Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, 15 June 2016

சென்னை புத்தகக் கண்காட்சி 2016

நான் வாங்கிய புத்தகங்கள்:

·         பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன் (காலச்சுவடு, வெளியீட்டு விழாவில்)
·         நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)
·         நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி (காலச்சுவடு)
·         புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன் (காலச்சுவடு)
·         நான் காணாமல் போகும் கதை – ஆனந்த் (காலச்சுவடு)
·         சமூகப்பணி அ-சமூகப்பணி எதிர்-சமூகப்பணி - சஃபி & கோபிகிருஷ்ணன் (முன்றில்)
·         இரவுக்காட்சி - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         வேர்களின் பேச்சு - தோப்பில் முஹம்மது மீரான் (அடையாளம்)
·         சம்பத் கதைகள் 2 – சம்பத் (விருட்சம்)
·         தேவதேவன் கதைகள் – தேவதேவன் (தமிழினி)
·         மரநிறப் பட்டாம்பூச்சி - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         எருது - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         அறியப்படாத தீவின் கதை - ஜோஸே ஸரமாகோ (காலச்சுவடு)
·         சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி (அடையாளம்)
·         சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - சிங்கில் ஐத்மாத்தவ் (அகல்)
·         நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் - சிமாந்தா எங்கோசி அடிச்சி (அணங்கு)
·         குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் (பாரதி)
·         அன்னா தஸ்தவேவ்ஸ்கி - தமிழில்:யூமா வாசுகி (பாரதி)
·         தொலைவிலிருக்கும் கவிதைகள் - தமிழில்: சுந்தர ராமசாமி (காலச்சுவடு)
·         சக்கரவாளக்கோட்டம் - ரமேஷ் - பிரேம் (காலச்சுவடு)
·         கருப்பு வெள்ளைக் கவிதை - ரமேஷ் - பிரேம் (அகரம்)
·         குரல்களின் வேட்டை – சூத்ரதாரி (சொல்புதிது)
·         எட்டிப் பார்க்கும் கடவுள் - பா.வெங்கடேசன் (விருட்சம்)
·         பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் – தேவதேவன் (தமிழினி)
·         நீ இப்பொழுது இறங்கும் ஆறு – சேரன் (காலச்சுவடு)
·         'குடி'யின்றி அமையா உலகு - தொகுப்பு: முத்தையா வெள்ளையன் (புலம்)

நண்பர்களிடமிருந்து:
·         விழித்திருப்பவனின் கனவு - கே.என்.செந்தில் (காலச்சுவடு, யுவன் சந்திரசேகரின் கரங்களால் நாவலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டேன்)
·         அரூப நெருப்பு - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         காதல் கடிதம் - வைக்கம் முகம்மது பஷீர் (காலச்சுவடு)
·         கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல்)
·         பார்வை தொலைத்தவர்கள் - ஜோஸே ஸரமாகோ (பாரதி)
·         வெள்ளரிப்பெண் – கோணங்கி (புலம்)
·         இண்ட முள்ளு – அரசன் (வளர்மதி)
·         காலமே வெளி - தமிழில்: கால சுப்பிரமணியன் (தமிழினி)
·         சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ (பாரதி)
·         அஸ்தினாபுரம் - ஜோ டி குரூஸ் (காக்கை)
·         விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன் (உயிர்மை)

காலச்சுவடில் இலவசமாகக் கிடைத்தவை:
·         முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர்
·         முகமூடி செய்பவள் - வினோதினி
·         தொலைவில் - வாசுதேவன்
·         பேய்த்திணை - மௌனன்

Friday, 1 April 2016

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்


தனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது, தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

லிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி வரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.

எலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது.  தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

முதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.

ஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-
ராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-
தாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-

இது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.

- த.ராஜன்

Thursday, 24 March 2016

மரம் - ஜீ.முருகன்

ஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், மார்க்சிம் கார்க்கி, மார்க்கஸ், சில்வியா ப்ளாத் பற்றி பேசினாலும் ஜூ.முருகனின் அறிவுஜீவித்தனம் தான் நாவல் முழுக்க தலைவிரித்தாடுகிறது. 240 பக்க அபத்தம் இந்நாவல்.

oOo

இதற்கு வந்த எதிர்வினைகள் -

Bala Nandakumar: கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தம்தான். ஒரு நாவலில் படைப்பாளனின் அறிவுஜீவித்தனம் இருப்பதில் தவறில்லை. படிக்கிற வாசகன் அறிவுஜீவியாக அதை விமர்சிப்பது தான் அபத்தம். உண்மையில் அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும். நீங்கள் முயற்சிக்கவும்.

Gargy Manoharan: கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசக மனநிலை ஒன்று உண்டு. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்காத கதைகளை பொழுது போக்காக செய்து பார்க்கும் எளிய சமாச்சாரங்களை போதுமென்று பார்க்கும். சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் கதைகளை இந்த நடுத்தர வர்க்க மனநிலையால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எவ்வளவு படித்தாலும் நம் வீட்டுப் பெண்கள் எதை படிக்க வேண்டும் பார்க்க வேண்டும் என்ன மாதிரி உடையுடுத்த வேண்டுமென சதாவும் கண்காணிக்கிற மனதால் இந்த மீறல்களை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உண்மையில் தலைக்கனம் மிக்க வாசகர்கள் பிரதியிடமல்ல தன்னிடமே தோற்றுப் போகிறார்கள்.

Lakshmi Saravanakumar: மரம் நாவல் முழுக்க முழுக்க அபத்தம்ன்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்க. நல்லது. நாவல்னா என்ன அபத்தமே இல்லாத நாவல் எப்டி இருக்கனும்? அபத்தங்க்ற வார்த்தைக்கான முழுமையான அர்த்தம் என்னன்னு விலாவாரியா சொல்ல முடியுமா?

