Tuesday, 25 November 2014

கருக்கலைப்பு

பெண்களைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும் போதும் தோன்றுவதால் எனக்கு வண்ணத்துப்பூச்சிகளையும் பிடிக்கும். சிறு வயதில் எட்ட நின்று அதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பேன். ஒரு நாள் (அன்று தான் நான் வயதுக்கு வந்தேன் என்று நினைக்கிறேன்) திடீரென ஒரு வண்ணத்துப்பூச்சி பயந்து பயந்து காற்றில் மேலும் கீழும் ஆடியவாறே என் அருகே வந்து இதயத்தின் மீது அமர்ந்து பின் நுகர்ந்து பார்த்துவிட்டு சலிப்புடன் சென்றது. அந்த நாள் முதல் அது வருவதும் நுகர்ந்து பார்த்துவிட்டுச் செல்வதும் தினம் தினம் நடந்தது.

இதுவரை வண்ணத்துப்பூச்சியை ஒரு பூவின் மீது அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன் - அபூர்வமாக வேறொரு வண்ணத்துப்பூச்சியின் மீது அமர்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு வேளை என் இதயத்தை பூ என்று நினைத்துவிட்டதோ? இல்லை வேறொரு வண்ணத்துப்பூச்சி என்று நினைத்துவிட்டதோ?

பின்பொருநாள் அந்த அதிசயம் நடந்தது.

காற்றில் மிதந்து வந்த வண்ணத்துப்பூச்சி அதிசயமாய் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு இதயத்தின் மீது அமர்ந்து தேன் பருக ஆரம்பித்தது. அன்று தான் அங்கே தேன் சுரந்திருக்கின்றது. அன்று தான் அவள் என் இதயத்தில் குடியேறியிருந்தாள்.

அன்று முதல் இரத்தத்தை தேனாகக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை அது தேன் பருகும் போதும் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் பரவச நிலையில் இருந்தேன். நாளாக நாளாக கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தது. தேன் பருகிய உற்சாகத்தில் என் முகத்தில் வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் சிறகடித்து என் முகமும் வண்ணமயமானதாக உணர்ந்தேன். நானும் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறிக்கொண்டிருந்தேன். சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருந்தது. சில நேரங்களில் அது சுமையாகத் தோன்றினாலும் கூட எனக்கு பிடித்திருந்தது. பிரசவத்தில் தாயின் வலியைப் போல.

என் இதயம் இனி நிரந்தரமாக அவளுக்குத் தான் என்று நினைத்திருந்தேன். பட்டாவை அவள் பெயருக்கெல்லாம் மாற்ற எண்ணியிருந்தேன். என்ன பிரச்சனை என்று புரியவில்லை. கேட்டதற்கு கழிப்பறை சரியில்லை என ஏதோ சொல்லி காலி செய்து கிளம்பிவிட்டாள்.

வாடகைக்கு கிடைக்குமா என சிலர் இப்போது கேட்கிறார்கள். வீட்டிலோ வேறொருத்தியின் பெயருக்கு பட்டா போடப் பார்க்கிறார்கள்.

வண்ணத்துப்பூச்சிகள் இப்போது நுகர்ந்து பார்க்கக் கூட வருவதில்லை.


- த.ராஜன்

No comments:

Post a Comment