Saturday 11 October 2014

விழியழகி

விழியழகியே,

எதேர்ச்சையாகத் தான் உன்னைப் பார்த்தேன். நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய். நீ என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் மறுபடி உன்னைப் பார்த்திருப்பேனா என்று உறுதியாக என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. நீ பார்க்கும் போது எந்த உணர்ச்சியையும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. நீயும் எதேர்ச்சையாகத் தான் என்னைப் பார்த்திருப்பாயோ என்று நினைத்தேன். மீண்டும் என்னைப் பார்த்து அது எதேர்ச்சையானது அல்ல என்பதை உறுதி செய்த பின்னே என்னால் மூச்சு விட முடிந்தது. ஒரு பெண்ணின் விழியும் ஒரு ஆணின் விழியும் மோதிக் கொள்வதிலுள்ள சுகம். அடடா! உடனே இதயம் அதைப் புரிந்து கொள்வதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறை உன் விழி என்னைச் சந்திக்கும் போதும் 'என்ன விடு நான் போறேன் நான் போறேன்' என்று என் இதயம் உன்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. ‘விழியில் விழி மூடி இதயக் கதவொன்று திறந்தது’.

தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாய். ஒவ்வொரு வாய் வைக்கும் போதும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால் நண்பர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள் என்பதால் அவர்களிடம் பேசியவாறே உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ ஒரு வாய் எடுத்து வைக்கும் போது அவர்களிடம் பேசியும் நீ என்னைப் பார்க்கும் போது உன்னைப் பார்த்தும்,  மோதல் சீராய் இயங்கும் படி செய்து கொண்டேன். ‘விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னது’. செடியில் பூத்த ஒற்றை ரோஜாவைப் போல தனியாக அமர்ந்திருந்தாய். கண்ணசைத்திருந்தால் நண்பர்களை விட்டு விட்டு சீறிப் பாய்ந்து உன்னருகே வந்திருப்பேன். இன்னும் சில நிமிடங்களில் உன்னைப் பிரியப் போகிறோம் என்ற பயம் தொற்றிக் கொள்ளவும் 'மெதுவா சாப்புடுங்க அவசரமில்லை' என நண்பர்களை அவசரமாய்த் தாமதப்படுத்தினேன்.

பிரிய மனமில்லாமல் தான் சென்றேன். கடந்து செல்கையில் பார்த்தாயே ஒரு பார்வை - போரில் பயன்படுத்தும் கடைசி அம்பினைப் போல - தாடியைத் வருடுவது போல் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். இதயம் என் கட்டுப்பாட்டில் இல்லை - நான் பிடித்திருக்கவில்லையெனில் என் இதயம் சங்கிலியை அத்துக் கொண்டு ஓடும் நாயைப் போல உன்னைத் துரத்தியிருக்கும். ‘உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்’. கடந்து செல்கையில் உன் கால் விரல்களை முன்னெச்செரிக்கையாகப் பார்த்தேன். 'ஹாப்பாடா மெட்டி இல்லை'. நீ சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து உன்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டும் நீ எங்கே செல்கிறாய் என. தவறு செய்து விட்டேன். இனி உன்னைப் பார்ப்பேனா என்பது நம் காதலுக்கே வெளிச்சம். ‘நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா கேட்காத வரமா’.

அதன் பின் உன்னைப் பற்றி பெரிதும் சிந்திக்கவில்லை. சொல்லப்போனால் மூன்று நாட்கள் உன் நினைவு துளியும் இல்லாமலே கடந்து போனது.

பின்பு ஒரு நாள் மாலை தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில் உன்னைப் பார்த்தேன். மீண்டும் எதேர்ச்சையே. எதேர்சையைக் கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும். நான் உன்னைப் பார்க்கும் போது நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய். என் பார்வையைக் கலைக்கும் வண்ணம் இன்று உன்னோடு ஒருவன் அமர்ந்திருந்தான். சட்டென தொண்டைகுழி வறண்டுவிட்டது போல் உணர்ந்ததால் எச்சில் விழிங்கினேன். விஜயகாந்தைப் போல கண்களில் நரம்புகள் பாய்ந்து சிவந்து கொண்டிருந்தது. உனக்கும் அவனுக்கும் இரண்டடி இடைவெளி இருந்ததாலும் பேசும் தோரணையை வைத்தும் அவன் உன் காதலனாக இருக்க முடியாது என்று சமாதானம் செய்து கொண்டேன்.

நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன் நீ பார்த்தாய் நான் பார்த்தேன். உன்னைப் பார்ப்பதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அன்று உறக்கம் போனது. ‘விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்’. உனக்காக கவிதை எழுதலாம் என்று எழுந்தேன்.

காதலி
என்ற தலைப்பில்
கவிதை எழுதப் போகிறேன்
கவிதை வேண்டுமானால்
என்னைக் காதலி.

தொடரலாம்...

- த.ராஜன்

No comments:

Post a Comment