Tuesday, 17 February 2015

கன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்

காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது இறையனுபவம்
காதல் என்பது ஒரு குதூகலம்
காதலுக்கு காலம் கிடையாது
எந்த சொற்களாலும் உணர்த்திவிட முடியாதது அது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது
- தேவதேவன்

'கன்னி' நாவலில் எந்த அளவிற்கு காதல் கொண்டாடப்படுகிறதோ அதைப் போலவே 'கன்னி' நாவல் மீதும் அதன் வாசகர்கள் காதல் கொள்வார்கள்.  வாசகசாலையின் மூன்றாம் நிகழ்விற்காக 'கன்னி' நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். காதலர் தின சிறப்பு நிகழ்வாக. நாவல் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்று கவிஞர் சாம்ராஜ் கூறினார். கொண்டாடப்படவேண்டிய நாவலையும் எழுத்தாளரையும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது வருத்தமான விஷயம். சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களின் பேருதவியால் இந்த நாவல் பரந்த கவனம் பெற்று, தற்போது இரண்டாம் பதிப்பும் வந்திருப்பது சற்று ஆறுதலான செய்தி.

வாசிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் தவர விடக்கூடாத முக்கியமான புத்தகம் இது. இதுவரை வாசிக்காதவர்கள் நிச்சயம் வாங்கி முயற்சித்துப் பாருங்கள்.


கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை – 380/-

கிருபா பற்றி ஜெயமோகனின் கூற்று: ஜெ.பிரான்ஸிஸ் கிருபா தமிழின் இன்றைய மிக முக்கியமான இளம்படைப்பாளி. சொல்லப்போனால் தனக்கென தனி புனைவுமொழி கொண்ட சமகால இளம்தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவரே. பித்தின் வேகத்தை அபாரமான சொல்லாற்றலால் பிந்தொடரும் வல்லமை கொண்டவர் கிருபா. அவரது நாவலான ‘கன்னி’ [தமிழினி வெளியீடு] இதற்கு சிறந்த உதாரணம். - ஜெயமோகன் (September 22, 2008)

வாசகசாலையின் இந்நிகழ்வைக் கேள்விப்பட்டவுடன் அருணைத் தொடர்பு கொண்டு 'எப்படியாவது கிருபாவ நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வாங்க' என்றேன். 'எதாச்சும் எடுபுடி வேல இருந்தாலும் சொல்லுங்க. நான் பண்றேன்' என்றேன். அவருக்கு எப்படித் தோன்றியது என்று தெரியவில்லை, 'வாசகர் பார்வைல நீங்க பேசுறீங்களா' என்றார். இதற்கு முன் எந்த வித அனுபவமும் இல்லையெனினும் எதுவும் யோசிக்காமல் 'கண்டிப்பா. அது என்னோட பாக்கியம்' என்றேன்.

ஆக மேடையேறி புத்தகம் பற்றி பேசும் முதல் வாய்ப்பு கிடைத்தது.


அந்நிகழ்வில் நான் பேசிய உரை. முதல் உரை :)

கன்னி. என்னோட முதல் உரையும், முதல் உரையோட முதல் வார்த்தையும் கன்னியா இருக்றதுல ரொம்ப சந்தோஷம்.

எல்லாருக்கும் வணக்கம்.

லாஸ்ட் இயர் தான் கன்னியோட அறிமுகம் கெடச்சது. கன்னி வாசிச்ச அப்புறம் ஃபேஸ்புக்குல இல்ல வேற எங்கயோ கன்னி பத்தி யார் பேசினாலும் அப்டியே பரவச நிலைக்கு வந்துடுவேன். எப்படி நம்ம கங்கா, சந்திரமுகி அறைக்கு போனாங்கன்னா அப்டியே சந்திரமுகியா மாறி முகம்லாம் பிரகாசமா ஆயிடுமோ - அந்த மாதிரி கன்னினு எங்க பேசினாலும் ப்ரைட்டா ஆயிடுவேன். அதனால தான் மேடை பேச்சுக்கு எந்த அறிமுகமும் இல்லனாலும் அருண் கேக்கவும் அடுத்த நிமிஷமே எதயும் யோசிக்காம ரொம்ப சந்தோஷம், கண்டிப்பா பண்றேன், இது என்னோட பாக்கியம் அப்படின்னு சொன்னேன். அவருக்கு என் கிட்ட எப்படி கேக்கணும்னு தோணுச்சோ தெரியல. எல்லாம் கன்னியின் கிருபைன்னு நெனைக்கிறேன். நன்றி அருண்.

