Tuesday 21 June 2016

கழைக்கூத்தாடியின் இசை - தேவிபாரதி

இருபத்தைந்து ஆண்டுகளாக இலக்கியத்தில் தொடர்ந்து தனது பங்களிப்பதைத் தந்துகொண்டிருக்கும் தேவிபாரதியின் அறிமுகம் மூன்று மாதங்களுக்கு முன்பே கிடைத்தது. எனது சிறுகதை அடுக்குகளிலிருந்த தேவிபாரதியின் 'வீடென்ப' தொகுப்பைப் பார்த்துவிட்டு 'தேவிபாரதி வாசிச்சிருக்கீங்களா?' என்றார் நண்பர் பிறைசூடி. இத்தொகுப்பை யாருடைய பரிந்துரையில் வாங்கினேன் என்பதே நினைவில் இல்லை. காலச்சுவடு அரங்கில் இனாமாகத் தந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். 'முக்கியமான ஆளு. வாசிச்சிடுங்க' என்ற பிறைசூடியின் பரிந்துரையாலே இவரை வாசிக்க நேர்ந்தது. அவரின் பரிந்துரையை ஒரு போதும் உதாசீனப்படுத்தியதில்லை. இலக்கியப்பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பதற்கு அவ்வப்போது யாரேனும் ஒருவரை என்னிடம் அனுப்பி வைத்து விடுவார் இலக்கியக்கடவுள். தற்போது பிறைசூடி. குறிப்பாக சிறுகதைகளில் தீவிரமான விவாதங்களில் இவருடன் ஈடுபட்டதுண்டு. 'தற்கால சிறுகதைகள் வாசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மாஸ்டர்ஸ்களையும் வாசிக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தும் ஜீவன். ‘அவர்களை ஏன் மாஸ்டர்ஸ் என்கிறார்கள் என யோசித்ததுண்டா? ஜீரோ முதல் நூறு என அளவுகோல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக பெஞ்ச்மார்க்கை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் ஒப்பிட்டுப்பாருங்கள். இருபதுக்கும் மேற்பட்ட ரமேஷ்:பிரேமின் கதைகளில் 'மூன்று பெர்நார்கள்' மட்டும் ஏன் சிறந்த கதையாக எஸ்.ராமகிருஷ்ணனால் அடையாளப்படுத்தப்படுகிறது?' என ஒவ்வொரு முறையும் ஏதேனும் கேள்விகளையும் எழுப்பி உரையாடலை நிறைவு செய்வார்.

சிறுகதைகளில் முன்னோடியாக பெரும்பட்டியல் நம்மிடமுள்ளது. இன்று ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டிருந்த (தடம் இதழுக்காக எழுதப்பட்டது) 'சிறுகதையின் வழிகள்' எனும் கட்டுரை மிக விரிவாகவே சிறுகதையின் வரலாற்றை அலசியிருக்கின்றது. போலி செய்வதை, சொன்னதைத் திருப்பிச் சொல்வதை எந்தக் கலைஞனும் விரும்பமாட்டான் எனும் கே.என்.செந்திலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ஏதேனும் ஒரு வழியைப் பிரத்யேகமாக தனக்கென தேர்ந்தெடுப்பதன் மூலமே தனித்துவமான இடத்தை தமிழ் இலக்கியத்தில் அடையமுடியும் எனும் நிலை சிறுகதையாசியர் எல்லோருக்குமே உண்டு. தேவிபாரதியின் கதைகள் தனித்துவமானவை. 'பிறகொரு இரவு', 'உயிர்த்தெழுதலின் சாபம்', 'இருளுக்கும் பின்னால் ஒளிக்கும் அப்பால்' போன்ற கதைகளை தேவிபாரதியால் மட்டுமே எழுத முடியும் என்று தோன்றுகிறது. அவரின் நாவல்கள் 'நிழலின் தனிமை' மற்றும் 'நட்ராஜ் மகராஜ்' ஆகியவை சிறப்பாக வந்திருக்கின்றது என்ற போதிலும் அவரது சிறுகதைகளில் இருந்த கச்சிதம், அதில் அவர் தொட்ட உச்சங்களை நெருங்க முடியாமல் வெகு தொலைவிலேயே இவ்விரு நாவல்களும் நிற்கின்றன. இவ்விரு நாவல்களையும் தேவிபாரதி அல்லாமல் வேறு யாரோ ஒருவரால் கூட எழுதிவிட முடியும். இவை தேவிபாரதியின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் அல்ல. இவ்விருநாவல்களையும் சுருக்கப்பட்ட வடிவில் 'பிறகொரு இரவு' கதையைப் போல கச்சிதமாக எழுதியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

