இத்தொகுப்பிலுள்ள ஆறு
கதைகளும் கடற்புரத்தில் வாழும் மீனவ சமூகத்தின் வாழ்வை அதன் வாசம் துளியும் மாறாமல்
காட்டுகிறது.
ஒரட்டி - பத்தாம் வகுப்பில்
முதல் மதிப்பெண் பெற்றதற்காக அவ்வூரின் பங்குத்தந்தை அவனைப் பாராட்டி பரிசளிப்பதாகக்
தொடங்கும் கதை, எதிர்பாராத விதமாக அவன் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, மூன்று
அக்காக்களை கரை தேற்ற, அன்னையால் வேறு வழியின்றி அவன் வேலைக்கு அனுப்பப்படுவதாக முடிகிறது.
நனைந்த பட்டாசுகள் - இந்தத் தொகுப்பில்
எனக்கு மிகவும் பிடித்த கதை இது. கிறிஸ்துமஸ் இரவு. கென்னாடியின் குழந்தை ஒரு வாரமாக
பட்டாசு கொளுத்துவதைப்பற்றியும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப்பற்றியும் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
கென்னடிக்கும் தன் குழந்தையுடன் இந்தக் கிறிஸ்துமஸைக் கொண்டாட வேண்டுமென்ற ஆசை. ஆனால்
நண்பர்கள் குடிக்க அழைக்கிறார்கள். இது போன்ற தினங்களில் குடிப்பதென்பது அவர்களுக்கு
அலாதியான இன்பம் அல்லவா, மனம் குடியை நோக்கிச் செல்கிறது. கிளம்பும் போது கஷ்டமாகத்
தான் இருந்தது அவனுக்கு. ஆனால் போதை ஏறவும் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. அளவுக்கு மீறி
குடிக்கிறான். போதை தலைக்கேறியிருக்கிறது. ஆட்டோவிலிருந்து இருந்து இறங்கி வீட்டை நெருங்கவும்
பக்கென்றிருக்கிறது அவனுக்கு. வீட்டின் கதவு அவனுக்காக திறந்திருக்கின்றது. முட்டியில்
நாடியைக் கொடுத்து மனைவி அமர்ந்திருக்கிறாள். போதையில் நிற்க முடியாமல் இயலாமையில்
கட்டிலில் மல்லாந்து படுக்கிறான்.
'கட்டிலின் கீழே கொஞ்சம் தள்ளி குழந்தை புதிய உடுப்புடன் பாயில்
உறங்கிக்கொண்டிருக்கிறாள்'. கென்னடி உறக்கத்திலிருந்து எழுந்து முகம்
கழுவ வெளியே வருகையில் வெடித்த பட்டாசுகளின் தாள்கள் சிதறிக் கிடக்கின்றன. அவன் வீடு
முற்றத்திலோ முந்தின நாள் வாங்கிய பாட்டாசுகள் வெடிக்கப்படாமல் பனியில் நனைந்துகிடக்கின்றன. மூன்றே பக்கங்களில் அட்டகாசமான கதை.
மகேசுவரியும் தெக்கு ஆறும்
- செழிப்பாக இருந்த ‘தெக்கு ஆறு’ பணத்தாசையால் அழிந்து நாத்தம் எடுத்துக் கிடக்கின்றது.
மணியின் பால்யகாலத் தோழி மகேசுவரி உடல்நிலை சரியில்லாமல் நலிந்து சாகிறாள். 'கருத்துப்போய் கெடக்க தெக்காத்த பாக்கும்ப வெசம்
தீண்டுனதைப் போலக் கெடந்த மகேசுவரிக்க ஞாபகம் வந்திண்டு இருக்கு' என்று கதை முடிகிறது.