லாஸ்ட் இயர் தான் கன்னியோட அறிமுகம் கெடச்சது. கன்னி வாசிச்சிருந்த சமயம். ஒரு சில படைப்ப வாசிக்கும் போது தான் எழுத்தாளார்ட்ட போய் பேசனும் அவங்கள அப்ரோச் பண்ணனும்னு ஆசை இருக்கும். கன்னி படிச்ச உடனேயும் எப்டியாவது பிரான்சிஸ் கிருபாவ பாத்து பேசனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு. இன்னைக்கு அந்த ஆச நிறைவேறிடும்னு நெனச்சேன். ஆனா அவரால வர முடியாம போனது ரொம்ப வருத்தம். எப்படியாவது பெர்மிசன் கேட்டு அவர் பக்கத்துல இன்னைக்கு உக்காரானும்னு நெனச்சேன். பிரான்சிஸ் கிருபாவ பாக்கணும்கிறத விட அமலா அக்காவ பாக்கனும்னு தான் ரொம்ப ஆசை. இந்த நாவல வெறும் புனைவா மட்டும் என்னால பாக்க முடியல. கிருபா சார் வந்தார்னா அமலா அக்காவோட போட்டோ மட்டுமாச்சும் காட்டுங்கனு கேக்கலாம்னு இருந்தேன். மிஸ் ஆயிடுச்சு.

லாஸ்ட் இயர் கன்னி வாசிச்சி முடிச்சிருந்த நேரத்துல தான் ஈரோடு புக் ஃபேர் வந்துச்சு. அப்போ தமிழினி பதிப்பகம் போய்ருந்தேன். சு.வேணுகோபால் சார் இருந்தார் அங்க. அவங்கட்ட கிருபா சார் நம்பர் இருக்குமானு கேட்டேன். அவர் தேடி பாத்துட்டு எங்கிட்ட இல்ல, வசந்தகுமார் வருவார் அவர்கிட்ட கேட்டு பாருங்கன்னு சொன்னார். சுத்திட்டு லாஸ்ட்டா மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்து, வசந்தகுமார் சார மீட் பண்ணேன். அப்போ அவர் கிட்ட கேட்டேன், இந்த மாதிரி பிரான்சிஸ் கிருபாவோட நம்பர் கிடைக்குமானு. அவர் உடனே எதுக்குப்பா அப்டின்னார். கன்னி வாசிச்சேன். ரொம்ப புடிச்சிச்சு. அதனால அவர்கிட்ட பேசலாம்னு. ஓ கன்னி ரீடரா, வாங்க வாங்க இங்க உக்காருங்க சொல்லிட்டு ரொம்ப நேரம் கன்னி பத்தி பேசிட்டு இருந்தோம். நம்பர் கெடைக்கல. தர மாட்டேன்னு சொல்லிட்டார். உனக்கு படைப்பு தான் முக்கியம். படைப்பாளி தேவ இல்ல. அதனால நீ பேசனும்னு நெனைக்காதனு சொல்லிட்டார். அப்புறம் நாலஞ்சு புக்கு சஜ்ஜெஸ்ட் பண்ணார். இப்போ என்கிட்ட காசு இல்ல. ஏடிஎம் போய் எடுத்து வரேன்னு சொன்னேன். என்னப்பா நீ கன்னி ரீடர்னு சொல்ற. வேணுங்றத எடுத்துட்டு போ. நீ சென்னை வரும் போது கொடு. தராட்டியும் பரவா இல்லன்னு சொன்னார். கன்னி வாசகரா இருக்றதுல ரொம்ப பெருமையா இருந்துச்சு அப்போ.

