்தில் அடையமுடியும் எனும் நிலை சிறுகதையாசியர் எல்லோருக்குமே உண்டு. தேவிபாரதியின் கதைகள் தனித்துவமானவை. 'பிறகொரு இரவு', 'உயிர்த்தெழுதலின் சாபம்', 'இருளுக்கும் பின்னால் ஒளிக்கும் அப்பால்' போன்ற கதைகளை தேவிபாரதியால் மட்டுமே எழுத முடியும் என்று தோன்றுகிறது. அவரின் நாவல்கள் 'நிழலின் தனிமை' மற்றும் 'நட்ராஜ் மகராஜ்' ஆகியவை சிறப்பாக வந்திருக்கின்றது என்ற போதிலும் அவரது சிறுகதைகளில் இருந்த கச்சிதம், அதில் அவர் தொட்ட உச்சங்களை நெருங்க முடியாமல் வெகு தொலைவிலேயே இவ்விரு நாவல்களும் நிற்கின்றன. இவ்விரு நாவல்களையும் தேவிபாரதி அல்லாமல் வேறு யாரோ ஒருவரால் கூட எழுதிவிட முடியும். இவை தேவிபாரதியின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் அல்ல. இவ்விருநாவல்களையும் சுருக்கப்பட்ட வடிவில் 'பிறகொரு இரவு' கதையைப் போல கச்சிதமாக எழுதியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

மே மாத காலச்சுவடு இதழில் வெளியான தேவிபாரதியின் 'கழைக்கூத்தாடியின் இசை' எனும் நெடுங்கதை குறித்து நானும் என்னைத் தொடர்ந்து அருணும் வாசகசாலையின் புதிய முயற்சியான கதையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று பேசினோம். இருவரும் பேசியதிலிருந்து என் நினைவிலிருப்பவற்றை இங்கே பகிர்கிறேன். இதைப் பகிர்வதற்கு முக்கிய காரணம் கதையாடல் நிகழ்வோ அல்லது அதில் நான் பேசியதோ அல்ல. தேவிபாரதிக்காகவே.

கழைக்கூத்தாடியின் இசை. கிராமத்திலிருந்து இயக்குனர் ஆகும் பெருங்கனவோடு சென்னை மாநகருக்கு வந்து தோற்றுப் போகும் இளைஞனின் கதை. முருகேசன் எனும் பெயரை அக்னி நதி நாவலின் பாதிப்பில் 'கௌதம நீலாம்பரன்' என மாற்றிக்கொள்கிறான். தீவிர இலக்கிய வாசிப்பு உள்ளவன். கதை தொடங்கும் இரண்டாவது பத்தியில் இவ்வாறு சொல்கிறார்: 'எதையும் பொருட்படுத்தாமல் கிடைக்கும் கையகலச் சந்துகளுக்குள் புகுந்து நசுங்கி வியர்வைப் பிசுபிசுப்புடன் வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கே வசப்படுகிறது இந்த மெட்ரோ வாழ்க்கை; கௌதம நீலாம்பரனைப் போன்ற அசடுகளுக்கல்ல'. 'ஒரு புளியமரத்தின் கதை', 'நாளை மற்றுமொரு நாளே' நாவல்களின் ஸ்க்ரீன் ப்ளேக்களை எழுதி வைத்திருக்கிறான். இலக்கியத்தை சினிமாவாக்க முயல்வதாலேயோ என்னவோ கெளதம் போன்றவர்களை அசடு என்கிறார் போல. தனது இலக்கியப் பரிட்ச்சயத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாரிடமாவது பகிர்ந்து கொள்கிறான். யாராவது தரும் போலியான வார்த்தைகளில் ஏமாந்து போகிறான். விருது வாங்குவதாகவும் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பதாகவும் கனவுகளில் மூழ்கத் தொடங்குகிறான். இந்தக் கதை உச்சம் பெறுவது இதன் தலைப்பினாலும் கழைக்கூத்தோடு கௌதமின் வாழ்க்கையை ஒப்பிடுவதாலும். ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகளால் இவ்விரு கலைகளையும் சூசகமாக ஒப்பிட்டு பேசுவதில் இக்கதை பல்வேறு திசைகளில் பயணமாகின்றது.

கழைக்கூத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து கம்பி மேல் நடக்கும் வித்தையில் இறுதியில் கிடைப்பதென்னவோ பிச்சை. கௌதமிடம் ஒரு ப்ரோடியுசர் ‘அடுத்த படம் நம்ம பண்ணலாம்’ என ரூபாய் ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தியேழும் அறுபத்தைந்து பைசாவும் தருகிறான். அது போலியான வாக்குறுதி என்பதே கெளதம்களுக்கு ஒரு போதும் புரிவதில்லை. அது'அட்வான்ஸல்ல, பிச்சை' என்று எழுதுகிறார். கம்பி மேல் நடக்கும் வித்தை போன்றது தான் கெளதம் போன்றவர்களின் வாழ்க்கை. ஒரு முறை நூறு ரூபாய்த் தாள் ஒன்று கழைக்கூத்தாடும் குழந்தையின் தட்டில் விழுகிறது. ‘கழைக்கூத்தாட்டமும் ஒரு கலை. இந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு அந்தக் கலையே ஆதாரம். ஒரு நூறு ரூபாய்த் தாள் அதன் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்? எனினும் அதற்குக் கண்கள் விரிந்ததை கௌதமன் கவனித்தான். மற்றவர்களைப் போலவே குழந்தையின் வதங்கிய அலுமினியத் தட்டில் அவன் போட்டதும் பிச்சைதான். நூறு ரூபாயைப் பிச்சையாக ஏற்குமளவுக்கு அதன் மனம் பக்குவப்பட்டிருக்காததனாலும் இருக்கலாம்.’கெளதம்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஏதோ ஒரு வாய்ப்பில் வெற்றி கிட்டினாலும் நூறு ரூபாய்  பெற்ற குழந்தையைப் போலவே கௌதம்கள் விழித்துக்கொண்டிருப்பார்கள். இது நிரந்தரமும் அல்ல என்பது அவர்களுக்கு புரிவதில்லை. லேசான இடறலில் கீழே விழுந்துவிடக்கூடும். உயிர் போகாவிட்டாலும் கை கால் உடைவது நிச்சயம். சமகாலச் சூழலில் ஓரிரு படங்களின் வெற்றிக்களிப்பில் துள்ளிக்குதிக்கும் இயக்குனர்களை இது போல் ஆங்காங்கே பகடி செய்தபடி செல்கிறார். அது எதார்த்தமும் கூட. உதவி இயக்குனர்கள் பற்றிய கதைகள் நான்கைந்து தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் இந்தக்கதை மிகவும் முக்கியமானது.