Karunanidhi Arjith: இது போன வருஷம் மரம் நாவல் வாசித்த போது பதிவிட்டது. சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசிரியர். நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள், உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயிரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார்.நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று. ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது. நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது. நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக என்னால் கூற முடியும்.

oOo

தன்னிலை விளக்கம்

உரையாடலில் எழுத்து நடையும் பிற இடங்களில் பேச்சு வழக்கும் கலக்கக்கூடாது என்பது அடிப்படையான விதியாகக் கருதுகிறேன். நாவலில் சந்திரா என்றொரு கதாப்பாத்திரம், இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி நிறைய பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். அவருக்கு குரங்கென்றால் நடுக்கமாம். குரங்குகளால் அவருக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை அவள் ரவியிடம் இவ்வாறு கூறுகிறாள்:

"ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில அந்தக் கூட்டத்திலிருந்த குரங்குகள்ல சிலது எனது அறைக்குள்ள இருந்திச்சி. வெளியே நின்னுகிட்டே சத்தம் போட்டு விரட்டிப் பார்த்தேன். அது என்னை சட்டையே செய்யல. ஒன்னு சாவகாசமா அலமாரியிலிருந்த என்னோட துணிகளை ஒவ்வொன்னா எடுத்து கலைச்சி போட்டுச்சி. மேஜைமேல உட்கார்ந்திருந்த குரங்கொன்னு புத்தகங்களை எடுத்துப் பார்த்து கீழே வீசிக்கிட்டிருந்தது. இன்னொரு குரங்கு ட்ரஸ்ஸிங் மேஜை மேல ஏறி கண்ணாடியைப் பார்த்துக்கிட்டே ஃபேர் அன் லவ்லி ஃபேஸ்டை கடிச்சிக் கீழே பிதுக்கிவிட்டது.

"நான் வெளியே ஓடிப்போயி பக்கத்து வீட்டு அக்காவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவ தன்னோட புருஷன்கிட்ட சொன்னா. அவர் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தேடி எடுத்துக்கிட்டு வந்தார். இரண்டு கதவையும் விரியத் திறந்துவிட்டு அவர் உள்ளே போயி கம்பை வீசியதும் இரண்டு குரங்குகள் மிரண்டு வெளியே ஓடிப்போச்சி. மேஜைமேல் உட்கார்ந்திருந்த குரங்கு மட்டும் அவரைப் பார்த்து பல்லைக் காட்டி உறுமிச்சி. அவர் பயந்துட்டார். அது சாவகாசமா கீழ குதிச்சி இறங்கிப் போனது. அதன் கையில பாத்தா என்னோட கவிதைத் தொகுப்பு இருக்கு.

"நான் மிரண்டு போயிருந்தேன். இனிமே அந்தக் குரங்குகளால என்னென்ன விபரீதங்கள் நிகழப் போகுதோன்னு பயந்தேன். கனவுல குரங்குகளா வந்து ரகளை செய்ஞ்சது. ஒரு கனவுல வாய் பேச்சு வராம ஒரு மரத்தைப் பிடிச்சிகிட்டு நிக்கிறேன், பின்னால வந்து ஒரு குரங்கு என்னை... சொல்லவே கூச்சமாக இருக்கு. மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போய் திரும்பி வரும்போது பாக்கிறேன், ரோடு ஓரமா என்னோட கவிதைத் தொகுப்பு பக்கம் பக்கமா கிழிஞ்சி காத்துல பறந்துகிட்டிருக்கு. மரத்துக்கு மேலே சில குரங்குங்க உட்கார்ந்து என்னோட கவிதைத் தொகுப்போட பேப்பர கையில வைச்சிக்கிட்டு ஆபாசமா சேஷ்டை பண்ணிக்கிட்டிருக்கு. நான் அங்கிருந்து வீட்டுக்கு ஓடிவந்து படுக்கையில விழுந்து அழுதேன். அழுவதைத் தவிர என்னால வேறு என்ன செய்ய முடியும்? யார் அதைத் தடுக்க முடியும், தண்டிக்க முடியும்?" என்றாள். [பக்: 17]

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளில் உள்ள அபத்தத்தை நான் மேற்கோள் காட்டி விளக்க வேண்டிய தேவையில்லை என்று நம்புகிறேன். பக்கத்திற்கு பக்கம் இது போன்ற செயற்கையான, தட்டையான உரையாடல்களே. கதையின் போக்கை இதுபோன்ற ஒரு வார்த்தை ஒரு வரி நெருடலை ஏற்படுத்திவிடக்கூடும்? இவரால் சிறப்பான ஒரு உரையாடலைக் கூட நாவலில் நிகழ்த்த முடியவில்லை. உரையாடல்களில் உச்சம் எந்தத் தருணத்திலும் நிகழவில்லை. உங்களால் இந்நாவலில் மயிர்கூச்செறியச் செய்யும் ஒரே ஒரு உரையாடலை குறிப்பிட முடியுமா?

O

உரையாடல் என்றல்ல வர்ணனைகள் கூட எழுதிப் பழகும் வாசகனின் பயிற்சிக் கதைகளைப் போன்றே இருக்கின்றன.

தோழர் பாலு சிவனை மாநாட்டுக் கருத்தரங்கிற்கு அழைத்திருந்தார். 'சும்மா வந்து பாருங்க' என்றார். மாநாட்டுக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளை கண்டு அவன் பிரமிக்க வேண்டும் என்று அவர் அழைத்திருக்கலாம். உண்மையில் பிரமிக்கும்படி தான் அவர் காரியங்களைச் செய்திருந்தார்.

நகரம் முழுக்க எத்தனை வித போஸ்டர்கள்! கட்சித் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும், வினோத புகைப்படங்களும், ஓவியங்களும் நிரப்பப்பட்ட எத்தனை டிஜிட்டல் பேனர்கள்! மற்ற அரசியல் கட்சிக்கெல்லாம் சவால் விடும் நோக்கத்தில் இதெல்லாம் செய்யப்படிருந்தது போல இருந்தது. [பக்: 53]

O

'இங்கே வந்து பார்' சிவன் ரவியை அழைத்தான். ரவி அவனருகே போய் நின்றான். அவர்களுக்கு முன் உயரமாக வளர்ந்த புற்கள் நின்றிருந்தன. அதற்குப் பூக்கும் பருவமது. பார்வை பட்ட தொலைவு வரை ஒரே உயரத்தில் பரந்து வளர்ந்திருந்தன புற்கள். காற்று அதன் மேல் விளையாடுவதைத் தான் சிவன் ரவிக்கு காட்ட விரும்பினான். கடலைப் போல அலைகள் தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன புற்களின் மேல். ஒரு அற்புதத்தைக் கண்டது போல ரவி அதில் லயித்துப் போனான். [பக்: 77]

O

கதாப்பாத்திரங்களின் சித்திரம் நம் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதென்றால் அவர்கள் பேசுவதும் செய்வதும் வேறுவிதமாகத் தோன்றும் படியாக சித்தரிக்கப்படுகிறது. இதனாலேயே அவன் அவளை வைத்திருப்பதாயும் இவள் அவனை வைத்திருப்பதாயும் இரண்டு மூன்று அத்தியாயங்கள் பேசிவிட்டு அடுத்த அத்தியாயத்தில் அதே கதாபாத்திரங்கள் மரம், மலை, குரங்கு, தத்துவம், ஆன்மீகம், டால்ஸ்டாய், சில்வியா ப்ளாத், எலியட் என்று பேசினால் அது கதாப்பாத்திரங்களின் குரலாக அல்லாமல் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கின்றது. இதனாலேயே ஆசிரியரின் அறிவுஜீவித்தனம் நாவலில் தலைவிரித்தாடுவதான பிம்பம் ஏற்படுகிறது.

