Monday 21 September 2015

மீனெறி தூண்டில்

ஆதிக்கு நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். சிவா ஏற்கனவே பதினோரு பெண்களை இரு தலையாகக் காதலித்திருப்பதாகவும் தற்போது காதலித்துக் கொண்டிருப்பது பதினான்காவது பெண் என்றும் சிவாவின் காதல் கதையினை ஆதி தன் காதலி மாயாவிடம் வெகு சுவாரசியமாக சொல்லிக்கொண்டிருந்தான். ஏதோ நினைவு வந்தவனாக, சிவா இத்தனை பெண்களைக் காதலிக்கிறானே ஒழிய அவன் மிகவும் கண்ணியமானவன் என்றும் அவனது சுண்டு விரல் நகம் கூட எந்தப் பெண்ணின் மீதும் பட்டதில்லை என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாயா பதறியவளாக, சிவாவோட பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அவனது நட்பை அறவே துண்டித்து விட வேண்டுமென்று காதலோடு கட்டளையிட்டாள் அல்லது எச்சரித்தாள் என்றும் கொள்ளலாம்.

oOo

கோகுல் (ப்ளே பாய், மன்மதன், தன் கற்பை சிறு வயதிலேயே இழந்தவன் இத்யாதி இத்யாதி) ஆதியை என்றுமில்லாமல் தொலைபேசியில் அழைத்தான். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் எனினும் படிப்பிற்குப் பின் தேவையில்லாமல் பேசிக்கொள்வதில்லை. காரணமே இல்லாமல் ஒரு பையனும் இன்னொரு பையனும் பேசிக்கொள்வது அனாவசியமானது என்று இருவருமே நம்புபவர்கள்.

‘திருமணத்திற்காக எனக்கு நானே பெண் பார்க்கிறேன். அதற்காக நாளை காலை ஐந்து மணிக்கு உன் வீட்டிற்கு வருகிறேன். குளிப்பதற்காக மட்டும். ஓரிரு மணி நேரத்தில் கிளம்பி விடுவேன்’ என்றான். ஆதிக்கோ ஒன்பது மணி தான் அதிகாலை. இருந்தாலும் பெண் பார்க்கும் சமாச்சாரம் என்பதால் மனதை தயார் செய்து கொண்டான். பத்து பத்து நிமிட இடைவெளிகளில் மூன்று முறை அழைத்து எந்த பேருந்தில் வருவது என மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை வேறு வேறு விதமாக கேட்டு சரியாக பத்து மணிக்கு வந்து சேர்ந்தான். நேராக பெங்களூரில் இருந்து இங்கு வருவதாக இருந்ததாகவும் பின் தான் பார்க்கவிருக்கும் பெண்ணிற்கு, அவளின் உடலின் மேல் அதிக அக்கறை காரணமாக காலையிலே எழுந்து நடை பயிற்சி மேற்கொள்வதால் பெசன்ட் நகரில் சந்திப்பிற்கு முன் சந்திப்பு நிகழ்த்தி விட்டு வந்ததாகச் சொன்னான்.

‘பெண் வீட்டிற்கு நீ மட்டும் தனியாகச் சென்று பார்க்க போகிறாயா’ என்று அசட்டுத்தனமாக எழுந்த கேள்வியை நல்ல வேளை ஆதி கேட்கவில்லை. ஈஸியாரில் ஓர் அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், அங்கு செல்ல அவளே கார் எடுத்து வருவதாகவும், அவளுக்கு வோட்கா தனக்கு பிராண்டி வாங்கி வைத்திருப்பதாகவும் கோகுல் பெருமினான். ஆதிக்கு வாயடைத்துவிட்டதால் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியவில்லை.

சரக்கு மட்டும் தானா அல்லது வேறு எதுவும் உண்டா என ஆதி கேட்டதற்கு மணமுடிக்கப் போகும் பெண் என்பதால் இது போன்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் பேசிப் பழக மட்டுமே செல்வதாகவும் கூறிச் சென்றான்.

பின்பொருநாள். அன்று ரெஸார்ட்டில் அப்பெண் இவன் முன் ஆசையைத் தூண்டும் விதமாக நடந்தும் இவன் தவறாக எதுவும் நடந்துகொள்ளக் கூடாதென்று வைராக்கியமாக இருந்ததாகவும், நமக்குள் இன்னும் எதுவும் உறுதி ஆகவில்லை என்பதால் அதற்குள் எதுவும் வேண்டாமென்று அவளுக்கு அறிவுரை கூறியதாகவும், ‘இப்போது எனக்கு உன் காதல் வேண்டும் வருங்காலம் பற்றி எனக்கு கவலையில்லை’ என்று அப்பெண் கூறிய வார்த்தைகளில்  இருந்த நியாயம் பிடித்துப்போகவே இருவரும் இருமுறை சல்லாபத்தில் ஈடுபட்டதாகச் சொன்னான். கூடவே இது போன்ற பெண்ணை மணக்க மனமில்லாமல் தற்போது வேறு பெண் பார்த்திருப்பதாகச் சொன்னான். ஒவ்வொரு விஷயம் சொல்லச் சொல்ல ஆதி ‘யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல் யூ ஆர் மை ரோல் மாடல்’ என பிதற்றிக்கொண்டிருந்தான் தன்னையுமறியாமல்.

அழைப்பைத் துண்டிக்கவும் அழகிய பெண் கோகுலின் கன்னம் உரசியபடியிருக்கும் புகைப்படம் ஒன்றை ஆதிக்கு அனுப்பி வைத்திருந்தான். கூடவே ‘ஷீ இஸ் மை நியூ கேர்ள் பிரண்டு’ என்றொரு காப்ஷன்.

oOo

ஆதிக்கோ நண்பர்களுடன் பேசுவதை தன் காதலியிடம் அப்படியே சொல்வது ஒரு பொழுது போக்கு. சுயதம்பட்டம். மாயாவிடம் கோகுலின் கதையைச் சொல்லும் போது ‘யூ ஆர் மை ரோல் மாடல்’ என்ற தனது உணர்ச்சிமிக்க வசனத்தை கத்தரிக்க மறந்துவிடக்கூடாது என நினைவில் வைத்துக்கொண்டான். சிவாவிற்கே மாயா அப்படியென்றால் இப்போது கோகுலின் கதையைச் சொன்னால் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவாள் என்ற சந்தேகம் எழுந்தது.

எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்றும் அவன் ஒரு ஞானப் பழம் என்றும் ஹரியின் கதையை மாயாவிடம் முன்பொருநாள் சொன்ன போது, ஹரியைத் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை நினைத்து ‘அய்யோயோயோயோ பாவம்’ என்று மாயா வருந்தியது குறிப்பிடத்தக்கது.

- த.ராஜன்

பின் குறிப்பு: இக்கதைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்திருந்தால், ‘சம்பந்தம் துளியும் இல்லை’ என்பது தான் பதில்.

No comments:

Post a Comment