கடலிற்கும் எனக்கும்
ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்குமென்று நினைக்கிறேன். கடலின் மீது எப்போதும் ஒரு வித மயக்கம்.
என்னுள் புதைந்து கிடைந்த கடலின் மீதான காதலைத் தட்டி எழுப்பியது ஜோ டி குருஸின் 'ஆழி
சூழ் உலகு' நாவல். கடலின் மீதும் கடல் சார்ந்து வாழும் மீனவர்கள் மீதும் காதல் வயப்படச் செய்துவிட்டார் ஜோ டி குருஸ். கடல் சார்ந்த எல்லா நாவல்களையும் வாசித்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
நான் அறிந்த கடல் சார்ந்த நாவல்கள்.
கடலுக்கு அப்பால் - ப.சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
கடல்புரத்தில் - வண்ணநிலவன்
ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்
கொற்கை - ஜோ டி குருஸ்
கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
கடல் - ஜான் பான்வில்
கடல் புறா – சாண்டில்யன்
தண்ணீர் தேசம் – வைரமுத்து
என் குடும்பத்தில் ஐம்பது
சதவிகிதம் கிறிஸ்தவர்களாகவும் ஐம்பது சதவிகிதம் இந்துவாகவும் இருப்பதால் இரண்டு மதங்களின்
வழிபாட்டையும் ருசித்திருக்கிறேன். சிறு வயதில் வருடா வருடம் குடும்பத்தோடு உவரி செல்வது
வழக்கம். பத்து பதினைந்து பேர் வேன் பிடித்து அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி
வருவோம். திருநெல்வேலியிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் உவரியை அடையலாம். ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது. நாவலில் வரும் சர்ச்சையும் நல்ல தண்ணீர் கிணறையும் கதை மாந்தர்களின் குடும்பத்தையும்
விவரிக்கும் போது
நான் பார்த்து ரசித்த உவரியை மனதில் கற்பனை செய்து கொண்டேன்.
இது உவரியின் மெயின்
சர்ச். மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெற்றெடுத்தவர்களால் கை விடப்பட்ட முதியோர்களை
இங்கு அதிகம் பார்க்கலாம். ஆலயத்திற்கு இடது புறம், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கு
அறைகள் கிடைக்கும். அதிகாலையில் எழுந்து ஃப்ரஷ்ஷாக மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவோம்.
கடலில் குத்தாட்டம் போட்டு விட்டு கோவிலின் பின்புறத்திலிருக்கும் நல்ல தண்ணீர் கிணற்றில்
சென்று குளித்து வருவோம். இவையெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆன பின்பும் இன்றும் மனதில்
அழியாச் சித்திரமாக இருக்கின்றது. இதையெல்லாம் நினைக்கும் போது மீண்டும் இனி எப்போது
அங்கே செல்வோம் என்ற ஏக்கம் நெஞ்சை அழுத்துகின்றது. சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து
சுற்றுலா செல்வதென்பது இந்த தலைமுறையில் சாத்தியமே இல்லை போலும்.
மேற்கண்ட படத்திலிருப்பது
அதே உவரி ஆலயத்தின் அருகிலுள்ள மற்றுமொரு சர்ச். ஆன்ட்ரூ சர்ச் என்று கூகுள் சொல்கிறார்.
எனக்கு சரியாக நினைவில்லை. அந்தக் கோவிலிருந்து நடந்தே இங்கு சென்று விடலாம். இவ்வாறு
நடந்து போகும் வேலையில் அங்கு வசிக்கும் மீனவ குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். வலை
பின்னிக்கொண்டும், கூட்டமாக சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். இவர்கள் ஏனோ இன்றும்
பசுமையாக என் நினைவில் இருக்கின்றார்கள். அதனாலயே 'கடல்புரத்தில்' நாவல் வாசிக்கும்
போதும் சரி, இப்போது 'ஆழி சூழ் உலகு' நாவல் வாசித்துக் கொண்டிருக்கும் போதும் சரி ஏற்கனவே
சொன்னது போல் உவரியை மனதில் கற்பனை செய்து கொள்கிறேன்.
சிறியவர்களாகிய எங்களுக்கு
ஆன்ட்ரூ சர்ச் பிடிப்பதில்லை. சிறுவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு 'நாங்க ஏரோ
ப்ளேன் சர்ச்சுக்கு போறோம்' என்று தனியாக கழண்டுவிடுவோம். ஒவ்வொரு முறை உவரி வரும்
போதும் இந்தக் கோவிலுக்குச் செல்வது அலாதியான இன்பம்.
இன்று காலை 'ஆழி சூழ்
உலகு' நாவல் குறித்து சில பதிவுகளை வாசிக்கும் போது மயிர் கூச்செறியச் செய்யும் தகவல்
ஒன்று கிடைத்தது. ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது
என்று சொன்னேன் அல்லவா? ஆமந்துறை என்பது ஒரு கற்பனைப் பெயராம். உண்மையான பெயர் உவரியாம்.
- த.ராஜன்
கதையின் முடிவு அருமை.நான் ஒரு சிறிய நகரத்தில் சேர்ந்தவன் இருந்தாலும் கடல் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. நன்றி
ReplyDelete