கணேச குமாரன், வண்ணநிழலன்
வேதாளத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு ஞாயிறு வேளையின் கொடும் இலக்கியப் பசியைத் தீர்த்துக்
கொள்ள அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது கணேச குமாரனின் 'பைத்திய ருசி' சிறுகதைத்
தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை ருசித்துப் பார்க்கச் சொன்னார். அந்த அனுபவத்தை முழு
தொகுப்பையும் வாசித்து விட்டு எழுதுகிறேன். 'பைத்திய ருசி' கடந்த ஆண்டிற்கான(2014) விகடன் விருதை வென்றது.
கணேச குமாரனின் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு நாவல் வெளிவரப்போவதாகவும், இந்தப் புத்தகக்
கண்காட்சியில் அதைத் தவறவிட வேண்டாமென்றும் சொல்லியிருந்தார்.
பொதுவாக ஒரு நாவலை அணுகும்
முன் முன்னுரை வாசிப்பதை தவிற்க வேண்டுமென்பது என் அனுபவத்தின் மூலம் கற்றுணர்ந்தது.
நம் வாசிப்பனுபவத்தை அது சிதைத்துவிட வாய்ப்புண்டு. அதுவே நாவல் வாசித்து முடித்த பின்,
முன்னுரையை வாசிக்கும் போது வேறொரு பெர்ஸ்பெக்டிவ் கிடைக்கும். அதனாலேயே எப்போதும்
நாவல் வாசித்து முடித்த பின் முன்னுரையும் அந்த நாவலைப் பற்றி பிறர் எழுதிய பதிவையும்
வாசிப்பது வழக்கம். ஆனால் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு வார்த்தையைப் பற்றி இதற்கு முன் அறிந்திராததால்
முன்னுரை வாசிக்க நேர்ந்தது. நேசமித்திரனின் ஆழமான முன்னுரை. இருந்தும் அவர் நடை ஏனோ
ஒட்டவில்லை. வாசிப்பதற்கு
சிரமாக இருந்தது. அவர் முன்னுரையை வாசித்து புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலை முடித்துவிடலாம்
போல தோன்றியது. நாவலை வாசிக்கத் தொடங்கவும் கணேச குமாரனின் நடை, சோர்ந்திருந்த நம்மை
நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. ஆனால் குதூகலமான நாவல் அல்ல. முதல் பக்கம் முதல் கடைசி
பக்கம் வரை வலி. ரண வலி.
சந்துருவிற்கு மூளையில்
ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கின்றது. நாவலில் இரத்தமும் சீழும் மூத்திரமும் மலமும் கண்ணீரும்
வலியும் ஆஸ்பத்திரியின் வாசமும் நிறைந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும்
சந்துருவுடன் தந்தை காளிதாஸ் இருக்கிறார். சந்துருவின் வலியை விட அவன் அருகிலிருந்து
அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கும் தந்தையின் வலி சொல்லி மாளாது. சந்துரு காளிதாசின் வலிகளை
இந்த நாவல் காட்டுகிறது என்று சொன்னாலும், தந்தை தன் மகனின் மீதுள்ள பாசத்தின் உச்சத்தை
தொட்டிருக்கிறார் இந்நாவலில்.
சந்துருவுக்கு ஆபரேஷன்
நடந்துகொண்டிருக்கும் போது அங்கிருக்கப் பிடிக்காமல் அருகிலிருக்கும் சர்ச்சினை நோக்கி
தந்தை ஓடுகிறார்.
பிறந்து ஏழாவது மாதத்தில் அம்மாவை இழந்த சந்துரு அதன் பின்னான நாட்களில்
தன் அணைப்பில் உறங்கும்போது பாலுக்கு ஏங்கிய சந்துருவின் கைகளும் வாயும் அம்மாவின்
நினைவாக தன்னிச்சையாக தன் மார்பினில் காம்பினைத் தேடிய ஞாபகம் வந்ததும் தரையில் மண்டியிட்டிருந்த
காளிதாஸ் வெடித்தழத் தொடங்கினார்.
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்.
இன்னொரு சோறு –
ஆபரேஷன்
முடிந்து சந்துரு வெளிவரும்போது...