மே மாத காலச்சுவடு இதழில் வெளியான தேவிபாரதியின் 'கழைக்கூத்தாடியின் இசை' எனும் நெடுங்கதை குறித்து நானும் என்னைத் தொடர்ந்து அருணும் வாசகசாலையின் புதிய முயற்சியான கதையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று பேசினோம். இருவரும் பேசியதிலிருந்து என் நினைவிலிருப்பவற்றை இங்கே பகிர்கிறேன். இதைப் பகிர்வதற்கு முக்கிய காரணம் கதையாடல் நிகழ்வோ அல்லது அதில் நான் பேசியதோ அல்ல. தேவிபாரதிக்காகவே.

கழைக்கூத்தாடியின் இசை. கிராமத்திலிருந்து இயக்குனர் ஆகும் பெருங்கனவோடு சென்னை மாநகருக்கு வந்து தோற்றுப் போகும் இளைஞனின் கதை. முருகேசன் எனும் பெயரை அக்னி நதி நாவலின் பாதிப்பில் 'கௌதம நீலாம்பரன்' என மாற்றிக்கொள்கிறான். தீவிர இலக்கிய வாசிப்பு உள்ளவன். கதை தொடங்கும் இரண்டாவது பத்தியில் இவ்வாறு சொல்கிறார்: 'எதையும் பொருட்படுத்தாமல் கிடைக்கும் கையகலச் சந்துகளுக்குள் புகுந்து நசுங்கி வியர்வைப் பிசுபிசுப்புடன் வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கே வசப்படுகிறது இந்த மெட்ரோ வாழ்க்கை; கௌதம நீலாம்பரனைப் போன்ற அசடுகளுக்கல்ல'. 'ஒரு புளியமரத்தின் கதை', 'நாளை மற்றுமொரு நாளே' நாவல்களின் ஸ்க்ரீன் ப்ளேக்களை எழுதி வைத்திருக்கிறான். இலக்கியத்தை சினிமாவாக்க முயல்வதாலேயோ என்னவோ கெளதம் போன்றவர்களை அசடு என்கிறார் போல. தனது இலக்கியப் பரிட்ச்சயத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாரிடமாவது பகிர்ந்து கொள்கிறான். யாராவது தரும் போலியான வார்த்தைகளில் ஏமாந்து போகிறான். விருது வாங்குவதாகவும் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பதாகவும் கனவுகளில் மூழ்கத் தொடங்குகிறான். இந்தக் கதை உச்சம் பெறுவது இதன் தலைப்பினாலும் கழைக்கூத்தோடு கௌதமின் வாழ்க்கையை ஒப்பிடுவதாலும். ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகளால் இவ்விரு கலைகளையும் சூசகமாக ஒப்பிட்டு பேசுவதில் இக்கதை பல்வேறு திசைகளில் பயணமாகின்றது.