செள்ளு - நன்றாகப் படிக்கும்
மகளைப் படிக்க வைக்க முடியாமல் வாடும் வறீதம்மையின் கதை. கல்வி நிதி கிடைக்குமென்று
சாமியாரைத் தேடிச் செல்கிறாள். ஊர்த் தலைவர்களால் அது மறுக்கப்படுகின்றது. அந்த நிதி
கோவிலை இடித்து சீர் திருத்தும் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. முடிவில் வேறு
வழியின்றி வறீதம்மையின் மகள் மால் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதாக சொல்லும் இடத்தில்
இருவரும் வெடித்தழும் போது, அந்த சோகம் நம்மையும் தொத்திக்கொள்கிறது. இதுவும் ஒரட்டி
கதையும் கிட்டத் தட்ட ஒரே பிரச்சனைகளைக் கையாள்கிறது. ஒரு குடும்பத்தின் வருமானம் திடீரென
தடைபடும்போது அந்தக் குடும்பம் ஸ்தம்பித்துப் போகின்றது. சமூக அவலங்களையும், அவர்களது
அடுத்த சந்ததிகளின் நிலைமை எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருக்குமென்பதையும் இவ்விரு கதைகளும்
உணர்த்துகிறது.
நண்டு - சேசடிமை புற்றுநோயால் இறந்து போகிறான்.
அரசாங்கத்தின் பணத்தாசையால் ஊரிலிருந்து மண்ணள்ளுவதாலேயே புற்று நோயும் தோல் நோயும்
வருகிறதென்பதை ஊர்மக்கள் அறிந்திருக்கின்றார்கள். இருந்தும் அதிகாரத்தினாலும் ஊர் மக்களை
பணத்தின் மீது மோகம் கொள்ளச்செய்தும் அந்த ஊரிலுள்ளவர்களே அந்த வேலைக்கு செல்வதாக கதை
முடிகிறது. சிறுவர்கள் ஒரு நண்டின் உடலில் துணியைக் கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து
விளையாடுகிறார்கள். நண்டின் கால்கள் பிய்ந்து வெந்து சாகின்றது. ஊர் மக்கள் மண்ணள்ள
மண்வெட்டியுடன் கிளம்புகிறார்கள்.
தூச்சம் - இந்தக் கதையை வாசிக்கவும்
இதைக் குறும்படமாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. கமெர்ஷியலாக அல்லாமல் நல்ல
குறும்படம் எடுக்கும் ஆர்வமிருப்பவர்கள் இந்தக் கதையை முயற்சித்துப் பார்க்கலாம். கண்
தெரியாதவன் என்ற காரணத்தினாலே விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாதிருக்கையில், நண்பன் அருமை
நாயகம் மட்டும் இவனோடு சேர்ந்து விளையாடுகிறான் மற்றவர்களைப் பகைத்துக்கொண்டு. இருவரும்
உயிர் நண்பர்கள். அன்னம்மையின் மீது தூச்சம் ஆசைப்படுவதை அவன் தாய் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
வீட்டில் நடந்த சண்டையில் ‘இனி நான் தனியாக இருக்கப் பழகிக்கிறேன்’ என உயிர் நண்பனிடமிருந்தும்
தூச்சம் விலகுகிறான். தூச்சத்தின் முகத்தை சவப்பெட்டியில் அருமை நாயகம் தொட்டுப்பார்க்கும்
இடத்தில் தூச்சத்தின் ஒட்டு மொத்த வலியும் நம் மீது இறங்குகின்றது.
செள்ளு – செல்வராஜ்
பாரதி புத்தகாலயம்
விலை ரூ60
பக்கங்கள் 96
யாரோ ஒருவர் கடற்புரத்தைப்
பற்றி எழுதுவதற்கும் அந்த மண்ணில் வாழ்ந்தவர் அவர்கள் கதைகளை எழுதுவதற்கும் வித்தியாசம்
இருக்கின்றது அல்லவா? ஒவ்வொரு கதைகளின் முடிவிலும் இதயம் கனக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
கதை முழுவதும் வட்டார வழக்கிலே இருந்தது மிகப்பெரிய குறையாகப்படுகிறது. குமரி மண்ணின்
வட்டார வழக்கு தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான். முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன்
குறிப்பிட்டது போல உரைநடை தவிர்த்து மற்றவற்றை பொதுத் தமிழில் எழுதியிருந்திருக்கலாம்.
இவர் வேறேதும் கதைகள்
எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தேட வேண்டும்.
- த.ராஜன்
No comments:
Post a Comment