கிரி வீட்டிலும் நண்பர்களுடனும் சரியாக உரையாடாமல் சாந்தமாக இருப்பதாகச் சித்தரித்துவிட்டு பின்பு பாதிரியாருடன் சண்டையிடுவது, காதலியை உறவு கொள்ள அழைப்பது போன்ற அத்தியாயங்கள் நம்பும்படியாக எழுதப்படாததாலேயே அபத்தமாகத் தோன்றுகிறது. முன்னுக்குப்பின் முரணான வாக்கியங்களும் முன்னுக்குப்பின் முரணான கதாப்பாத்திரங்களின் சித்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது. ஆங்காங்கே இவர் மரம், குரங்கு என பேசும் படிமங்கள் – உருவகங்கள் – தத்துவங்கள் அபத்தமாக அன்றி ரசிக்கும்படியாக இல்லை. மரம் நாவலிலுள்ளவர்களைப் போன்று எதார்த்தத்தில் இல்லையா என்றால், இருக்கிறார்கள், ஆனால் அதற்கான நியாயம் நாவலில் மருந்திற்கும் இல்லை. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்கும் இத்தகைய கதைகளுக்கு, கதாப்பாத்திரங்களுக்கு எவ்வித நியாயமும் சேர்க்கவில்லை.

O

சிவன் குரங்குகளை வரையும் ஓவியன். ஒரு கருத்தரங்கிற்கு குரங்கையும் அழைத்துச் செல்கிறான்.

”இது என்ன தோழர் கூத்து!” என வியந்தார். “திடீர்ன்னு இந்தத் தொழில்ல இறங்கிட்டீங்க.”

சிவன் சிரித்தான். “ரெண்டு வாரத்துக்கு முன்ன மலைப்பாதையில் இது அடிப்பட்டுக் கிடந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கட்டுப் போட்டுக்கொண்டுவந்து மொட்ட மாடியில் வச்சிருந்தேன். நல்லா பழகிடுச்சி. சங்கிலி கூடத் தேவையில்லை. கூப்பிட்டா வந்துடும். இப்ப எனக்கு நிரந்தர மாடல் இதுதான்”

“’என்ன பேர் வச்சிருக்கீங்க?”

“பேரா!” சிவன் சிரித்தான். இதுவரை பெயர் பற்றி யோசிக்கவே இல்லை அவன். பெயர் எதற்கு?

சிவன் சொன்னான், “காப்ரியோல் கார்சியா மார்க்வெஸ்”

தோழர் பாலு வியப்புடன் அவனைப் பார்த்தார்.

“மார்க்வெஸ்சை உங்களுக்குத் தெரியாதா?”

“அவர் கம்யூனிஸ்டா? இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கேனே”’ என்றார்.

“அவர் கம்யூனிஸ்டா என்று தெரியாது. ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் நண்பர்.”

“சரி தோழர், அதை விட்டுட்டு வாங்க. உள்ள வந்து உட்காருங்க” என்றார்.

“இதுவும் வரட்டுமே. பயப்படாதீங்க. என் மடியிலயே உட்கார வச்சிகிட்டிருக்கேன்” என்று தன்னுடைய விருப்பத்தை முன் வைத்தான்.

“இதுவரைக்கும் அரங்குக்கு உள்ள விலங்குகளை அனுமதிச்சதே இல்லை” என்று சங்கடப்பட்டார் தோழர்.

’கதவு திறந்தபோது உள்ளே விலங்கொன்று கர்ஜித்ததே’ என்று கேட்கலாமென நினைத்தவன் நாவை அடக்கிக் கொண்டான்.

இந்தக் குரங்கு கருத்துகளை ருசி பார்ப்பதற்காகவே வந்திருக்கிறது என்றும், இது கலகமோ புரட்சியோ செய்யாது என்றும் உறுதியளித்தபிந்தான் இருவருக்கும் அவர் அனுமதி அளித்தார். பார்வையாளர் அட்டையைக் குரங்குக்கு எங்கே குத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டதால், அவனுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

இத்தகைய தட்டையான பகடியை உங்களால் ரசிக்க முடிகிறதா?

O

கதைக்கு வருவோம். கிரியும் ரவியும் நண்பர்கள். கிரியின் தாயார் சந்திரா. சந்திராவிற்கும் ரவிக்கும் உறவு. இலைமறைக் காயாக இருந்த உறவு ஒரு முறை கிரிக்கு உடல் நிலை சரியில்லாமலிருக்கையில் ரவி துணைக்கு உடன் இருக்கும் போது, கிரியின் அருகிலேயே சந்திராவும் ரவியும் சல்லாபிக்க எத்தனிக்கிறார்கள். அதை கிரி பார்த்தும்விடுகிறான். இருந்தும் எப்போதும் போலவே ரவியோடு பேசுகிறான். இது ‘வடுவாக இல்லாமல் புண்ணாக’ (என்ன ஒரு உவமை!) ரவிக்கு வலிக்கத் தான் செய்கிறது. சிவன் ரவிக்கு புதிதாக அறிமுகமாகும் நண்பன். ஓவியன். என்ன தான் ரவி பெரிய கவியாக இருந்தாலும் ரவியின் உறவுகளைப் பற்றி ரவிக்கு புரிய வைப்பவன் சிவன். சந்திராவிற்கு அறிமுகமாகும் சிவனும் சந்திராவோடு சல்லாபிக்கிறான். ரவிக்கு தேவகி என்னும் இன்னொருவனின் மனைவியுடனும் கள்ள உறவு. தோழர் பாலுவிற்கு மீனா என்னும் ஒரு கிழவியின் பேத்தியுடன் கள்ள உறவு. பிரியா கிரியின் தங்கை. கண்ணனின் மகள். கண்ணன் கிரியின் அப்பா. சந்திராவின் கணவர். பிரியா தோழி சசியின் உதவியுடன் நீலப்படம் பார்க்கக் கற்றுக்கொண்டும் பின்பு சசியோடு ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுகிறாள். கிரி மனப்புழுக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் இறந்த பின்பு மனதில் வருத்தம் இருந்தாலும் அவன் கணிணியில் பிரியா சுதந்திரமாக நீலப்படம் பார்க்கிறாள். அண்ணன் கிரியின் கலெக்‌ஷனைக் கண்டு திடுக்கிடுகிறாள். அவன் சந்திரா, ரவி, கண்ணன், பிரியா ஆகியோரின் புகைப்படத்தை வேறு புகைப்படத்துடன் மார்ஃப் செய்து வைத்திருப்பது தான் அவள் திடுக்கிடலுக்குக் காரணம். முத்தாய்ப்பாக கண்ணனுக்கும் அவள் மகள் பிரியாவிற்கும் உறவு. ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் கலைக்கும் இத்தகைய கதையை இவருடைய உரையாடல்கள் மூலமாகவும், வர்ணனைகள் மூலமாகவும், கதாப்பாத்திர சித்தரிப்பின் மூலமாகவும் அபத்தமில்லாமல் எழுதியிருக்க முடியும் எனத் தோன்றுகிறதா?
O