கழைக்கூத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து கம்பி மேல் நடக்கும் வித்தையில் இறுதியில் கிடைப்பதென்னவோ பிச்சை. கௌதமிடம் ஒரு ப்ரோடியுசர் ‘அடுத்த படம் நம்ம பண்ணலாம்’ என ரூபாய் ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தியேழும் அறுபத்தைந்து பைசாவும் தருகிறான். அது போலியான வாக்குறுதி என்பதே கெளதம்களுக்கு ஒரு போதும் புரிவதில்லை. அது'அட்வான்ஸல்ல, பிச்சை' என்று எழுதுகிறார். கம்பி மேல் நடக்கும் வித்தை போன்றது தான் கெளதம் போன்றவர்களின் வாழ்க்கை. ஒரு முறை நூறு ரூபாய்த் தாள் ஒன்று கழைக்கூத்தாடும் குழந்தையின் தட்டில் விழுகிறது. ‘கழைக்கூத்தாட்டமும் ஒரு கலை. இந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு அந்தக் கலையே ஆதாரம். ஒரு நூறு ரூபாய்த் தாள் அதன் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்? எனினும் அதற்குக் கண்கள் விரிந்ததை கௌதமன் கவனித்தான். மற்றவர்களைப் போலவே குழந்தையின் வதங்கிய அலுமினியத் தட்டில் அவன் போட்டதும் பிச்சைதான். நூறு ரூபாயைப் பிச்சையாக ஏற்குமளவுக்கு அதன் மனம் பக்குவப்பட்டிருக்காததனாலும் இருக்கலாம்.’கெளதம்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஏதோ ஒரு வாய்ப்பில் வெற்றி கிட்டினாலும் நூறு ரூபாய்  பெற்ற குழந்தையைப் போலவே கௌதம்கள் விழித்துக்கொண்டிருப்பார்கள். இது நிரந்தரமும் அல்ல என்பது அவர்களுக்கு புரிவதில்லை. லேசான இடறலில் கீழே விழுந்துவிடக்கூடும். உயிர் போகாவிட்டாலும் கை கால் உடைவது நிச்சயம். சமகாலச் சூழலில் ஓரிரு படங்களின் வெற்றிக்களிப்பில் துள்ளிக்குதிக்கும் இயக்குனர்களை இது போல் ஆங்காங்கே பகடி செய்தபடி செல்கிறார். அது எதார்த்தமும் கூட. உதவி இயக்குனர்கள் பற்றிய கதைகள் நான்கைந்து தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் இந்தக்கதை மிகவும் முக்கியமானது.

கெளதம் மட்டுமல்லாது வேறு சில சுவாரசியமான பாத்திரங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலொன்று மிஸ்டர் எக்ஸ். தினமும் மெரினா கடற்கரையில் காதலர்களின் முகங்களை உற்றுப்பார்க்கும் ஒரு பாத்திரம். தனது மனைவியையும் அவளது ரகசியக் காதலனையும் கண்டுபிடிப்பது தான் இவனது நோக்கம். இவரைக் குறித்து நண்பர்களுடன் விவாதமும் நிகழ்த்துகிறான் கௌதம். திருவல்லிக்கேணி மற்றும் மெரினா கடற்கரை பற்றிய தேவிபாரதியின் சித்தரிப்பு துல்லியமாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கின்றது.  திருவல்லிக்கேணியும் மெரினா கடற்கரையும் நன்கு பரிட்சயமான வாசகரின் மனதை பரவச நிலைக்கு இட்டுச்செல்லும் இவரது வர்ணனைகள். தேவிபாரதியின் கிளாசிக் கதைகளுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

இக்கதையை இணையத்தில் வாசிப்பதற்கான சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-197/page66.asp


Wednesday 15 June 2016

சென்னை புத்தகக் கண்காட்சி 2016

நான் வாங்கிய புத்தகங்கள்:

·         பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன் (காலச்சுவடு, வெளியீட்டு விழாவில்)
·         நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)
·         நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி (காலச்சுவடு)
·         புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன் (காலச்சுவடு)
·         நான் காணாமல் போகும் கதை – ஆனந்த் (காலச்சுவடு)
·         சமூகப்பணி அ-சமூகப்பணி எதிர்-சமூகப்பணி - சஃபி & கோபிகிருஷ்ணன் (முன்றில்)
·         இரவுக்காட்சி - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         வேர்களின் பேச்சு - தோப்பில் முஹம்மது மீரான் (அடையாளம்)
·         சம்பத் கதைகள் 2 – சம்பத் (விருட்சம்)
·         தேவதேவன் கதைகள் – தேவதேவன் (தமிழினி)
·         மரநிறப் பட்டாம்பூச்சி - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         எருது - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)
·         அறியப்படாத தீவின் கதை - ஜோஸே ஸரமாகோ (காலச்சுவடு)
·         சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி (அடையாளம்)
·         சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - சிங்கில் ஐத்மாத்தவ் (அகல்)
·         நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் - சிமாந்தா எங்கோசி அடிச்சி (அணங்கு)
·         குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் (பாரதி)
·         அன்னா தஸ்தவேவ்ஸ்கி - தமிழில்:யூமா வாசுகி (பாரதி)
·         தொலைவிலிருக்கும் கவிதைகள் - தமிழில்: சுந்தர ராமசாமி (காலச்சுவடு)
·         சக்கரவாளக்கோட்டம் - ரமேஷ் - பிரேம் (காலச்சுவடு)
·         கருப்பு வெள்ளைக் கவிதை - ரமேஷ் - பிரேம் (அகரம்)
·         குரல்களின் வேட்டை – சூத்ரதாரி (சொல்புதிது)
·         எட்டிப் பார்க்கும் கடவுள் - பா.வெங்கடேசன் (விருட்சம்)
·         பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் – தேவதேவன் (தமிழினி)
·         நீ இப்பொழுது இறங்கும் ஆறு – சேரன் (காலச்சுவடு)
·         'குடி'யின்றி அமையா உலகு - தொகுப்பு: முத்தையா வெள்ளையன் (புலம்)

நண்பர்களிடமிருந்து:
·         விழித்திருப்பவனின் கனவு - கே.என்.செந்தில் (காலச்சுவடு, யுவன் சந்திரசேகரின் கரங்களால் நாவலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டேன்)
·         அரூப நெருப்பு - கே.என்.செந்தில் (காலச்சுவடு)
·         காதல் கடிதம் - வைக்கம் முகம்மது பஷீர் (காலச்சுவடு)
·         கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல்)
·         பார்வை தொலைத்தவர்கள் - ஜோஸே ஸரமாகோ (பாரதி)
·         வெள்ளரிப்பெண் – கோணங்கி (புலம்)
·         இண்ட முள்ளு – அரசன் (வளர்மதி)
·         காலமே வெளி - தமிழில்: கால சுப்பிரமணியன் (தமிழினி)
·         சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ (பாரதி)
·         அஸ்தினாபுரம் - ஜோ டி குரூஸ் (காக்கை)
·         விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன் (உயிர்மை)

காலச்சுவடில் இலவசமாகக் கிடைத்தவை:
·         முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர்
·         முகமூடி செய்பவள் - வினோதினி
·         தொலைவில் - வாசுதேவன்
·         பேய்த்திணை - மௌனன்

Friday 1 April 2016

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்


தனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது, தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

லிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி வரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.

எலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது.  தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

முதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.

ஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-
ராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-
தாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-

இது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.

- த.ராஜன்

Thursday 24 March 2016

மரம் - ஜீ.முருகன்

ஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், மார்க்சிம் கார்க்கி, மார்க்கஸ், சில்வியா ப்ளாத் பற்றி பேசினாலும் ஜூ.முருகனின் அறிவுஜீவித்தனம் தான் நாவல் முழுக்க தலைவிரித்தாடுகிறது. 240 பக்க அபத்தம் இந்நாவல்.

oOo

இதற்கு வந்த எதிர்வினைகள் -

Bala Nandakumar: கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தம்தான். ஒரு நாவலில் படைப்பாளனின் அறிவுஜீவித்தனம் இருப்பதில் தவறில்லை. படிக்கிற வாசகன் அறிவுஜீவியாக அதை விமர்சிப்பது தான் அபத்தம். உண்மையில் அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும். நீங்கள் முயற்சிக்கவும்.