நான் வாசிச்ச புக்குல கன்னி எனக்கு ரொம்ப நெருக்கமான புத்தகம். ரெண்டாயிரத்து பதினஞ்சு ந்யூ இயர் அன்னைக்கு கன்னி வாசிக்கணும்னு இருந்தேன். லாஸ்ட் இயர் வாசிச்த்துல கன்னி தான் டாப் லிஸ்ட்ல இருந்துச்சு. அப்புறம் ரெண்டாயிரத்து பதினஞ்சுலயும் கன்னி பெஸ்டா இருக்க வேண்டாம்னு லாஸ்ட் டிசம்பர்லயே வாசிச்சிட்டேன். வாசிச்சி முடிச்சிட்டு அத பத்தி ஒரு போஸ்ட் போட்டிருந்தேன் புத்தகக் கண்காட்சி க்ரூப்ல. அப்போ கவிதா சொர்ணவல்லி அக்கா - அவங்க கன்னியோட வெறித்தனமான விசிறி - அவங்களும் கன்னி பத்தி எந்த போஸ்ட் பாத்தாலும் பரவச நிலைக்கு வந்துடுவாங்க. எப்டியாவது இந்த புத்தகக் கண்காட்சில தமிழினி வசந்தகுமார பாத்து பேசி ரெண்டாம் பதிப்பு கொண்டு வர சொல்லலாம்னு பேசிட்டு இருந்தோம். இன்கேஸ் அது முடியாத பட்சத்துல நம்ம கன்னி பதிப்பகம்னு ஆரம்பிச்சு கொண்டுவந்துரலாம்க்கா அப்டின்னேன். பேசின ரெண்டாவது நாள்லயே கன்னியோட ரெண்டாவது பதிப்பு வர்றதா ந்யூஸ் வந்துச்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

பிப்ரவரி ஃபோர்‌டீன்த். இது வந்து எனக்கு இருபத்தி ஆறாவது பிப்ரவரி ஃபோர்‌டீன்த். ஒவ்வொரு வருஷமும் ரொம்ப சோகமாவும் ஏக்கமாவும் தான் போய்ட்டு இருந்துச்சு. இந்த வருஷமும் அப்டி தான் இருந்துருக்கும். அடுத்த வருஷம் வேற யாரோடயோ இல்ல அதுக்கு அடுத்த வருஷம் வைஃப்போடயோ கொண்டாடலாம். ஆனா இது தான் என்னோட பெஸ்ட் பிப்ரவரி ஃபோர்‌டீன்த்தா நினைக்கிறேன்.

நாவல் பத்தி நான் பெருசா ஏதும் பேச போறது இல்ல. இது வரைக்கும் மூணு தடவ வாசிச்சாலும் வெறும் அழகியல மட்டும் தான் பாத்துருக்றேன். நிறய பேரு இதுல படிமம் குறியீடுலாம் இருக்கு - மஞ்சள் சுடிதார் சிகப்பு வளையல் அப்டினுலாம் பேசுறாங்க. அந்த அளவுக்கு நான் போகல. ஒரு ஆசை இருக்கு - இன்னும் நாலஞ்சு முறை வாசிச்ச அப்புறம் இந்த நாவல் பத்தி நூறு பக்கம் எழுதனும்ன்னு.