எல்லோரும் கொண்டாடும் நாவலை நான் போகிற போக்கில் அபத்தமென விமர்சித்ததாக வருத்தம்/கோபம் கொண்டார்கள். இப்படியான எதிர்வினையை எதிர்கொண்ட போது நான் நாவலை அணுகிய விதம் தவறோ என்றும், இதற்கு முன் வாசித்த நாவலோ அல்லது அந்நாளைய சூழ்நிலையோ எனக்கு இந்நாவலை அபத்தமாக தோன்றும்படி செய்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு சிறந்த நாவலை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மறுபடியும் ஒருமுறை வாசித்தேன். இரண்டாம் முறை வாசிக்கும் போதும் கொண்டாடப்படும்படியாக ஒரு சின்ன விஷயத்தைக்கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வேளை இருந்திருந்தாலும் எழுத்தாளரின் செயற்கையான உரையாடலாலும்/கதை சொல்லல் முறையினாலும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதென்பதே என் எண்ணம்.

ஜீ.முருகனின் 'மரம்' நாவலை ஒரு வேளை நான் பாராட்டி எழுதினால் அவர் நான் எழுதப்போகும் புத்தகத்தை பாராட்டி எழுதப்போவதுமில்லை அல்லது என்னோடு ஃபேஸ்புக்கில் சண்டையிடப் போவதுமில்லை. நான் புத்தக விமர்சனம் எழுதுவது பிரபலம் ஆகவோ, பிற்காலத்தில் ஒரு புத்தகம் எழுதி பெஸ்ட் செல்லிங் ஆத்தர் ஆகவோ, விருதுகள் வாங்கவோ இல்லை. நண்பர்களின் புத்தகத்தை புகழ்ந்து எழுதுவதும் சக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பாராட்டிக்கொள்வதும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கான தேவை எனக்கில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். பிடித்த படைப்புகளைத் தீரத் தீரக் கொண்டாடி முடிந்த வரை மற்றவர்களிடம் அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். ஒருவேளை இது போன்ற அபத்த நாவல்களைக் கடக்க நேரிடும் போது அதை அபத்தம் என்று பதிவதும் என் சுதந்திரம் என்றே எண்ணுகிறேன். மேலும் இதைப் பதிவதன் மூலம் என்னை வாசிப்பவர்களுக்கு கடத்த முயல்கிறேன்.

நான் எழுதியதற்கு வந்த எதிர்வினைகளில் சில ரசிகமனப்பான்மையில் எழுந்தது போலவே இருக்கின்றன. கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தமாகத் தோன்றுவதில்லை. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். அவ்வளவே. அது போக வாசகன் அதை அறிவுஜீவியாக விமர்சிக்கக்கூடாது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளனும் எழுதத் தெரிந்த வாசகன் தான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். ஒரு எழுத்தாளன் வாசகனை தனக்குக் கீழே வைத்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே அவனின் ஆளுமை அடிபட்டுவிடாதா? அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும் என்கிற கூற்றே கோபத்தில் எழுந்த ஒரு வாக்கியமாகவே தோன்றுகிறது.

கடைந்தெடுத்த 'தன்னை உயர்வாக' எண்ணிக்கொள்ளும் ஒரு மனோபாவமும் சில வாசகர்களிடம் உண்டு. அது நடுத்தர வர்க்க இருப்பையும் சமூக விழுமியங்ககளையும் கேள்வி கேட்காத கதைகளென இது போன்ற ட்ரான்ஸ்க்ரசிவ் கதைகளை உயர்வென கொண்டாடுவது. இது போன்ற இயல்பை மீறிய, கலாச்சாரத்தைக் கட்டுடைக்கும் கதைகளைத் தான் அடுத்த தலைமுறை இலக்கியமாகக் கொண்டாடும் - தன்னை உயர் வர்க்க வாசகன் எனக் கொண்டாடும் பொது புத்தி. இந்தக் கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசகனாகிய நான் தினத்தந்தியின் நான்காவது பக்கத்தில் வரும் சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் இது போன்று பல கதைகளை வாசித்தவன் தான். ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதெல்லாம் இலக்கியம் ஆகிவிட முடியுமா என்ன?

- த.ராஜன்

Monday, 2 November 2015

காதலின் துயரம் - கதே

இலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு நிலைகளைக் கடந்த போதும் அதன் சுகம் - சோகம் இன்றும் என்றும் அதே நிலைதானோ என்றும் தோன்றுகிறது.

சில அற்புதமான புத்தகங்களின் அறிமுகம் கிடைத்த அனுபவமெல்லாம் விசித்திரமானது. ‘கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்’ என்னும் மொபைல் கேமின் மூலம் அறிமுகமான நண்பரின் பரிந்துரையில் தான் 'கன்னி' வாசித்தேன். 'கன்னி' ஓர் அற்புதம். அப்படி ஓர் அற்புதத்தை பரிந்துரைத்த அவரின் மற்றொரு பரிந்துரை தான் 'கதேயின் காதலின் துயரம்'. காதலை நேசிக்கும் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

நாவல் வாசித்து முடித்து முன்னுரை வாசித்தால் ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம். இது வெளியான ஆண்டு 1774. இந்தக் குறுநாவல் ஜெர்மன் மொழியின் நவீன புனைகதை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதே இந்த நாவலை எழுதியபோது அவருடைய வயது 24. மேலும் பல ஆச்சரியங்களைக் இங்கு கூறாமல் விட்டுவிடுறேன். முன்னுரை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

கிரேக்க துன்பியல் நாடகத்தின் சாயலைக் கொண்ட இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் இளமையின் துடிப்பும் வாழ்வின் புதிர்வழிகளில் மாட்டிக்கொண்ட திகைப்பும் காதலின் பித்தும் அது விளைவிக்கும் தனிமையின் துயரமும் வெகு இயல்பாகவும் கூராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது - எம்.கோபாலகிருஷ்ணன்.