கெளதம் மட்டுமல்லாது வேறு சில சுவாரசியமான பாத்திரங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலொன்று மிஸ்டர் எக்ஸ். தினமும் மெரினா கடற்கரையில் காதலர்களின் முகங்களை உற்றுப்பார்க்கும் ஒரு பாத்திரம். தனது மனைவியையும் அவளது ரகசியக் காதலனையும் கண்டுபிடிப்பது தான் இவனது நோக்கம். இவரைக் குறித்து நண்பர்களுடன் விவாதமும் நிகழ்த்துகிறான் கௌதம். திருவல்லிக்கேணி மற்றும் மெரினா கடற்கரை பற்றிய தேவிபாரதியின் சித்தரிப்பு துல்லியமாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கின்றது.  திருவல்லிக்கேணியும் மெரினா கடற்கரையும் நன்கு பரிட்சயமான வாசகரின் மனதை பரவச நிலைக்கு இட்டுச்செல்லும் இவரது வர்ணனைகள். தேவிபாரதியின் கிளாசிக் கதைகளுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

இக்கதையை இணையத்தில் வாசிப்பதற்கான சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-197/page66.asp


Wednesday 15 June 2016

சென்னை புத்தகக் கண்காட்சி 2016

நான் வாங்கிய புத்தகங்கள்:

·         பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன் (காலச்சுவடு, வெளியீட்டு விழாவில்)
·         நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)
·         நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி (காலச்சுவடு)
·         புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன் (காலச்சுவடு)
·         நான் காணாமல் போகும் கதை – ஆனந்த் (காலச்சுவடு)
·         சமூகப்பணி அ-சமூகப்பணி எதிர்-சமூகப்பணி - சஃபி & கோபிகிருஷ்ணன் (முன்றில்)
·         இரவுக்காட்சி - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         வேர்களின் பேச்சு - தோப்பில் முஹம்மது மீரான் (அடையாளம்)
·         சம்பத் கதைகள் 2 – சம்பத் (விருட்சம்)
·         தேவதேவன் கதைகள் – தேவதேவன் (தமிழினி)
·         மரநிறப் பட்டாம்பூச்சி - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         எருது - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         அறியப்படாத தீவின் கதை - ஜோஸே ஸரமாகோ (காலச்சுவடு)
·         சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி (அடையாளம்)
·         சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - சிங்கில் ஐத்மாத்தவ் (அகல்)
·         நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் - சிமாந்தா எங்கோசி அடிச்சி (அணங்கு)
·         குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் (பாரதி)
·         அன்னா தஸ்தவேவ்ஸ்கி - தமிழில்:யூமா வாசுகி (பாரதி)
·         தொலைவிலிருக்கும் கவிதைகள் - தமிழில்: சுந்தர ராமசாமி (காலச்சுவடு)
·         சக்கரவாளக்கோட்டம் - ரமேஷ் - பிரேம் (காலச்சுவடு)
·         கருப்பு வெள்ளைக் கவிதை - ரமேஷ் - பிரேம் (அகரம்)
·         குரல்களின் வேட்டை – சூத்ரதாரி (சொல்புதிது)
·         எட்டிப் பார்க்கும் கடவுள் - பா.வெங்கடேசன் (விருட்சம்)
·         பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் – தேவதேவன் (தமிழினி)
·         நீ இப்பொழுது இறங்கும் ஆறு – சேரன் (காலச்சுவடு)
·         'குடி'யின்றி அமையா உலகு - தொகுப்பு: முத்தையா வெள்ளையன் (புலம்)

நண்பர்களிடமிருந்து:
·         விழித்திருப்பவனின் கனவு - கே.என்.செந்தில் (காலச்சுவடு, யுவன் சந்திரசேகரின் கரங்களால் நாவலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டேன்)
·         அரூப நெருப்பு - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         காதல் கடிதம் - வைக்கம் முகம்மது பஷீர் (காலச்சுவடு)
·         கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல்)
·         பார்வை தொலைத்தவர்கள் - ஜோஸே ஸரமாகோ (பாரதி)
·         வெள்ளரிப்பெண் – கோணங்கி (புலம்)
·         இண்ட முள்ளு – அரசன் (வளர்மதி)
·         காலமே வெளி - தமிழில்: கால சுப்பிரமணியன் (தமிழினி)
·         சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ (பாரதி)
·         அஸ்தினாபுரம் - ஜோ டி குரூஸ் (காக்கை)
·         விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன் (உயிர்மை)

காலச்சுவடில் இலவசமாகக் கிடைத்தவை:
·         முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர்
·         முகமூடி செய்பவள் - வினோதினி
·         தொலைவில் - வாசுதேவன்
·         பேய்த்திணை - மௌனன்