உறவுகளுக்குள் நடைபெரும் ஆகப்பெரிய சண்டைகள் பலவற்றில்
அநேகமானவை உப்பு சப்பில்லாத விஷயங்களால் தான் என்று நான் சொன்னால் அதை யாரும் மறுக்கத்
துணிய மாட்டீர்கள் என நம்புகிறேன்.
A
Separation
- ஈரானியத் திரைப்படம். உலக சினிமா என்ற உடன் - கதவை இடது கையால் மூடுவது இதைக் குறிக்கின்றது
- இரத்தம் வளைந்து வளைந்து போவதாகக் காட்டியது இதைக் குறிக்கின்றது - இப்படி அப்படி
அது இது நொட்டு நொசுக்கு என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை தற்போது. ஈரானில் என்றில்லை
நம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் அன்றாட விஷயம் தான் கதைக்களம் என்பதால் மனதிற்கு
அருகில் வைத்து ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்க முடியும். திரைப்படம் என்பதால் ரசனை!
விவாகரத்திற்காக கோர்ட்டில் வாதிடுவதாக கணவன் மனைவியின்
வாக்குவாதத்துடன் தொடங்குகிறது திரைப்படம். அவர்களுக்கு பதினோரு வயதில் ஒரு பெண் குழந்தை.
நாயகனுக்கு நோய்வாய்ப்பட்ட வயோதிகத் தந்தை. மனைவி இல்லாததால் தந்தையைப் பார்த்துக்கொள்ள
நியமிக்கப்பட்டிருக்கும் பெண் (கர்ப்பமான பெண்). அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால்
அல்லது தவறாக புரிந்துகொள்ள நேர்வதால் இவர்களுக்குள் நிகழும் பிரச்சனைகளை, உணர்வுகளை
எதார்த்தமாக சித்தரிக்கும் அற்புதம் இப்படம்.
முக்கியமான பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கின்றது.
விருதுகளின் பட்டியல் விவரங்களுக்கு விக்கியை நாடவும்.
இரண்டாம் உலகம் திரைப்படத்தில் அப்பாவிற்கு குண்டி
கழுவிவிடும் காட்சியைக் கண்டு கண் கலங்கியது ஞாபகம் வருகின்றது. இது போன்றதொரு காட்சிகளை
செல்வராகவன் தவிர வேறு யாரும் தமிழில் நிகழ்த்த முடியாது எனத்தோன்றியது அப்போது. தன்னைப்
பார்த்து முகம் சுளிக்காமல், எந்தவித ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகாமல் தன் வாழ்வின்
கடைசிக் காலங்களைக் கழிக்கும் முதியோர்கள் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இப்படி
வாய்த்துவிடும். இப்படத்தில் தந்தையை மகன் கவனித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் உச்சம்.
வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத் திட்ட நேர்ந்து
பின் தந்தையைக் குளிப்பாட்டும் பொழுது தந்தையின் முதுகில் முகம் புதைத்து மகன் அழும்
காட்சி உன்னதத்தின் உச்சம். படத்தின் இறுதியில் நாயகனின் மகளும் வேலைக்கார பெண்ணின்
மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இரு நொடிகள் உன்னதத்தின் அடுத்த உச்சம். இதுவரை
பார்க்காதவர்கள் தவரவிடாதீர்கள்.
குடும்பங்களில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை
இவ்வளவு எதாரத்தத்துடன் சினிமாவாக்க எப்படி முடிகிறது அவர்களால்?! இது ஏன் ஓரளவு கூட
தமிழில் சாத்தியமாகவில்லை என்பது மட்டும் புரிய மாட்டேனென்கிறது. உலக சினிமா குறித்து
பேசும் பலரும் கூறும் வசனம் இது. அடுத்த சந்ததியினராவது இந்த வரியைப் பயன்படுத்தாமல்
போக வேண்டுகிறேன்.
- த.ராஜன்
(கடந்த ஞாயிறன்று பனுவலில் இப்படத்தை திரையிட்டார்கள்.
இதில் மெம்பர் ஆகும் பொருட்டு சிறந்த முறையில் திரையிட ஏற்பாடு செய்யலாம் என்றார் செந்தில்
அண்ணன். சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்)
No comments:
Post a Comment