கடவுளும் என் தாய் தந்தையரும் எனக்கு உயிரையும் உடலையும் அளித்தனர் எனில் என் வாழ்வை எனக்கு அளித்தவர் கதே. நான் மட்டுமல்ல, தன்னைத் தொட்டவர் எவருடைய வாழ்க்கையையும் பொன்னாக மாற்றாமல் விட்டதில்லை இந்த இரஸவாதி. இந்த நாவலை எழுதிய உடன் உலகப்புகழை எய்துகிறார். ஐரோப்பியா முழுவதும் மனித மனங்களெல்லாம் தீப்பற்றி எறிகிறது. வாழ்ந்தால் வெர்தரைப் போல வாழ வேண்டும் என்று ஐரோப்பிய இளைஞர்களெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தை ஓர் இலட்சிய புருஷனாக கனவு கண்டனர். அதே போல் யுவதிகளெல்லாம் வெர்தர் போன்ற ஒரு லட்சியக் காதலன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்கித் தவித்தனர் - இரா.குப்புசாமி.

இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான் – எமர்சன்.

நாவலில் முதல் நாற்பது பக்கங்களில் நான் ரசித்த சில பத்திகளை இங்கே தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.

மனித ஜீவன்களிலேயே மிக அழகான ஒருத்தியை நான் கண்டேன். எப்படி என்று சரியாக உனக்குச் சொல்வது அவ்வளவு சுலபமானதில்லை. நான் திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே அதைத் தெளிவாகச் சித்தரிப்பது சாத்தியமில்லை.

தேவதை என்றவுடனேயே சொர்க்கத்திலிருக்கும் அவனது மனைவியைப் பற்றிச் சொல்கிறார்கள். அவனுக்கு அப்படியொருத்தி இருக்கிறாளா? இருந்துவிட்டுப் போகட்டும். இவள் எவ்வளவு அழகானவள் என்றோ ஏன் அத்தனை நேர்த்தி மிக்கவள் என்றோ என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிடுமளவு அழகானவள் என்று மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியம்.

oOo

பேரன்பும் மனஉறுதியும் உள்ளவள். பரபரப்பான இந்த உலகில் ஆச்சரியமூட்டும் அமைதியும் எளிமையும் கொண்டவள்.

அவளைப் பற்றிய பலவீனமான இந்த எல்லாச் சொற்களும் அவளுடைய உண்மையான இயல்பின் சிறு சாரத்தையும் சொல்ல இயலாத வெற்று உளறல்களே.

oOo

அவளது தன்மையிலும் தோற்றத்திலும் குரலிலும் என் முழு மனமும் ஒன்றியிருக்க நான் அவளுக்கு சம்பிரதாயமான பாராட்டுகளைத் தெரிவித்தேன். அவள் தனது கையுறைகளையும் விசிறியையும் எடுத்து வர அறைக்குள் சென்ற சொற்ப நேரம் ஆச்சரியத்திலிருந்து நான் விடுபட உதவியது.

oOo

இங்கே எப்படி நான் வந்தேன், மலை உச்சியில் நின்றபடி அழகான பள்ளத்தாக்கை எப்படி ரசித்திருக்கிறேன், இங்கே சுற்றியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னை எப்படி வசீகரத்துள்ளது என்பதெல்லாம் பெரும் ஆச்சரியம்தான். அதோ அங்கே அந்தக் குறுங்காடு. நீ அதன் அடர்நிழலில் அமிழ்ந்துவிட முடியுமா? மலைத்தொடர்களும் நெருக்கமான பள்ளத்தாக்குகளும்! அவற்றில் என்னை நான் தொலைத்துவிட முடியுமா? அங்கும் இங்குமாய் நான் தவித்தலைகிறேன். எனக்கு இப்போது என்ன வேண்டுமென்றே தெரியவில்லை.

oOo

நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவனுக்கு லோதே என்னமாதிரி தோன்றுவாள் என்பதை, நோய்ப் படுக்கையில் வாடிக் கிடக்கும் பலரையும்விட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய பாவப்பட்ட இதயத்தால் உணரமுடிந்தது.

oOo

திரும்பி வரும் வழியில் இப்படி எல்லா விஷயத்திலும் தேவைக்கதிகமாக ஈடுபாடு காட்டுவதைச் சொல்லி கடுமையாகத் திட்டினாள். இப்படி நடந்துகொள்வது அழிவிலேயே கொண்டுபோய்விடும் என்றும் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தாள். ஓ என் தேவதையே! உனக்காக நான் உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

oOo

உண்மையில் சொல்கிறேன், வில்ஹெம், ஞானஸ்நானத்தின் போது கூட அவ்வளவு புனிதத்துவத்தை நான் உணர்ந்ததில்லை. லோதே மேலே வந்தபோது தேசத்தின் பாவங்களையெல்லாம் புனித நீரினால் கழுவிப் போக்கிய ஒரு தேவனின் காலில் விழுவதுபோல அவளது காலில் விழுந்துவிட விரும்பினேன்.

oOo

லோதேவின் பார்வையை நான் யாசித்து நின்றேன். அய்யோ! அந்தக் கண்கள் இங்கும் அங்குமாய் எதை எதையோ பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவளை மட்டுமே பார்த்தவாறு லயித்து நிற்கிற என் மீது அவளது பார்வை படவில்லை. என் இதயம் அவளுக்கு ஆயிரம் முறையாவது கையசைத்திருக்கும். ஆனால் அவள் என்னைப் பார்க்கவேயில்லை. வண்டி புறப்பட்டு ஓட என் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் அவளையே பார்த்திருந்தேன். அவள் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அவளது தலையலங்காரம் ஜன்னலுக்கு வெளியே தெரிந்ததைப் பார்த்தேன். ஓ! அவள் என்னைத்தான் பார்க்கிறாளா? அப்படித்தானா என்று நிச்சயமாய் சொல்ல முடியாமல்தான் நான் தவித்து நின்றேன். அவள் என்னைத்தான் பார்த்தாள் என்று நினைத்துக்கொள்வதுதான் ஒரே ஆறுதல். இருக்கலாம். இன்றைய இரவு நல்லிரவாக அமையட்டும். நான் எவ்வளவு குழந்தைத்தனமாயிருக்கிறேன்?

oOo

அவளை நான் எப்படி விரும்புகிறேன் என்று யாராவது கேட்கும்போது, விரும்புவது என்கிற அந்த வார்த்தையையே நான் வெறுக்கிறேன். லோதே என்ற தேவதையால் அனுக்கிரகிக்கப்பட்ட இதயம் கொண்ட ஒருவன் அவளை விரும்புகிறேன் என்று சாதாரணமாய் சொல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும். விரும்புவதாம்! முன்பு ஒரு நாள் யாரோ ஒருவன் கவிஞர் ஓசியானை நான் எந்த அளவு விரும்புகிறேன் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

oOo

இல்லையில்லை, என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளவில்லை. கரிய அவள் கண்களில் என் மீதும், என்னுடைய எதிர்காலத்தின் மீதும் ஒரு அக்கறை இருப்பதை என்னால் அறிய முடிகிறது. அவள் என்னைக் காதலிக்கிறாள். ஓ! அவள் என்னைக் காதலிக்கிறாள்.  (இந்த விஷயத்தில் என்னுடைய இதயத்தை நான் நன்றாகவே நம்பலாம்) இந்தச் சொற்களில் உள்ள சொர்க்க சுகத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறதா?

