நயன்தாரா தான் முதலில் என்னைப் பார்த்து சொன்னது - என் முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக முடி அடர்த்தியாக இருந்தது. அவள் சொன்ன பிறகு தான் அதை நான் கவனிக்கிறேன். திட்ட ஆரம்பித்துவிட்டாள்.
"எனக்கு இப்படி இருந்தா பிடிக்காதுன்னு தெரியும்ல? அப்புறம் ஏன் இந்த மாதிரி ஸ்டைல்ல தாடி வைக்கிற?"
"இல்லடா செல்லம். எனக்கே இப்படி இருக்றது தெரியாது. நீ சொன்ன அப்புறம் தான் நானே கவனிக்றேன்"
oOo
கல்யாண மண்டபம் போன்ற
நீளமான கட்டிடத்தின் பக்கவாட்டில் நானும் என் பள்ளி நண்பன் சுதர்சனும் இருந்தோம். அந்தக் கட்டிடத்தின்
பக்கவாட்டில் சீரான இடைவெளியில் வேம்பு நட்டுவைத்திருந்தார்கள். ஒரு வேப்பமரத்தின்
அடியில் அவன் தோசை சுட்டுக் கொண்டிருந்தான்.
"என்ன தோசைடா வேணும்?"
என்றான்.
"ஏ ஆர் ரஹ்மான்
தோசை சுட்டு வைடா. எனக்கு ரொம்ப அவசரம். சுச்சூ போய்ட்டு வரேன்"
அந்தக் கட்டிடத்தின்
கடைக்கோடியில் ஏதோ ஒரு வங்கியின் ஏடிம் இருந்தது. அதற்குள் இரண்டு பெண்கள் பணம் எடுத்துக்
கொண்டிருந்தார்கள். ஒரு பெண் எடுத்துக் கொண்டிருந்தார் மற்றொருவர் அதைப் பார்த்துக்
கொண்டிருந்தார். அவர்கள் என்னைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
பணம் எடுக்க வரிசையில் நிற்பது போல் நின்று அவசரமாகக் கழித்தேன். இரு கைகளையும் பேண்ட்டில்
துடைத்துவிட்டு தோசை சாப்பிட வந்தேன். அதற்குள் அவன் இரண்டு தோசை சுட்டு வைத்திருந்தான்.
ஒரு ஏ ஆர் ரஹ்மான் தோசை, ஒரு யுவன் ஷங்கர் ராஜா தோசை.
"டேய் வெண்ண. எனக்கு
தான் யுவன் ஷங்கர் ராஜா தோசை பிடிக்காதுல? அப்புறம் ஏன்டா?" என்றேன் கோபமாக.
"புதுசா ட்ரை பண்ணிருக்கேன்டா"
யுவன் ஷங்கர் ராஜா தோசையை
சாப்பிட ஆரம்பித்தேன். ராம் படத்திலிருந்து ஆராரிராரோ பாடல் ஒலித்தது.
"டேய் இது ஏற்கனவே
வந்த பாட்டு தானடா?"
“அதே மாதிரி இல்லாம,
கொஞ்சம் எஃபெக்ட்ஸ்லாம் சேத்துருக்கேன். சாப்ட்டு பாரு”
கொஞ்சம் சட்னியை நன்றாக
தோய்த்து சாப்பிடும் போது, புதிதாக சேர்த்திருந்த எஃபெக்ட்ஸ் எல்லாம் தெளிவாகக் கேட்டது.
oOo
அதே இடத்தில் இப்போது
அடுப்பெல்லாம் இல்லை. என் முன்னே என்னுடன் பணிபுரியும் மைத்ரேயா வந்து நின்றார். அல்லி
அர்ஜூன், ட்ராகன் போன்று நடித்த படம் ஒன்று வெளிவந்திருப்பதாக சொன்னார். அதைக் கேட்டு
ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும் போதே என் முன்னே ட்ராகன் அல்லி அர்ஜூன் வந்து நின்றார்.
வாயெல்லாம் உப்பி, உடல் முழுக்க கருப்பு ரோமங்களாக இருந்தது.
"மைத்ரேயா, ட்ராகன் மாதிரி இல்லயே. குரங்கு மாதிரில இருக்கு" என்றேன்.
அல்லி அர்ஜூன் உடனே ட்ராகன்
போல ஓடிக் காண்பித்தார். குரங்கு போன்றே இருந்தது.