மனோஜ் சார் பேசும் போது சொன்ன மாதிரி ஒவ்வொரு வரியும் மெனக்கிட்டு எழுதிருப்பார். அட்டகாசமான நடை. ஒரு விஷயத்த அவர் பாக்ற விதம், அவரோட கற்பனையே அட்டகாசமா இருக்கும். எனக்கு ஹைலைட் பண்ற பழக்கம் இருக்கு. என் புக்ல பாத்தீங்கன்னா ஃபுல்லா ஆரஞ்சு கோடா இருக்கும். எக்ஸ்ஸாம்பில்க்கு ஒன்னு சொல்லனும்னா பொண்ணோட நெற்றில ஒரே ஒரு மழைத்துளி இருக்கும். அத அவர் ரொம்ப அற்புதமா சொல்லிருப்பார். எப்டி சொல்லிருப்பார்னா - மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதா.

அப்புறம் சங்க இலக்கியம். சங்க இலக்கியம் வாசிக்கணும்னு ரொம்ப ஆசை. சாகுறதுக்கு முன்னாடி சங்க இலக்கியம் வாசிச்சிட்டு சாகணும். நாவல்ல அங்கங்க சங்க இலக்கியத்துல இருந்து எடுத்து எழுதிருப்பார். அது சும்மா ஃபோர்ஸ் பண்ணிலாம் வச்ச மாதிரி இருக்காது. எனக்கு அவர் சொல்ற சில விஷயம் புரியாது. இருந்தாலும் சங்க இலக்கியத்த பாக்கும் ஒரு சந்தோஷம். நாவல்ல அமலா அக்கா பிஎச்டி பண்றதுக்காக பாண்டி சங்க இலக்கியம் படிக்கும் போது சில விஷயத்த கத்துக்கிட்டேன் - நாம எழுதுறதுலாம் கவிதையான்னு கத்துக்கிட்டேன்னு எழுதிருப்பார். அப்போ எனக்கு தோணுச்சு - நெறய பேர் புக் ஃபேர் வருதுங்கிறதுக்காகலாம் புக் எழுதுறாங்க. அவங்களாம் கன்னி நாவல் வாசிக்கும் போது குற்ற உணர்ச்சிக்கு நிச்சயம் ஆளாவங்க. எழுத்துக்காக எவ்வளவு எஃபர்ட் போடணும்னு புரிஞ்சிப்பாங்க.

நாவல் முழுக்க காதல் தாங்க இருக்கு. காதல அதீத அன்பா பாக்றேன். பாண்டிக்கு ஜிம்மி மேல ஜிம்மிக்கு பாண்டி மேல - பாண்டி அமலா - அமலா பாண்டி – சாரா, பாட்டி, பரிமளம், கவிதை, கடல் இப்படி எல்லா விஷயத்துலயும் அதீத அன்ப இந்த நாவல்ல தொட்ருக்கார்னு நெனைக்கிறேன்.

நாவல்ல முதல் சாப்டர்லயே பாண்டி பைத்தியம்க்றதால சங்கிலி கட்டுறதுக்காக ஆசாரி இன்னும் நாலஞ்சு பேர் வருவாங்க. வரும் போது ஜிம்மி அவங்கள பாத்து குரச்சிட்டே இருக்கும். அப்போ ஜிம்மி ஆசாரி மேல பாஞ்சிடும். அந்த இடத்துல ஜிம்மிக்கு பாண்டி மேல இருக்ற அன்போட உச்சம் தெரியும். அதே மாதிரி பைத்தியமா இருப்பார் பாண்டி - ஜிம்மிய அடிக்கிறாங்கன்ன உடனே - அப்படியே முனகுவார் ஜிம்மிய அடிக்காதீங்க ஜிம்மிய அடிக்காதீங்கனு. ரொம்ப நெகிழ்ச்சியான இடம்.