என்னை அவள் காதலிக்கிறாள்! என்று நினைக்கும்போதே என் கண்ணெதிரில் எனக்கு நானே எத்தனை மேலானவனாய்த் தெரிகிறேன். ஒருவேளை நான் இப்படி உணர்ச்சிவசப்படுவதை எண்ணி என் மீது நீ பரிதாபப்படலாம். அவள் என்னைக் காதலக்கத் தொடங்கியதிலிருந்து என்னை நானே ஆராதிக்கத் தொடங்கவிட்டேன்.

oOo

எனக்கு அவள் புனிதமானவள். அவள் எதிரில் ஆசைகளனைத்தும் அடங்கிப் போகின்றன. அவளுடன் இருக்கும்போது நான் என்ன நினைக்கிறேன் என்பதே எனக்குத் தெரிவதில்லை. என்னவோ என் இதயம் நரம்புகள் அனைத்திலும் தத்தளிப்பது போலவே இருக்கும்.

oOo

காதலற்ற இதயங்களுக்கு இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்க முடியம், வில்ஹெம்?

oOo

தவிர்க்கமுடியாத ஒரு வேலையினால் இன்று என்னால் லோதேவைப் போய் பார்க்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும்? இன்று அவளிடம் எனக்குப் பதிலாக யாராவது ஒருவர் சென்று என்னை நினைவுபடுத்தட்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய வேலைக்காரனை அனுப்பினேன். அவன் திரும்பி வருவதற்குள்தான் நான் எப்படித் தவித்துப் போனேன்? மறுபடி அவனைப் பாரக்கத்தான் நான் எத்தனை ஆசையாய் இருந்தேன்? அவனை அணைத்துக்கொள்ள சற்றும் கூச்சப்படாதவனாய் இருந்திருந்தால் நான் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டிருப்பேன்.

பொலோனா என்ற ஒரு கல்லைப் பற்றிச் சொல்வார்கள். பகலில் அதை சூரிய ஒளியில் வைத்துவிட்டால் சூரியக் கதிர்களை அது உள்வாங்கிக் கொள்ளுமாம். இரவானதும் அது கதிர்களைத் துப்பி ஒளி கொடுக்குமாம். அந்த வேலைக்காரனும் அப்படித்தான். அவனது முகத்திலும், கன்னங்களிலும், கோட்டுப் பொத்தான்களின் மீதும், சட்டையின் கழுத்துப் பட்டையின் மீதும் அவளது கண்கள் வர்ஷித்த உணர்ச்சிகளனைத்துமே மிகப் புனிதமானவை. விலை மதிப்பற்றவை. அந்த கணத்தில் அந்த வேலைக்காரனுக்கு ஆயிரம் பொன் தந்து யாராவது கேட்டிருந்தாலும் நான் அவனை விட்டுத் தந்திருக்கமாட்டேன். அவன் வந்து என் முன்னால் நின்றதுமே நான் அத்தனை சந்தோஷப்பட்டேன். இதைக் கேட்டு நீ சிரிக்காமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக. இவை எல்லாமே நம்மை மகிழ்விக்கும் சலனச் சித்திரங்கள்தானா வில்ஹெம்?

oOo

அவளை அடிக்கடி பார்க்கக்கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடிந்தால்தானே! ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆசைக்கு நான் அடிபணிந்துவிடுகிறேன். உடனடியாகவே இன்றோடு சரி, நாளைக்கு அவளைப் பார்க்கக்கூடாது என்று மிக சிரத்தையாக உறுதியெடுத்துக்கொள்வேன். மறுநாள் விடிய வேண்டியதுதான். உடனேயே ஆவலைத் தடுக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, எனக்குத் தெரியாமலேயே, அவளிடம் போய் நின்றுவிடுவேன். முன்தினம் மாலையில் அவள் 'நாளைக்கு நீங்கள் வருவீர்கள்தானே?' என்று கேட்டிருப்பாள் (அப்படிக் கேட்டபின் யார்தான் வராமல் இருக்க முடியும்?) அல்லது அந்த நாள் மிக ரம்மியமாக அமைந்துவிட நான் வாஹெம்முக்கு நடக்கத் தொடங்கிவிடுவேன். அங்கிருந்து பிறகு அவள் இருக்குமிடத்திற்குச் செல்ல இன்னும் அரை மணித் தொலைவுதானே. அவளது பிரசன்னத்திற்கு வெகு அருகில் எப்போதுமே நான் இருப்பதால் நொடியில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவேன். என்னுடைய பாட்டி மந்திர மலையைப் பற்றி ஒரு கதை சொல்லுவாள். அந்த மலையை மிக நெருங்கி வரும் கப்பல்கள் எல்லாமே தமது இருப்புப்பாளங்களையும், ஆணிகளையும் இழந்து மலையை நோக்கி இழுக்கப்பட்டு பரிதாபமாக நொறுங்கி உடைந்து மூழ்கிவிடுமாம்.

oOo

இந்நாவல் ஒரு பொக்கிஷம். கடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் தூசி படிந்த கடைசி சில பிரதிகளே இருந்தன. உங்கள் கண்ணில் எங்கேனும் பட்டால் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழினி பதிப்பகம் | விலை ரூ 60/-

- த.ராஜன்

Tuesday, 8 September 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை, செய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். மனைவியின் மறைவிற்குப் பின் ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன். அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம். அறை முழுவதும் புத்தகங்கள். அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாதது. பல்வேறு வகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்தி வைத்திருந்தார். சாய்வு நாற்காலியின் மேல் யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்தது. அருகே ஒரு பென்சில். அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கி வந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

‘உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

‘இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது நேரம் அது குறித்து பேசலாம்’