அடுத்த நொடியில் ஸ்கிரீனில்
அல்லி அர்ஜூன் இல்லை. நானும் மைத்ரேயாவும் மட்டும் தான்.
oOo
"மைத்ரேயா, அப்படியே
அச்சு அசல் குரங்கு மாதிரி தான் இருக்குது" என்று கூறி அதே ஸ்டைலில் பவ்லிங் போட்டுக்
காண்பித்தேன்.
நான் பெளவ்லிங் போட்டுக்
காண்பிக்கவும் அங்கிருந்து இருபது பேர் எனக்கும் 'பெளவ்லிங் போடு' என்று பேட்டைத் தூக்கிக்
கொண்டு ஓடி வந்தார்கள்.
ஒருவனுக்கு பெளவ்லிங் போடவும், அவன் அடித்த பந்து முள் வேலியைத் தாண்டி விழுந்தது. அதை எடுப்பதற்கு செல்லவும் பரம்ஸ் அடித்த பந்தும் அதே முள் வேலியைத் தாண்டி விழுந்தது.
பரம்ஸ் "ராஜன், அந்த பந்தையும் எடுத்து போட்ரு" என்றார்.
நான் செருப்பேதும் அணிந்திருக்கவில்லை.
"யாராவது செருப்பு கொடுங்களேன், ஒரே முள்ளா இருக்கு" என்றேன்.
யாரோ ஒருவன் "இத
யூஸ் பண்ணிக்கோ" என்று தூக்கி வீசினான். ஒன்று பாரகன் செருப்பு, இன்னொன்று வேறு
ஏதோ இருபது ரூபாய் செருப்பு. இரண்டும் பல வருடங்கள் உபயோகித்து ஊக்கினால் தைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதைப் போட்டுக்கொண்டு
முள் வேலியைத் தாண்டி பந்தை எடுப்பதற்காகச் சென்றேன். சாக்கடையில் செருப்பு மாட்டிக்
கொண்டு பிய்ந்து விடுமோ என்று நினைத்தேன். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. ஒரு பந்தைக்
கண்டு கொண்டேன். ஆனால் முட்டை போண்டாவில் முட்டையைச் சுற்றி இருக்கும் கடலை மாவைப்
போல பந்தைச் சுற்றி மலம் இருந்தது. யக். முகத்தை அஷ்ட கோணத்தில் சுழித்துக் கொண்டு,
இரண்டு விரல்களால் தூக்கிக் காட்டி, "இத இனி யூஸ் பண்ண முடியாது" என்று சொல்லிவிட்டு
இன்னொரு பந்தை எடுக்கச் சென்றேன்.
அதை எடுக்கச் செல்கையில்
கால் வழுக்கி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தேன். விழுந்து புரண்டேன். விழுந்து
புரண்ட பின் தான் அது சாக்கடை அல்ல மலம் என்று புரிந்தது. பின்புறம், புறங்கை எல்லாம்
மலம். வாயின் ஓரத்திலும். துப்பியபடியே அருகே இருந்த கதவைத் திறந்தேன். இரண்டு பேர்
உட்கார்ந்திருந்தார்கள். "என்னப்பா என்னாச்சு?" என்றார்கள்.
"வாயெல்லாம் ஆயிடுச்சுணே.
கழுவணும்ணே” என்றேன் கண்களில் நீர் முட்ட.
"இந்த பக்கம் பைப்
இருக்கு பாருப்பா. கழுவிக்கோ" என்றார்.
அவர் சுட்டிய இடத்திலிருந்த
பைப்பைத் திறக்கவும் திடுக்கிட்டு விழித்தேன். மணி காலை 5.08.
தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. ஏனோ நீர் அருந்த மனம் வரவில்லை.
- த.ராஜன்
எனக்கு கனவு வராத நாட்களே கிடையாது. அனேக பேருக்கு அது ஏனோ நினைவில்
இருப்பதில்லை. அவ்வப்போது நான் கண்ட கனவை நண்பர்களிடம் சொல்லும் போது சுவாரசியமாக இருப்பதாகத்
தோன்றியது. கனவு பற்றிய எண்ணற்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
என்ன தான் பல்வேறு விளக்கம் கொடுத்தாலும் கனவுலகம் விசித்திரமானது தான். சுவாரசியமான
பல கனவுகளைத் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன் இந்தப் பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப்
பொறுத்து. பிகு: இந்தப் பதிவில்(கனவில்) நான் குறிப்பிட்ட எதுவும் கற்பனையல்லை. அனைத்துமே
கனவில் கண்டது.