காளிதாஸ் சந்துருவை நெருங்கும்போதுதான் கவனித்தார், ஸ்ட்ரெக்சர் அருகிலேயே
ஒருவன் ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தள்ளிக்கொண்டு வந்ததை. சந்துருவின் தலையயைச் சுற்றி மெல்லிய
வெள்ளைநிற பேண்டேஜ் துணி சுற்றப்பட்டு அதன் மறு இரு முனைகளும் அவன் கழுத்துக்குக் கீழே
இணைத்து முடிச்சிடப்பட்டிருந்தது. முகத்தின் மீது மாஸ்க். வலதுகை நரம்பில் ஒரு சலைன்
பாட்டில் இறங்கிக்கொண்டிருக்க இடதுகையிலும் அதேபோல். அவன் கால் பாததுக்கு மேல் உள்ள
நரம்பில் ஒரு வென்ஃப்லான் செட் பொருத்தப்பட்டு அங்கும் ஒரு பாட்டில். சந்துரு தலையிலிருந்து
ஒரு டியூப் வெளியே வந்து அதன் மறுமுனை பம்ப் செய்யப்படும் ப்ளாஸ்டிக் டப்பா ஒன்றில்
இணைக்கப்பட்டிருந்தது.
அவன் மார்பின் இரு காம்புகளின் மீதும் ஈ.சி.ஜி எடுப்பதற்காக ஒட்டப்படும்
எலெக்ட்ரொடெஸ் ரப்பர் அடையாளங்கள். காளிதாசின் காலின் கீழ் உலகம் நடுங்கியது.
"ஐ.சி.யூனிட் கொண்டு போறோம். அங்க வந்து பாத்துகுங்க" என்றபடி ஸ்ட்ரெக்சர்
தள்ளிக்கொண்டு சென்றவர் சொல்ல பின்னாலே ஒரு நர்ஸ் ஏகப்பட்ட ஃபைல்களில் அடங்கிய குறிப்பேடுகளை
எடுத்துக்கொண்டு விரைந்தார். இரு கைகளாலும் முகத்தை ஓங்கி அறைந்தபடி காளிதாஸ் அந்த
பிள்ளையார் கோவில் நோக்கி ஓடினார்.
யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.
விலை ரூ.80/-
நாவலில் சந்துருவின்
நண்பர்களோ உறவினர்களோ இல்லை. இது மட்டும் குறையாகத் தோன்றியது. இந்தத் நாவலுக்கு தேவை
இல்லையென்றாலும் இது போன்ற எண்ணம் வருபவர்களுக்காக ஒரு வரி இணைத்திருந்தார் 'அவர்களுக்கென்று
யாருமில்லை' என்று. அந்த வரியை மட்டுமாவது தவிர்த்திருக்கலாம்.
எல்லாருக்குமே கடைசி
காலத்தில் நோய்வாய்பட்டு சின்னாபின்னமாவதை விட தூக்கத்திலே சுலபமாக உயிர் போக வேண்டுமென்ற
ஆசை இருக்கும். சந்துருவும் இந்தத் துன்பதிலிருந்து நிரந்தர விடுதலை பெறவே எண்ணுகிறான்.
சாக முயன்று, உயிர் போகாமல் அது இன்னும் கூடுதல் துன்பத்திற்கு ஆளாக்கி, அதன் பின்
அவன் தன் தந்தையை எதிர்கொள்ளும் இடங்களிலெல்லாம் நம் இதயம் கணக்கின்றது. அவன் தாகத்திற்கு
தண்ணீர் கேட்கும் சமயத்தில், குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீர் தரக்கூடாது என்று நர்ஸ்
மறுக்கவும், அவன் தாகம் தணிக்க கிளிப் மாட்டப்பட்டிருக்கும் விரல்களால் தன் சிறுநீரைத்
தொட்டு உதட்டை ஈரப்படுத்தும் போது யாருடைய இருதயமும் ஒரு கணம் துடிக்க மறுக்கும்.
கணேச குமாரனின் ஒவ்வொரு வரியிலும் வலியை உணர முடியும். உணர்வுக்கு
மதிப்பு கொடுக்கும் எவராலும் இந்த நாவலை அவ்வளவு அசாத்தியமாக கடந்துவிட முடியாது.
- த.ராஜன்
No comments:
Post a Comment