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப் பற்றி பேச என்ன கசக்கவா போகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத் தயார்' என்றபடி சிரித்தார். அதே சிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன் சந்திரசேகர் எழுதிய ‘நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகு காலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமான நாவல்'

'எனக்கும் ஓரளவிற்கு தான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர் பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்ப மாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போது தான் வாசிக்கிறேன். இது தான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்தி பெறாமல் இருப்பது வருத்தமே. அவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர் குறித்து பேச வேண்டாமா? நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் ‘நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். கட்டாயம் படித்துப் பாருங்கள். அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும் போது அவர் குறித்து விரிவாக நிச்சயம் பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

‘இசை குறித்து அபார ஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான். அது குறித்து கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டி. ஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார். இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள். இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள்  மனதில் தோன்றச் செய்யும். இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தரவேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும். இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டிவிட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ. 230/-

- த.ராஜன்

Friday, 10 April 2015

55 Question Book Meme

1. Favourite childhood book?
சிறுவயதில் பாடப்புத்தகம் தவிர்த்து வேறெதுவும் வாசித்ததில்லை. மூன்றாம் வகுப்பில் லட்சுமணன் சார் சொன்ன சாகசக் கதை மட்டும் பசுமையாய் நினைவில் இருக்கின்றது.

2. What are you reading right now?
கண்மணி குணசேகரனின் 'நெடுஞ்சாலை'

3. What books do you have on request at the library?
பணம் கொடுத்து வாங்கிய புத்தம் புதிய புத்தகம் மட்டுமே வாசிக்கப் பிடிக்கின்றது. அதனால் லைப்ரரி, நண்பர்களிடம் வாங்கிக் படிப்பது போன்ற பழக்கங்கள் இல்லை.

4. Bad book habit?
ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், ஏதேனும் நல்ல விஷயம் இருந்து விடாதா என்ற நம்பிக்கையில் அது நன்றாக இல்லையென்றாலும் முழுவதும் வாசிக்கும் பழக்கம் இருக்கின்றது. நேர விரயம் என்று தெரிந்தும் கூட இதை மாற்றிக்கொள்ள இயலவில்லை.

5. What do you currently have checked out at the library?
பணம் கொடுத்து வாங்கிய புத்தம் புதிய புத்தகம் மட்டுமே வாசிக்கப் பிடிக்கின்றது. அதனால் லைப்ரரி, நண்பர்களிடம் வாங்கிக் படிப்பது போன்ற பழக்கங்கள் இல்லை.

6. Do you have an e-reader?
ஈ-ரீடர் ஆப்ப்ஸ் வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட பயன்படுத்தியதில்லை. எங்கு சென்றாலும் கையில் ஒரு புத்தகம் நிச்சயம் இருக்கும். என்றாவது புத்தகம் எடுத்து செல்ல மறப்பேனேயானால் இது பயன்படலாம்.

7. Do you prefer to read one book at a time, or several at once?
ஒரு புத்தகம் தான். இந்த வருடத்திலிருந்து தினம் ஒரு சிறுகதை படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், இரண்டு புத்தகங்கள்.

8. Have your reading habits changed since starting a blog?
ப்ளாக்கினாலும் மாறியிருக்கின்றது. எழுத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் வாசிப்பின் பார்வையையும் நிச்சயம் மாற்றியிருக்கின்றது.

9. Least favourite book you read this year (so far?)
வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை'. இதை இலக்கியப் படைப்பென்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலித்தனத்தையும், சுவாரஸ்சியத்திற்காக செய்தவற்றையும் தவிர்த்திருந்தால் இலக்கியப் படைப்பாக வந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்.

10. Favourite book you’ve read this year?
ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்க்: 'விவசாயம் வந்த பிறகு தான் நாகரிகம் பிறந்தது' என்றொரு கூற்று ஒரு புறம் இருக்க, மறுபுறமோ 'நாடோடியாகத் திரிவதை நிறுத்தி ஒரே இடத்தில் எப்போது மனிதன் வசிக்க ஆரம்பித்தானோ அன்று தான் எல்லா பிரச்சனைகளும் ஆரம்பித்தது' என்றொரு கூற்று. இரண்டாவது கூற்றைப் பற்றி தான் இந்த நாவல் பேசுகிறது. மேய்ச்சல் நிலத்தில் ஓநாயைக் குலச்சின்னமாக கொண்டிருப்பதற்கான காரணங்களெல்லாம் நமது எண்ணங்களை மறுபரிசீலனை செய்யவைக்கின்றன. மேய்ச்சல் நிலத்திற்கு பேருதவி புரியும் ஓநாய்களை, நாகரீக மனிதர்கள் துரத்தியடிக்கும் துயர காவியம் தான் இது. இந்த நாவலுக்காகவே இயக்குனர் வெற்றிமாறன் பிரத்யேகமாக அதிர்வு பதிப்பகம் ஆரம்பித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த நாவல் திரைப்படமாகவும் வரவிருப்பதாக செய்தியறிந்தேன்.

காடோடி – நக்கீரன்: ஐந்து வருட உழைப்பு என்று நக்கீரன் முன்னுரையில் குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மை என்பதை நாம் நாவலை வாசிக்கும் போது உணர்ந்துகொள்ள முடியும். நாவலை நகர்த்த அவர் எடுத்துக்கொண்ட உக்தி பாராட்டுதலுக்குரியது. இது போன்று அல்லாமல் வேறு விதமாக எழுத ஆரம்பித்திருந்தால் குறைந்தது முப்பது சதவிகிதமாவது காடு அல்லாத விஷயத்திற்கு செலவிடவேண்டியிருந்திருக்கும். முழுக்க முழுக்க காடு. நாம் அறியாத பல்வேறு உயிரினங்களின் அறிமுகம். தொல்குடியின் பார்வையில் காடு என கலக்கியிருக்கிறார். கலங்கவைத்திருக்கிறார். இந்த வருடத்தின் சிறந்த நாவல்களில் இதற்கு நிச்சயம் முதன்மையான இடம் உண்டு. 

11. How often do you read out of your comfort zone?
இதுக்கு என்ன சொல்றதுனே தெரியலயே.

12. What is your reading comfort zone?
அப்படி எதுவும் இல்லை.

13. Can you read on the bus?
எங்கெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் வாசிக்கிறேன். பேருந்திலும்.

14. Favourite place to read?
எனது அறையில், மூங்கில் நாற்காலியில் சாய்ந்த படி, ஃபேன் சப்தம் கூட இல்லாமல் வாசிப்பது அலாதியான அனுபவம்.