ஆசாரி பாண்டி வீட்டுக்கு வருவார் பாண்டிக்கு சங்கிலி செய்றதுக்காக. அப்போ பாண்டி மரியாதை இல்லாம ஆசாரிய பாத்து இங்க வா, நீயாவது கட்ட அவுத்துவிடேன்னு சொல்லி அம்மாவ கெட்ட வார்த்தைல திட்டுவார். அப்போ ஆசாரி கேப்பார் நீங்க பெத்த புள்ளையாம்மா இப்படி பேசுதுனு. உடனே அம்மா அழுதுட்டே சொல்வாங்க - இல்லையா இது என் புள்ள இல்ல, என் புள்ள மாதிரி இருக்ற யாரயோ கட்டி போட்டிருக்காங்கன்னு. அங்கங்க அம்மாவோட வலிய சொல்லிருப்பார். அதே மாதிரி பாட்டி. பாக்கியம் பாட்டி. பாண்டிக்கு இப்டி ஆன அப்புறம் நடை பொணமா தான் சுத்திட்டு இருப்பாங்க. வீட்லயே இருக்க மாட்டாங்க. யார் கிட்டயும் சரியா பேச மாட்டாங்க. எப்பவும் கணவரோட கல்லறைல தான் போய் இருப்பாங்க. அவங்க பாண்டிக்கிட்ட பேசுற மாதிரி ஒரு இடம் வரும். பாட்டி பாண்டியோட கன்னத்த புடிச்சி கேப்பாங்க - கண்ணுல படம் படமா தெரியுதோய்யா, யாரும் இங்க வந்துரு வந்துரு கூப்ட்ராங்களோ, ஜல் ஜல்ன்னு மணி சத்தம் கேக்குத்தோய்யா. இந்த மாதிரி இடம்லாம் வாசிக்கும் போது அவ்ளவ் வலிய உணர முடியும்.

அமலா அக்கா. எனக்கும் அவங்கள அக்காங்கிற மாதிரி தான் தோணும். நோட்ஸ் எடுக்கும் போது கூட அமலா அக்கான்னு தான் எழுத முடியுது. சின்ன வயசுல இருந்தே அமலா அக்கா கூடவே தான் பாண்டி இருக்றான். நிழல் மாதிரி. அந்த சாப்டரே இப்படித் தான் ஆரம்பிக்கும். பாண்டிக்கு அக்கா இல்லயேங்க்ற ஏக்கம் பயங்கரமா இருக்கும். பெரியம்மா பொண்ணுங்க நாலு அக்கா இருப்பாங்க. அமலா அக்கா தான் குட்டி அக்கா. பாண்டி அமலா அக்காட்ட சத்தியம் வாங்குறான். நான் உன் தம்பி தானக்கா, நீ என் அக்கா தானக்கான்னு. குட்டி அமலா அக்கா சத்தியம் பண்றாங்க நீ என் தம்பி தான்டான்னு. அவன் வீட்ல இருக்ற நேரத்த விட அக்கா கூட இருக்ற நேரம் தான் அதிகம். ஸ்கூல்ல மான திருடிட்டான்னு அக்காவ நெனச்சி தான் பயப்படுவான். அக்காட்ட இத சொல்லாமயும் இருக்க முடியாது. அக்காக்கு தெரிஞ்ச அப்புறம் கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு இனி இப்படி பண்ண கூடாதுன்னு சத்தியம் வாங்குவாங்க. ஒன்னாவே தான் இருப்பாங்க. வீட்ல திருட்டுத் தனமா மெக்ரோன் திருடி சாப்டுவாங்க. அக்கா புது நன்மை வாங்கும் போது குட்டி தேவதை மாதிரி இருப்பாங்க. அக்கா கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கணும்ன்னு ஆசப்படுவான். இவனுக்கு சைக்கிள உருட்ட மட்டும் தான் தெரியும். ஆனா அக்காக்கு கத்துக் கொடுப்பான். ஒரு கட்டத்துல ஊருக்கு போய்ட்டு வந்திருக்கும் போது அக்கா தாவணில மாறிருப்பாங்க. பயம் வந்துடும் பாண்டிக்கு இனிமேல் அக்கா சரியா பேச மாட்டாங்களோன்னு. ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துலயே அக்கா சகஜமா பேசி நான் எப்பவும் உன் அக்கா தான் அப்டிங்கிற மாதிரி பேசுவாங்க. அந்த சாப்டர் முடியிற போது அக்கா கன்னியாஸ்திரி படிக்கிறதுக்கு கெளம்புவாங்க. ஒரு பக்கம் தான் இருக்கும். அவ்ளவ் பெயின்ஃபுல்லா இருக்கும். அதுக்கப்புறமும் அடிக்கடி சந்திச்சிட்டு இருப்பாங்க ரெண்டு பேரும். அவன் அமலதாஸ்ங்ற பேர்ல கவிதை எழுதுவான். அக்கா திட்டுவாங்க அது சரியா இருக்காதுன்னு. அப்புறம் அமலா அக்காட்ட குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி ஒருத்தர் வரும் போது அமலதாஸ்ன்னு அக்கா சொல்வாங்க. அக்கா என்ன தான் இன்டெலெக்சுவலா பேசினாலும் அவங்களுக்குள்ள இருக்ற வலி அவங்களயும் மீறி அங்கங்க வந்துடும். முத்து இல்லாத கொலுசு போட்டிருப்பாங்க. அப்போ பாண்டி கிண்டல் பண்ணுவான் சிணுங்காத கொலுசு அப்டின்னு. அப்போ அக்கா கேப்பாங்க என்னடா கடல்ல போட்றலாம்னு சொல்றியா, இனி நான் தான்டா விழனும்ன்னு. அக்கா கன்னியாஸ்திரி ஆகுற டைம் வந்துடும். இனி அக்கா நம்ம கூட இல்லங்கிற ஸ்டேஜ். பேஜ் நம்பர் 246ல இருந்து 250 வர. அந்த பக்கம்லாம் வாசிச்சிட்டு கொஞ்ச நேரம் எதுவும் ஓடாது. அக்கா நினைவா அவன் கிட்ட ஒரு சிலுவ மட்டும் இருக்கும். அத அக்கா கேப்பாங்க. அப்போ வேணாம்க்கா, இது என்னோட சாந்தக்ரூஸ்னு சொல்வான். இப்படியே இருக்காதடா அப்புறம் பைத்தியம் ஆயிடுவடானு சொல்லி அழுவாங்க. நீ நல்லா இருக்கனும்டான்னு சொல்லிட்டு கெளம்பிடுவாங்க.

