Saturday 11 October 2014

மிடில் பெர்த் பிலாசபிகள்

ஏதோ சாதித்துக் களைத்தது போல இருந்தது.

மிடில் பெர்த் உறங்குவதற்கேற்ப தயாரான நிலையில் இருந்தது. லோயர் பெர்த்தில் உட்காரலாம் என்பதற்காக மிடில் பெர்த்திலிருந்த பையை அப்பர் பெர்த்தில் வைக்கலாமென ஆயத்தமானேன்.

பையைத் தொடவும் எதிரே அமர்ந்தவர் ஆவேசத்துடன் "ஹலோ. என்ன பண்றீங்க? உங்க ஸீட் எது?" என்றார்.

~~OO~~

"எப்புடிடா கோவம் வராம, பொறுமையா ஒரு விஷயத்த உன்னால ஹாண்டில் பண்ண முடியுது?"

உள்ளுக்குள் எழுந்த பூரிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். இருந்தாலும் உதடுகளின் ஓரத்தில் துளிர்த்திருந்த பெருமிதத்தை அவள் கவனித்திருக்கக் கூடும்.

~~OO~~

அவர் கேட்ட தொனியில் கோபம் தலைக்கேறியது. முறைத்தவாறே அவரை நோக்கித் திரும்பினேன். "இத மடிச்சி வச்சிட்டு உக்கார போறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் “அது என்னோட ஸீட்” என்றார்.

~~OO~~

"நானும் நிறைய கோவப்பட்டுட்டு தான்டா இருந்தேன். நான் காலேஜ் முடிக்கிற வரை சின்னப் புள்ளத் தனமா நடந்துட்டு இருந்தேன். இந்த அளவுக்கு பக்குவம்லாம் காலேஜ் படிக்கும் போது கிடையாது. இப்போ கொஞ்ச காலமா சென்னை வந்த அப்புறம் தான் எனக்கு பக்குவம் வந்துடுச்சு” அதோடு நிறுத்தாமல் கெத்தாக “சரி என்னைக்காவது வாழ்க்கையப் பத்தி யோசிச்சிருக்கியா? ஏன் வாழ்றோம்? எதுக்காக சம்பாதிக்கிறோம்? உயிரோட இருந்து என்ன பண்ண போறோம்? சரி என்னைக்காவது தனியா உக்காந்து யோசிச்சிருக்கியா?” என்றேன்.

~~OO~~

கோபத்தின் உச்சத்தில் "அப்போ வந்து இங்க படுத்துகோங்க" என்று கண்களில் தீ பறக்கக் கத்தினேன்.

நான் அதில் படுக்கச் செல்லவில்லை, லோயர் பெர்த்தில் உட்காருவதற்காகவே எடுத்து வைத்தேன் என்பதை உணர்ந்த அவர் சிரித்தவாறே என்னிடம் பேச ஆரம்பித்தார்.

கோபம் தலைக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததால் அவர் முகத்தை பார்ப்பதற்கு கூட நான் தயாராக இல்லை.

நான் கண்டுகொள்ளவில்லை என்பதால் சொல்ல வந்ததை பாதியிலேயே விழுங்கினார்.

~~OO~~

அவளின் இல்லையென்ற தலையசைப்பு என்னை மேலும் தத்துவம் பேசும்படி தூண்டியது.

"தனியா யோசிக்கணும். அதுக்காக நீ ஸ்பெஷலா நேரம் ஒதுக்கனும்னு இல்ல. நைட் தூங்குறதுக்கு முன்னாடி யோசி. உன்ன பத்தியே யோசி. அப்புறம் உனக்கு நடந்த எதாவது பிரச்சன பத்தி யோசி. ஏன் அப்படி நடந்துச்சு? என்ன காரணம்னு? அதுலயே உனக்கு நிறய தெளிவு கிடச்சிடும். ஒரு தடவ தப்பு பண்ணிட்டா மறுபடியும் அந்த தப்பு நடக்காம இருக்கணும். சில பேருக்கு அவங்க பண்ற விஷயம் தப்புன்னே புரியாது. அப்படி இருந்தா ரொம்ப கஷ்டம். நம்ம பண்றது என்னனு நம்மளால பிரிச்சி பாக்க முடிஞ்சதுன்னாலே பாதி பிரச்சன ஓவர். உனக்கு நீ பண்ற விஷயம் தப்புன்னு தெரியுது. ஆனா அதே தப்பா மறுபடியும் மறுபடியும் பண்றன்னா, அப்போ எங்க தப்பு இருக்குன்னு யோசிச்சிக்கோ. நம்ம பாக்றது, பேசுறது, இல்ல நம்ம அனுபவத்துல இருந்து கத்துகிட்டாலும் கூட தனியா யோசிக்கிறதுல தான் நிறய கத்துப்போம். நம்ம சகஜமா எல்லார்கிட்டயும் பேசுறவங்களா இருக்காலாம். இருந்தாலும் ஒவ்வொரு இடத்துலயும் பேசுறதுக்குன்னு ஒரு முறை இருக்கு. எல்லா இடத்துலயும் வளவளன்னு பேச முடியாது. எல்லா இடத்துலயும் உம்முன்னும் இருக்க முடியாது. அப்புறம் நம்ம பேசுற விஷயம், நம்ம பண்ற விஷயம் எதுவுமே நமக்கு தப்பா தெரியாது. நம்ம மனசுக்கு அது தப்புன்னு தெரிஞ்சா கூட அத ஒத்துக்க நமக்கு மனசு வராது. இத பத்தியெல்லாம் நம்ம தனியா யோசிக்கும் போது எல்லாமே புரிய வரும்”

~~OO~~

அவளிடம் பத்திரமாக போகும் படி சொல்லிவிட்டு ரயிலேறச் சென்றேன்.

~~OO~~

அவரைக் கண்டுகொள்ளாததை எண்ணி சில நிமிடங்கள் கழித்தே என் மனம் வருந்தியது.

சற்று முன் அவளிடம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பு வந்தது. ஜன்னலின் வழியே என்னை நோக்கிப் பாய்ந்த சூடான காற்றால் அந்தச் சிரிப்பு வறண்டு போயிருந்தது.


-த.ராஜன்

No comments:

Post a Comment