Gargy Manoharan: கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசக மனநிலை ஒன்று உண்டு. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்காத கதைகளை பொழுது போக்காக செய்து பார்க்கும் எளிய சமாச்சாரங்களை போதுமென்று பார்க்கும். சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் கதைகளை இந்த நடுத்தர வர்க்க மனநிலையால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எவ்வளவு படித்தாலும் நம் வீட்டுப் பெண்கள் எதை படிக்க வேண்டும் பார்க்க வேண்டும் என்ன மாதிரி உடையுடுத்த வேண்டுமென சதாவும் கண்காணிக்கிற மனதால் இந்த மீறல்களை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உண்மையில் தலைக்கனம் மிக்க வாசகர்கள் பிரதியிடமல்ல தன்னிடமே தோற்றுப் போகிறார்கள்.

Lakshmi Saravanakumar: மரம் நாவல் முழுக்க முழுக்க அபத்தம்ன்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்க. நல்லது. நாவல்னா என்ன அபத்தமே இல்லாத நாவல் எப்டி இருக்கனும்? அபத்தங்க்ற வார்த்தைக்கான முழுமையான அர்த்தம் என்னன்னு விலாவாரியா சொல்ல முடியுமா?

Karunanidhi Arjith: இது போன வருஷம் மரம் நாவல் வாசித்த போது பதிவிட்டது. சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசிரியர். நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள், உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயிரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார்.நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று. ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது. நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது. நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக என்னால் கூற முடியும்.

oOo

தன்னிலை விளக்கம்

உரையாடலில் எழுத்து நடையும் பிற இடங்களில் பேச்சு வழக்கும் கலக்கக்கூடாது என்பது அடிப்படையான விதியாகக் கருதுகிறேன். நாவலில் சந்திரா என்றொரு கதாப்பாத்திரம், இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி நிறைய பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். அவருக்கு குரங்கென்றால் நடுக்கமாம். குரங்குகளால் அவருக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை அவள் ரவியிடம் இவ்வாறு கூறுகிறாள்:

"ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில அந்தக் கூட்டத்திலிருந்த குரங்குகள்ல சிலது எனது அறைக்குள்ள இருந்திச்சி. வெளியே நின்னுகிட்டே சத்தம் போட்டு விரட்டிப் பார்த்தேன். அது என்னை சட்டையே செய்யல. ஒன்னு சாவகாசமா அலமாரியிலிருந்த என்னோட துணிகளை ஒவ்வொன்னா எடுத்து கலைச்சி போட்டுச்சி. மேஜைமேல உட்கார்ந்திருந்த குரங்கொன்னு புத்தகங்களை எடுத்துப் பார்த்து கீழே வீசிக்கிட்டிருந்தது. இன்னொரு குரங்கு ட்ரஸ்ஸிங் மேஜை மேல ஏறி கண்ணாடியைப் பார்த்துக்கிட்டே ஃபேர் அன் லவ்லி ஃபேஸ்டை கடிச்சிக் கீழே பிதுக்கிவிட்டது.

"நான் வெளியே ஓடிப்போயி பக்கத்து வீட்டு அக்காவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவ தன்னோட புருஷன்கிட்ட சொன்னா. அவர் ஒரு நீண்ட மூங்கில் கம்பைத் தேடி எடுத்துக்கிட்டு வந்தார். இரண்டு கதவையும் விரியத் திறந்துவிட்டு அவர் உள்ளே போயி கம்பை வீசியதும் இரண்டு குரங்குகள் மிரண்டு வெளியே ஓடிப்போச்சி. மேஜைமேல் உட்கார்ந்திருந்த குரங்கு மட்டும் அவரைப் பார்த்து பல்லைக் காட்டி உறுமிச்சி. அவர் பயந்துட்டார். அது சாவகாசமா கீழ குதிச்சி இறங்கிப் போனது. அதன் கையில பாத்தா என்னோட கவிதைத் தொகுப்பு இருக்கு.

