Tuesday, 1 September 2015

மாயக்கண்ணாடி - 2


oOo

The Diving Bell and the Butterfly (2007) - Julian Schnabel

திடீர் மாரடைப்பிற்கு பின் அவனது உடலில் எதுவும் வேலை செய்யவில்லை, ஒரே ஒரு கண்ணைத் தவிர. கண்ணிமைகளை ஒரு முறை இமைத்தால் எஸ், இருமுறை இமைத்தால் நோ. இவ்வாறு உரையாடி ஒரு புத்தகம் எழுதுகிறான். புத்தகம் வெளி வந்த சில நாட்களில் இறந்தும் போகிறான். பேஸ்ட் ஆன் அ ட்ரூ ஸ்டோரி. இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த இரு விஷயங்கள் - ஒன்று அவன் கண்ணின் வழியே காண்பதாக படமாக்கியிருப்பது - இரண்டவாது அவன் மனதின் குரலை நம்மால் கேட்க முடியும் என்பது.


Gloomy Sunday (1999) - Rolf Schubel

தன் காதலிக்காக ஒரு பாடலைக் கம்போஸ் செய்கிறான். அப்பாடலைக் கேட்பவர்களுக்கு தன் உணர்வுகளை எங்கோ இட்டுச்சென்று தற்கொலை செய்யத் தூண்டுகிறது. இன்ட்டரெஸ்டிங்லஇப்படத்தின் நாயகி - கொள்ளை அழகு! அழகின் அதிசயம்! இவளுக்காக மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.


Amadeus (1984) - Milos Forman

இசையைப் பெரிதும் நேசிப்பவர்கள் தவறவிடக்கூடாத முக்கியமான திரைப்படம். மொஸார்டின் வாழ்வைப் பற்றிய காவியம் இப்படம். மொஸார்ட், நான்கு வயதில் முதல் பாடலைக் கம்போஸ் செய்கிறான். பில்லியர்ட்ஸ் மேஜையில் பந்தை உருட்டி விட்டபடி சர்வ சாதாரணமாக ஏற்கனவே அவன் மூளையில் பதிந்திருக்கும் பாடல்களை டிக்டேட் செய்வது போல் கம்போஸ் செய்கிறான். ஒரு நோட் கூட அடித்து திருத்தும் வழக்கம் இல்லை. பல நூறு பாடல்களை இயற்றிவிட்டு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இறந்து போகிறான். மொஸார்ட்டாக நடத்திருக்கும் நாயகனின்  (Tom Hulce) உடல் மொழி அபாரம். படம் பார்த்தது முதல் இன்று வரை அவரைப் போலவே கைகளை அசைத்துக்கொண்டிருக்கிறேன் :) இப்படத்தை இசைக்காவியம் என வர்ணிக்கிறார் எஸ்.ரா.


The Piano (1993) - Jane Campion

இதுவரை என் வாழ்வில் பார்த்த சிறந்த/பிடித்த திரைப்படங்களின் பட்டியலில் இதற்கு முதன்மையான இடம் உண்டு. நாவலில் 'கன்னி'யைப் போல.

'இப்போ நீங்க கேக்றது என்னோட குரல் இல்ல, என் மனசோட குரல். ஆறு வயசுல இருந்து நான் ஊமை ஆயிட்டேன். அதுக்கான காரணம் என்னனு எனக்கே தெரியாது. ஆனா நான் ஊமையா இருக்றேன்னு ஒரு நாளும் நெனச்சது இல்ல. ஏன்னா என்கிட்டே பியானோ இருக்கு'. இவ்வாறு படம் தொடங்குகின்றது.

கணவனை இழந்த ஏடாவிற்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை - ஃப்ளோரா. பிறருடன் பேசுவதற்கு சைகை மொழி. அதை பிறர்க்கு மொழிபெயர்ப்பவளாக ஃப்ளோரா. ஏடாவிற்கு இருப்பத்தைந்து வயது இருக்கலாம். மேலே சொன்ன வசனம் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியின் குரலில் வருகிறது. அது ஒரு பெண்ணின் குரலாக அல்லாமல் ஒரு சிறுமியின் குரலில் தொடங்குவதிலேயே உச்சம் தொடுகிறார் இயக்குனர். ஏடா ஆறு வயதில் தான் பேசிய கடைசி குரலாக இருக்கலாம். நினைவிலிருக்கும் தன் குரல்.
இப்படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பதை பிற்பாடு அறிந்தேன்.

Jane Campion is a New Zealand screenwriter, producer, and director. Campion is the second of four women ever nominated for the Academy Award for Best Director and is also the first female filmmaker in history to receive the Palme d'Or, which she received for directing the acclaimed film The Piano (1993), for which she also won the Academy Award for Best Original Screenplay – Wiki.

இசையை உணர முடியுமேயன்றி யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஊமைகளின் மொழியும் அப்படித்தான். வாய் பேச முடியாத ஏடா(ADA), இசையின் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். பேச்சு அவமதிக்கப்படுவதைக் கூட ஏற்றுக்கொள்பவர்கள், தன் உணர்வு சிறிதும் சீண்டப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். பெரும்பாலும் ஒருவரின் உணர்வை அலட்சியம் செய்பவர்கள், அந்த உணர்வை புரிந்துகொள்ளாதவர்களாகவோ அல்லது  புரிந்துகொள்வதற்கு அவசியம் இல்லை என்றெண்ணுபவர்களாகவோ இருப்பர். இங்கே ஏடாவின் மொழி இசை - பியானோ. அவளைச் சுற்றியிருப்பவர்கள் இவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவா போகிறார்கள்?

வாய்ப்பமையும் போது இப்படம் பற்றி விரிவாக எழுத அவா. உங்களைப் பார்க்கத் தூண்டுவதற்காக இக்குட்டி அறிமுகம்.

- த.ராஜன்

No comments:

Post a Comment