என்ன பொருத்தமட்டுல பாண்டி இங்கயே பைத்தியம் ஆயிட்டான். இனி சாரா வந்து தான் இவன பைத்தியம் ஆக்கணும்னு இல்ல. அக்கா இனி நம்ம வாழ்க்கைல இல்லனு ஆயிடுச்சு. அப்போ இப்படி ஒரு வரி வருது.

பரந்து விரிந்த கடலின் முன்னே எல்லையில்லா வானத்தின் கீழே நிழலன்றி எதுமற்று நின்றிருந்தான்.

நன்றி வணக்கம்.


மொக்கையாகத் தோன்றினாலும் வரலாறு முக்கியம் என்பதால் இந்தப் பதிவு :D நடந்த நிகழ்வு முழுவதையும் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இதற்கே மூச்சு தள்ளிவிட்டது. எப்படித் தான் ஜெயமோகன் தினம் தினம் அவ்வளவு பெரிய பதிவெழுதுகிறாரோ!

பிரான்சிஸ் கிருபாவைத் தெரிந்தவர்கள் அவரைப் பற்றி நிறைய விஷயம் சொன்னார்கள். அப்போது கிருபாவின் ஒரு கவிதை தான் ஞாபகம் வந்தது.

மெசியாவின் காயங்கள்
உயிர்பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்திவிட்டு
தன் வயிற்றில் இறங்கி
முழுவட்டமடித்த கத்தியை
தலை தூக்கி எட்டிபார்த்தது
ஆமை
- ஜெ.பிரான்ஸிஸ் கிருபா

- த.ராஜன்

Saturday, 7 February 2015

செள்ளு – செல்வராஜ்

இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் கடற்புரத்தில் வாழும் மீனவ சமூகத்தின் வாழ்வை அதன் வாசம் துளியும் மாறாமல் காட்டுகிறது.