"நான் மிரண்டு போயிருந்தேன். இனிமே அந்தக் குரங்குகளால என்னென்ன விபரீதங்கள் நிகழப் போகுதோன்னு பயந்தேன். கனவுல குரங்குகளா வந்து ரகளை செய்ஞ்சது. ஒரு கனவுல வாய் பேச்சு வராம ஒரு மரத்தைப் பிடிச்சிகிட்டு நிக்கிறேன், பின்னால வந்து ஒரு குரங்கு என்னை... சொல்லவே கூச்சமாக இருக்கு. மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போய் திரும்பி வரும்போது பாக்கிறேன், ரோடு ஓரமா என்னோட கவிதைத் தொகுப்பு பக்கம் பக்கமா கிழிஞ்சி காத்துல பறந்துகிட்டிருக்கு. மரத்துக்கு மேலே சில குரங்குங்க உட்கார்ந்து என்னோட கவிதைத் தொகுப்போட பேப்பர கையில வைச்சிக்கிட்டு ஆபாசமா சேஷ்டை பண்ணிக்கிட்டிருக்கு. நான் அங்கிருந்து வீட்டுக்கு ஓடிவந்து படுக்கையில விழுந்து அழுதேன். அழுவதைத் தவிர என்னால வேறு என்ன செய்ய முடியும்? யார் அதைத் தடுக்க முடியும், தண்டிக்க முடியும்?" என்றாள். [பக்: 17]

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளில் உள்ள அபத்தத்தை நான் மேற்கோள் காட்டி விளக்க வேண்டிய தேவையில்லை என்று நம்புகிறேன். பக்கத்திற்கு பக்கம் இது போன்ற செயற்கையான, தட்டையான உரையாடல்களே. கதையின் போக்கை இதுபோன்ற ஒரு வார்த்தை ஒரு வரி நெருடலை ஏற்படுத்திவிடக்கூடும்? இவரால் சிறப்பான ஒரு உரையாடலைக் கூட நாவலில் நிகழ்த்த முடியவில்லை. உரையாடல்களில் உச்சம் எந்தத் தருணத்திலும் நிகழவில்லை. உங்களால் இந்நாவலில் மயிர்கூச்செறியச் செய்யும் ஒரே ஒரு உரையாடலை குறிப்பிட முடியுமா?

O

உரையாடல் என்றல்ல வர்ணனைகள் கூட எழுதிப் பழகும் வாசகனின் பயிற்சிக் கதைகளைப் போன்றே இருக்கின்றன.

தோழர் பாலு சிவனை மாநாட்டுக் கருத்தரங்கிற்கு அழைத்திருந்தார். 'சும்மா வந்து பாருங்க' என்றார். மாநாட்டுக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளை கண்டு அவன் பிரமிக்க வேண்டும் என்று அவர் அழைத்திருக்கலாம். உண்மையில் பிரமிக்கும்படி தான் அவர் காரியங்களைச் செய்திருந்தார்.

நகரம் முழுக்க எத்தனை வித போஸ்டர்கள்! கட்சித் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும், வினோத புகைப்படங்களும், ஓவியங்களும் நிரப்பப்பட்ட எத்தனை டிஜிட்டல் பேனர்கள்! மற்ற அரசியல் கட்சிக்கெல்லாம் சவால் விடும் நோக்கத்தில் இதெல்லாம் செய்யப்படிருந்தது போல இருந்தது. [பக்: 53]

O

'இங்கே வந்து பார்' சிவன் ரவியை அழைத்தான். ரவி அவனருகே போய் நின்றான். அவர்களுக்கு முன் உயரமாக வளர்ந்த புற்கள் நின்றிருந்தன. அதற்குப் பூக்கும் பருவமது. பார்வை பட்ட தொலைவு வரை ஒரே உயரத்தில் பரந்து வளர்ந்திருந்தன புற்கள். காற்று அதன் மேல் விளையாடுவதைத் தான் சிவன் ரவிக்கு காட்ட விரும்பினான். கடலைப் போல அலைகள் தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன புற்களின் மேல். ஒரு அற்புதத்தைக் கண்டது போல ரவி அதில் லயித்துப் போனான். [பக்: 77]

