Friday, 2 October 2015

புலி பருகிய அத்திப்பழச்சாறு

நண்பர் புலிக்கு (தீவிர விஜய் ரசிகர் என்பதால் புலி என்றே அழைப்போம்) இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம். அவரது காதலி – வருங்கால மனைவி ஏதோ வார இதழில் படித்து இந்தத் தகவலைப் புலியிடம் சூசகமாகச் சொல்லியிருக்கிறாள். அதாவது அத்திப்பழச்சாறில் பல்வேறு விசேஷ குணங்கள் அடங்கியிருப்பதாகவும் அதைத் தினம் பருகினால் திருமண வாழ்வு செழிக்கும் என்றும். புலி தனக்கு திருமணம் என்று நண்பர்களிடம் சொல்லவும் அனைவரும் சொல்லிவைத்தார் போல அத்திப்பழச்சாறு பருகச் சொல்லவும் புலியின் தீவிரம் விரித்தியடைந்தது.
ஆக காலைக்கடன்களின் பட்டியலில் அத்திபழச்சாறையும் சேர்த்துக்கொண்டார் புலி.
இக்கதையை எழுதுவதற்கு காரணம் அத்திப்பழச்சாறின் ப்ராண்ட் அம்பாசிடராக புலி மாறியது தான். புலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களைக் கொடிய முறையில் மனச்சலவை செய்து கொண்டிருந்தார். மாதுளை சாப்பிடச் சொல்லி சத்யா சொல்ல, அதை மறுத்து அடுத்த நொடியே ‘மை வோட் இஸ் பார் ஃபிக்’ என்றார் புலி. மாதுளை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புலி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. ‘பார்த்து புலி. தினமும் அத்திப்பழச்சாறு சாப்பிட்டு இரத்தத்திற்கு பதில் வேறு எதுவும் ஓடப் போகிறது’ என்ற கலாய்ப்பிற்கெல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. கண்ணன், ‘தன் தாத்தாவின் ஊரில் அத்திப்பழம் நுகர்ந்து பார்க்கக் கூட கிடைக்காது என்றும் அவருக்கு பதினேழு குழந்தைகள் என்றும் சொல்லி, அத்திப்பழச்சாறு பருகாமலே இது எப்படி சாத்தியமாயிற்று’ என்று கேள்வி எழுப்பினான். புலி சிரித்து மழுப்பினார்.
அத்திப்பழச்சாறு தாயார் செய்து தரும் ஜூஸ் மாஸ்டரை தெய்வத்திற்கு நிகராக நடத்தினார் புலி. ‘ஜாதா ப்ரூட். சோட்டா பானி’ என்னும் மந்திரத்தை தினமும் ஜூஸ் மாஸ்டரின் காதில் ஓதுவது வழக்கம். தினமும் இவர் பருகுவதைப் பார்த்து ஜூஸ் மாஸ்டர் என்ன நினைத்தாரோ நாளாக நாளாக நீரின் அளவு அத்திப்பழச்சாறில் அதிகமாகிக்கொண்டிருந்தது. ‘கல்யாணத்திற்கு பின் ஏதேனும் நேர்ந்தால் ஜூஸ் மாஸ்டர் தான் பொறுப்பு. இந்தப் பாவம் ஜூஸ் மாஸ்டரைச் சும்மா விடுமா?’ என்று வெறி கொண்ட வேங்கையானர் புலி. புலி கோபப்பட்டு அன்று தான் பார்க்கிறோம். கோபம் என்பதை விட அறச்சீற்றம் எனலாம். எப்படியாவது தான் அத்திப்பழச்சாறு பருகுவதன் காரணத்தை ஹிந்தியில் ஜூஸ் மாஸ்டரிடம் சொல்லிவிட வேண்டுமென்று ஆவேசமானார்.
தினமும் அத்திப்பழச்சாறு பருகுவதால் நேரும் பக்கவிளைவை புலி அறிந்திருக்கவில்லை. அது பற்றி புலியின் காதலி வார இதழில் வாசித்த ‘அத்திப்பழச்சாறும் ஆண்மை வீரியமும்’ என்ற கட்டுரையிலேயே ஒரு ஸ்டார் போட்டு கீழே  குறிப்பிடப்பட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
அந்தக் குறிப்பு:



அக்குறிப்பு இருந்த பகுதியைக் காதலியின் தாத்தா காது குடையக் கிழித்துச் சென்றதால் ஆவணப்படுத்த இயலவில்லை. மன்னிக்கவும்.
- த.ராஜன்

No comments:

Post a Comment