ஒரட்டி - பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக அவ்வூரின் பங்குத்தந்தை அவனைப் பாராட்டி பரிசளிப்பதாகக் தொடங்கும் கதை, எதிர்பாராத விதமாக அவன் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, மூன்று அக்காக்களை கரை தேற்ற, அன்னையால் வேறு வழியின்றி அவன் வேலைக்கு அனுப்பப்படுவதாக முடிகிறது.

நனைந்த பட்டாசுகள் - இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது. கிறிஸ்துமஸ் இரவு. கென்னாடியின் குழந்தை ஒரு வாரமாக பட்டாசு கொளுத்துவதைப்பற்றியும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப்பற்றியும் கேட்டுக்கொண்டிருக்கிறாள். கென்னடிக்கும் தன் குழந்தையுடன் இந்தக் கிறிஸ்துமஸைக் கொண்டாட வேண்டுமென்ற ஆசை. ஆனால் நண்பர்கள் குடிக்க அழைக்கிறார்கள். இது போன்ற தினங்களில் குடிப்பதென்பது அவர்களுக்கு அலாதியான இன்பம் அல்லவா, மனம் குடியை நோக்கிச் செல்கிறது. கிளம்பும் போது கஷ்டமாகத் தான் இருந்தது அவனுக்கு. ஆனால் போதை ஏறவும் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. அளவுக்கு மீறி குடிக்கிறான். போதை தலைக்கேறியிருக்கிறது. ஆட்டோவிலிருந்து இருந்து இறங்கி வீட்டை நெருங்கவும் பக்கென்றிருக்கிறது அவனுக்கு. வீட்டின் கதவு அவனுக்காக திறந்திருக்கின்றது. முட்டியில் நாடியைக் கொடுத்து மனைவி அமர்ந்திருக்கிறாள். போதையில் நிற்க முடியாமல் இயலாமையில் கட்டிலில் மல்லாந்து படுக்கிறான்.

'கட்டிலின் கீழே கொஞ்சம் தள்ளி குழந்தை புதிய உடுப்புடன் பாயில் உறங்கிக்கொண்டிருக்கிறாள்'. கென்னடி உறக்கத்திலிருந்து எழுந்து முகம் கழுவ வெளியே வருகையில் வெடித்த பட்டாசுகளின் தாள்கள் சிதறிக் கிடக்கின்றன. அவன் வீடு முற்றத்திலோ முந்தின நாள் வாங்கிய பாட்டாசுகள் வெடிக்கப்படாமல் பனியில் நனைந்துகிடக்கின்றன. மூன்றே பக்கங்களில் அட்டகாசமான கதை.

மகேசுவரியும் தெக்கு ஆறும் - செழிப்பாக இருந்த ‘தெக்கு ஆறு’ பணத்தாசையால் அழிந்து நாத்தம் எடுத்துக் கிடக்கின்றது. மணியின் பால்யகாலத் தோழி மகேசுவரி உடல்நிலை சரியில்லாமல் நலிந்து சாகிறாள். 'கருத்துப்போய் கெடக்க தெக்காத்த பாக்கும்ப வெசம் தீண்டுனதைப் போலக் கெடந்த மகேசுவரிக்க ஞாபகம் வந்திண்டு இருக்கு' என்று கதை முடிகிறது.