O

கதாப்பாத்திரங்களின் சித்திரம் நம் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதென்றால் அவர்கள் பேசுவதும் செய்வதும் வேறுவிதமாகத் தோன்றும் படியாக சித்தரிக்கப்படுகிறது. இதனாலேயே அவன் அவளை வைத்திருப்பதாயும் இவள் அவனை வைத்திருப்பதாயும் இரண்டு மூன்று அத்தியாயங்கள் பேசிவிட்டு அடுத்த அத்தியாயத்தில் அதே கதாபாத்திரங்கள் மரம், மலை, குரங்கு, தத்துவம், ஆன்மீகம், டால்ஸ்டாய், சில்வியா ப்ளாத், எலியட் என்று பேசினால் அது கதாப்பாத்திரங்களின் குரலாக அல்லாமல் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கின்றது. இதனாலேயே ஆசிரியரின் அறிவுஜீவித்தனம் நாவலில் தலைவிரித்தாடுவதான பிம்பம் ஏற்படுகிறது.

கிரி வீட்டிலும் நண்பர்களுடனும் சரியாக உரையாடாமல் சாந்தமாக இருப்பதாகச் சித்தரித்துவிட்டு பின்பு பாதிரியாருடன் சண்டையிடுவது, காதலியை உறவு கொள்ள அழைப்பது போன்ற அத்தியாயங்கள் நம்பும்படியாக எழுதப்படாததாலேயே அபத்தமாகத் தோன்றுகிறது. முன்னுக்குப்பின் முரணான வாக்கியங்களும் முன்னுக்குப்பின் முரணான கதாப்பாத்திரங்களின் சித்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது. ஆங்காங்கே இவர் மரம், குரங்கு என பேசும் படிமங்கள் – உருவகங்கள் – தத்துவங்கள் அபத்தமாக அன்றி ரசிக்கும்படியாக இல்லை. மரம் நாவலிலுள்ளவர்களைப் போன்று எதார்த்தத்தில் இல்லையா என்றால், இருக்கிறார்கள், ஆனால் அதற்கான நியாயம் நாவலில் மருந்திற்கும் இல்லை. தனது இருப்பையும் சமூக விழுமியங்களையும் கேள்வி கேட்கும் இத்தகைய கதைகளுக்கு, கதாப்பாத்திரங்களுக்கு எவ்வித நியாயமும் சேர்க்கவில்லை.

O

சிவன் குரங்குகளை வரையும் ஓவியன். ஒரு கருத்தரங்கிற்கு குரங்கையும் அழைத்துச் செல்கிறான்.

”இது என்ன தோழர் கூத்து!” என வியந்தார். “திடீர்ன்னு இந்தத் தொழில்ல இறங்கிட்டீங்க.”

சிவன் சிரித்தான். “ரெண்டு வாரத்துக்கு முன்ன மலைப்பாதையில் இது அடிப்பட்டுக் கிடந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கட்டுப் போட்டுக்கொண்டுவந்து மொட்ட மாடியில் வச்சிருந்தேன். நல்லா பழகிடுச்சி. சங்கிலி கூடத் தேவையில்லை. கூப்பிட்டா வந்துடும். இப்ப எனக்கு நிரந்தர மாடல் இதுதான்”

“’என்ன பேர் வச்சிருக்கீங்க?”

“பேரா!” சிவன் சிரித்தான். இதுவரை பெயர் பற்றி யோசிக்கவே இல்லை அவன். பெயர் எதற்கு?

சிவன் சொன்னான், “காப்ரியோல் கார்சியா மார்க்வெஸ்”

தோழர் பாலு வியப்புடன் அவனைப் பார்த்தார்.

“மார்க்வெஸ்சை உங்களுக்குத் தெரியாதா?”

“அவர் கம்யூனிஸ்டா? இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கேனே”’ என்றார்.

“அவர் கம்யூனிஸ்டா என்று தெரியாது. ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் நண்பர்.”

“சரி தோழர், அதை விட்டுட்டு வாங்க. உள்ள வந்து உட்காருங்க” என்றார்.

“இதுவும் வரட்டுமே. பயப்படாதீங்க. என் மடியிலயே உட்கார வச்சிகிட்டிருக்கேன்” என்று தன்னுடைய விருப்பத்தை முன் வைத்தான்.