15. What is your policy on book lending?
ஒரு முறை லதாமகன் சொன்னது, 'வாழ்க்கைல பணம் கடனா வாங்கக் கூடாதது, புத்தகம் கடனா கொடுக்க கூடாதது'. என் புத்தகத்தை என்னைப் போல் யாராலும் கையாள முடியாது என்பதை பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

16. Do you ever dog-ear books?
வாய்ப்பே இல்ல.

17. Do you ever write in the margins of your books?
வாய்ப்பே இல்ல. என் புத்தகத்தில் வாசித்ததற்கான அடையாளமே இருக்காது (பிடித்த வரிகளை அடிக்கோடிடுவதைத் தவிர).

18. Not even with text books?
இல்ல இல்ல இல்ல.

19. What is your favourite language to read in?
தமிழ்!

20. What makes you love a book?
புத்தகத்தில் கிடைக்கும் போதை.

21. What will inspire you to recommend a book?
நானாக பரிந்துரை செய்வதை நிறுத்திவிடலாமென்றிருக்கிறேன்.

22. Favourite genre?
குறிப்பிட்டு எதுவும் இல்லை. எளிதான வாசிப்பனுபவம் தராமல் வாசகனின் உழைப்பை நாடும் புத்தகங்கள் அதிகம் பிடிக்கின்றது.

23. Genre you rarely read (but wish you did?)
இந்தக் கேள்விக்கு சிலர் பதிலளித்திருப்பது குழப்பத்தைத் தருகிறது. இந்தக் கேள்வியை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அரிதாக வாசிக்கும் Genre எது (ஆனால் அடிக்கடி வாசிக்க வேண்டுமென நினைப்பது?)?

பின்நவீனத்துவ படைப்புகள்.

24. Favourite biography?
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர்.இந்துக்கோபன்: புனித நூலைப் போல எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

25. Have you ever read a self-help book?
ஆரம்ப கால வாசிப்பில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இனி எப்போதும் அதன் பக்கம் போகப்போவதில்லை.

26. Favourite cookbook?
குச் நகி.

27. Most inspirational book you’ve read this year (fiction or non-fiction)?
நாடோடித்தடம் - ராஜசுந்தரராஜன்
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர்.இந்துக்கோபன்

28. Favourite reading snack?
வேர்க்கடலை.

29. Name a case in which hype ruined your reading experience.
ஹைப் தந்த அனேக புத்தகங்கள் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. ஒரு புத்தகம் வாசிக்கும் முன் அதைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருப்பது உசிதம். தற்போதெல்லாம் முன்னுரையைக் கூட புத்தகம் வாசித்து முடித்த பின்னே வாசிக்கிறேன்.

30. How often do you agree with critics about a book?
ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று நிற்பதில்லை. ஆனால் புத்தகத்தைப் பற்றி சரியான/ஆழமான விமர்சனம் யாரும் முன் வைக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி.

31. How do you feel about giving bad/negative reviews?
நிச்சயம் தேவை.

32. If you could read in a foreign language, which language would you choose?
ஃப்ரெஞ்ச். Bonjour :D

33. Most intimidating book you’ve ever read?
அப்படி எதுவும் இல்லை.

34. Most intimidating book you’re too nervous to begin?
அப்படி எதுவும் இல்லை.

35. Favourite poet?
கவிதை வாசிப்பில் அனுபவமேதுமில்லை. அடுத்த வருடம் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

36. How many books do you usually have checked out of the library at any given time?
பணம் கொடுத்து வாங்கிய புத்தம் புதிய புத்தகம் மட்டுமே வாசிக்கப் பிடிக்கின்றது. அதனால் லைப்ரரி, நண்பர்களிடம் வாங்கிக் படிப்பது போன்ற பழக்கங்கள் இல்லை.

37. How often have you returned a book to the library unread?
பணம் கொடுத்து வாங்கிய புத்தம் புதிய புத்தகம் மட்டுமே வாசிக்கப் பிடிக்கின்றது. அதனால் லைப்ரரி, நண்பர்களிடம் வாங்கிக் படிப்பது போன்ற பழக்கங்கள் இல்லை.

38. Favourite fictional character?
நிறைய இருக்கின்றார்கள் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை.

39. Favourite fictional villain?
நல்ல கேள்வி. அடுத்த கேள்வி.

40. Books I’m most likely to bring on vacation?
கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

41. The longest I’ve gone without reading.
அப்படி இருந்ததில்லை.

42. Name a book that you could/would not finish.
-

43. What distracts you easily when you’re reading?
மொபைலில் இருந்து வரும் பீப் ஒலி.

44. Favourite film adaptation of a novel?
நான் வாசித்த புத்தகங்கள் எதுவும் படங்களாக வந்ததாக நினைவிலில்லை அல்லது அதை நான் பார்த்திருக்கவில்லை.

45. Most disappointing film adaptation?
நான் வாசித்த புத்தகங்கள் எதுவும் படங்களாக வந்ததாக நினைவிலில்லை அல்லது அதை நான் பார்த்திருக்கவில்லை.

46. The most money I’ve ever spent in the bookstore at one time?
புத்தகங்களுக்காக செலவு செய்வதை கணக்கு பார்ப்பதில்லை. கடந்த புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி 2015) பத்தாயிரத்தை தாண்டிவிட்டது.

47. How often do you skim a book before reading it?
அந்தப் பழக்கம் சுத்தமாக இல்லை.

48. What would cause you to stop reading a book half-way through?
பிடிக்கவில்லை என்ற போதும் முழுவதும் வாசிக்கும் பழக்கம் இருக்கின்றது. இதுவரை எந்தப் புத்தகத்தையும் பாதியில் வைத்ததில்லை.

49. Do you like to keep your books organised?
என்னோடு வா வீடு வரைக்கும், என் புக் ஷெல்ஃபை பார் என்னைப் பிடிக்கும்.

50. Do you prefer to keep books or give them away once you’ve read them?
யாருக்கும் கொடுக்க விருப்பமிருந்ததில்லை.

51. Are there any books you’ve been avoiding?
சுயமுன்னேற்ற புத்தகங்கள்.

52. Name a book that made you angry.
சில புத்தகங்கள் இருக்கின்றது. தனியாகக் கேளுங்கள். சொல்கிறேன்.

53. A book you didn’t expect to like but did?
அப்படி எதுவும் இல்லை.

54. A book that you expected to like but didn’t?
அப்படியும் எதுவும் இல்லை.

55. Favourite guilt-free, pleasure reading?
மீனாக்க்ஷின் பதிலே என் பதிலும் - ஆல் ரீடிங்க் ஃபார் மீ இஸ் கில்ட்-ஃப்ரீ, ப்ளெஷர் ரீடிங்க்!

- .ராஜன்