Saturday, 11 October 2014

பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர்

கடல் சார்ந்த நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜோ டி குரூஸின் 'ஆழி சூழ் உலகு', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்', ஜான் பான்வில்லின் 'கடல்' மற்றும் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' வாசித்து முடித்தாகிவிட்டது. இந்த நான்கு நாவல்களிலும் துயரம் கொட்டிக் கிடப்பதால் எனக்குள்ளும் தொடர்ந்து ஏதோ பாரம் அழுத்துவது போலவே இருந்தது. அதனால் ஒரு மாறுதலுக்காக வைக்கம் முகமது பஷீரின் 'பாத்துமாவின் ஆடு' நாவலை எடுத்தேன். இது ஒரு 100 பக்க குறுநாவல் என்பது தான் ஒரே காரணமே தவிர, இது ஒரு நகைச்சுவை சார்ந்த நாவல் என்பது முன்னரே தெரியாது.

இந்த நாவல் வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். நான்கைந்து தம்பி தங்கைகள் அவர்களின் ஏழெட்டு குழந்தைகள் என ஒரு பெரும் கூட்டமே ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறது. கூடவே கோழிகள், அகதிப் பூனைகள் மற்றும் அவர் தங்கை பாத்துமாவின் ஆடு. தேசாந்திரியாகத் திரிந்து வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது நடைபெறும் ஒரு சில மாதங்களின் நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வுடன் இந்நாவலில் சித்தரித்திருக்கிறார்.

பஷீரின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார். அவரது தங்கை பாத்துமாவின் ஆடு, அவர் எழுதிய 'பால்யகால சகி' மற்றும் 'சப்தங்கள்' நாவலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அது வரை சும்மா நின்று கொண்டிருந்தவர், அவர் படுக்கையிலிருக்கும் போர்வையை சாப்பிட ஆரம்பிக்கவும் "அத சாப்பிடாத. எங்கிட்ட வேற பிரதி இல்ல. நான் அப்புறமா என்னோட 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' நாவலைத் தரேன்" என்று சொல்வார். சொன்னது போல பின்னொருநாளில் அந்த நாவலை உண்ணவும் கொடுக்கிறார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் அவரது வீட்டைக் கடக்கும் போது அவரைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு செல்வர். தன்னிடம் வந்து குழந்தைகள் ஆட்டோகிராப் வாங்க ஆசைப்படுகிறார்கள் என தனக்குள்ளாக அவர் கற்பனை செய்து கொள்வார். அதே போல் ஒரு நாள் அவரை நோக்கி சிறுமிகள் வரவும் இவரும் ஆட்டோகிராப் தருவதற்கு ஆயத்தமாவார். குழந்தைகளோ அவர் வீட்டிலிருக்கும் சம்பங்காய்களை வாங்குவதற்காக வந்திருப்பார்கள்.

இந்த இடங்களிலெல்லாம் பஷீரின் நையாண்டி அல்டிமேட்.

ஆட்டிற்கு புத்தகத்தைத் தின்னக் கொடுக்கும் பஷீர், தன் போர்வையைத் தின்னத் தொடங்கும் போது பதறுகிறார் - எழுத்தாளரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் சிறுமிகள் - இது போல் பல காட்சிகளில் நாம் மனம் விட்டுச் சிரித்தாலும் அதில் ஒளிந்திருக்கும் சோகம் சொல்லி மாளாதது. நாவல் முழுவதும் அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் துயரம் சார்ந்த அம்சங்களே. இதே கதையை நான் எழுதியிருந்தால் ஒரு அழுகுணி நாவலாகவே இருந்திருக்கும். தன் துயரத்தின் உச்சத்தையும் நகைச்சுவையாக சித்தரிக்க முடிந்ததே இந்த நாவலின் வெற்றி என்று எனக்குத் தோன்றுகிறது.


வாசித்துப் பாருங்களேன். வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தில் எழுதி குளச்சல் மு யூசஃப்பின் அருமையான மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை: 90.

- த.ராஜன்

No comments:

Post a Comment