செள்ளு - நன்றாகப் படிக்கும் மகளைப் படிக்க வைக்க முடியாமல் வாடும் வறீதம்மையின் கதை. கல்வி நிதி கிடைக்குமென்று சாமியாரைத் தேடிச் செல்கிறாள். ஊர்த் தலைவர்களால் அது மறுக்கப்படுகின்றது. அந்த நிதி கோவிலை இடித்து சீர் திருத்தும் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. முடிவில் வேறு வழியின்றி வறீதம்மையின் மகள் மால் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதாக சொல்லும் இடத்தில் இருவரும் வெடித்தழும் போது, அந்த சோகம் நம்மையும் தொத்திக்கொள்கிறது. இதுவும் ஒரட்டி கதையும் கிட்டத் தட்ட ஒரே பிரச்சனைகளைக் கையாள்கிறது. ஒரு குடும்பத்தின் வருமானம் திடீரென தடைபடும்போது அந்தக் குடும்பம் ஸ்தம்பித்துப் போகின்றது. சமூக அவலங்களையும், அவர்களது அடுத்த சந்ததிகளின் நிலைமை எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருக்குமென்பதையும் இவ்விரு கதைகளும் உணர்த்துகிறது.

நண்டு - சேசடிமை புற்றுநோயால் இறந்து போகிறான். அரசாங்கத்தின் பணத்தாசையால் ஊரிலிருந்து மண்ணள்ளுவதாலேயே புற்று நோயும் தோல் நோயும் வருகிறதென்பதை ஊர்மக்கள் அறிந்திருக்கின்றார்கள். இருந்தும் அதிகாரத்தினாலும் ஊர் மக்களை பணத்தின் மீது மோகம் கொள்ளச்செய்தும் அந்த ஊரிலுள்ளவர்களே அந்த வேலைக்கு செல்வதாக கதை முடிகிறது. சிறுவர்கள் ஒரு நண்டின் உடலில் துணியைக் கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விளையாடுகிறார்கள். நண்டின் கால்கள் பிய்ந்து வெந்து சாகின்றது. ஊர் மக்கள் மண்ணள்ள மண்வெட்டியுடன் கிளம்புகிறார்கள்.

தூச்சம் - இந்தக் கதையை வாசிக்கவும் இதைக் குறும்படமாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. கமெர்ஷியலாக அல்லாமல் நல்ல குறும்படம் எடுக்கும் ஆர்வமிருப்பவர்கள் இந்தக் கதையை முயற்சித்துப் பார்க்கலாம். கண் தெரியாதவன் என்ற காரணத்தினாலே விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாதிருக்கையில், நண்பன் அருமை நாயகம் மட்டும் இவனோடு சேர்ந்து விளையாடுகிறான் மற்றவர்களைப் பகைத்துக்கொண்டு. இருவரும் உயிர் நண்பர்கள். அன்னம்மையின் மீது தூச்சம் ஆசைப்படுவதை அவன் தாய் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் நடந்த சண்டையில் ‘இனி நான் தனியாக இருக்கப் பழகிக்கிறேன்’ என உயிர் நண்பனிடமிருந்தும் தூச்சம் விலகுகிறான். தூச்சத்தின் முகத்தை சவப்பெட்டியில் அருமை நாயகம் தொட்டுப்பார்க்கும் இடத்தில் தூச்சத்தின் ஒட்டு மொத்த வலியும் நம் மீது இறங்குகின்றது.


செள்ளு – செல்வராஜ்
பாரதி புத்தகாலயம்
விலை ரூ60
பக்கங்கள் 96

யாரோ ஒருவர் கடற்புரத்தைப் பற்றி எழுதுவதற்கும் அந்த மண்ணில் வாழ்ந்தவர் அவர்கள் கதைகளை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா? ஒவ்வொரு கதைகளின் முடிவிலும் இதயம் கனக்காமல் இருக்க வாய்ப்பில்லை. கதை முழுவதும் வட்டார வழக்கிலே இருந்தது மிகப்பெரிய குறையாகப்படுகிறது. குமரி மண்ணின் வட்டார வழக்கு தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான். முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டது போல உரைநடை தவிர்த்து மற்றவற்றை பொதுத் தமிழில் எழுதியிருந்திருக்கலாம்.

இவர் வேறேதும் கதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தேட வேண்டும்.

- த.ராஜன்