“இதுவரைக்கும் அரங்குக்கு உள்ள விலங்குகளை அனுமதிச்சதே இல்லை” என்று சங்கடப்பட்டார் தோழர்.

’கதவு திறந்தபோது உள்ளே விலங்கொன்று கர்ஜித்ததே’ என்று கேட்கலாமென நினைத்தவன் நாவை அடக்கிக் கொண்டான்.

இந்தக் குரங்கு கருத்துகளை ருசி பார்ப்பதற்காகவே வந்திருக்கிறது என்றும், இது கலகமோ புரட்சியோ செய்யாது என்றும் உறுதியளித்தபிந்தான் இருவருக்கும் அவர் அனுமதி அளித்தார். பார்வையாளர் அட்டையைக் குரங்குக்கு எங்கே குத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டதால், அவனுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

இத்தகைய தட்டையான பகடியை உங்களால் ரசிக்க முடிகிறதா?

O

கதைக்கு வருவோம். கிரியும் ரவியும் நண்பர்கள். கிரியின் தாயார் சந்திரா. சந்திராவிற்கும் ரவிக்கும் உறவு. இலைமறைக் காயாக இருந்த உறவு ஒரு முறை கிரிக்கு உடல் நிலை சரியில்லாமலிருக்கையில் ரவி துணைக்கு உடன் இருக்கும் போது, கிரியின் அருகிலேயே சந்திராவும் ரவியும் சல்லாபிக்க எத்தனிக்கிறார்கள். அதை கிரி பார்த்தும்விடுகிறான். இருந்தும் எப்போதும் போலவே ரவியோடு பேசுகிறான். இது ‘வடுவாக இல்லாமல் புண்ணாக’ (என்ன ஒரு உவமை!) ரவிக்கு வலிக்கத் தான் செய்கிறது. சிவன் ரவிக்கு புதிதாக அறிமுகமாகும் நண்பன். ஓவியன். என்ன தான் ரவி பெரிய கவியாக இருந்தாலும் ரவியின் உறவுகளைப் பற்றி ரவிக்கு புரிய வைப்பவன் சிவன். சந்திராவிற்கு அறிமுகமாகும் சிவனும் சந்திராவோடு சல்லாபிக்கிறான். ரவிக்கு தேவகி என்னும் இன்னொருவனின் மனைவியுடனும் கள்ள உறவு. தோழர் பாலுவிற்கு மீனா என்னும் ஒரு கிழவியின் பேத்தியுடன் கள்ள உறவு. பிரியா கிரியின் தங்கை. கண்ணனின் மகள். கண்ணன் கிரியின் அப்பா. சந்திராவின் கணவர். பிரியா தோழி சசியின் உதவியுடன் நீலப்படம் பார்க்கக் கற்றுக்கொண்டும் பின்பு சசியோடு ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுகிறாள். கிரி மனப்புழுக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் இறந்த பின்பு மனதில் வருத்தம் இருந்தாலும் அவன் கணிணியில் பிரியா சுதந்திரமாக நீலப்படம் பார்க்கிறாள். அண்ணன் கிரியின் கலெக்‌ஷனைக் கண்டு திடுக்கிடுகிறாள். அவன் சந்திரா, ரவி, கண்ணன், பிரியா ஆகியோரின் புகைப்படத்தை வேறு புகைப்படத்துடன் மார்ஃப் செய்து வைத்திருப்பது தான் அவள் திடுக்கிடலுக்குக் காரணம். முத்தாய்ப்பாக கண்ணனுக்கும் அவள் மகள் பிரியாவிற்கும் உறவு. ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் கலைக்கும் இத்தகைய கதையை இவருடைய உரையாடல்கள் மூலமாகவும், வர்ணனைகள் மூலமாகவும், கதாப்பாத்திர சித்தரிப்பின் மூலமாகவும் அபத்தமில்லாமல் எழுதியிருக்க முடியும் எனத் தோன்றுகிறதா?
O

எல்லோரும் கொண்டாடும் நாவலை நான் போகிற போக்கில் அபத்தமென விமர்சித்ததாக வருத்தம்/கோபம் கொண்டார்கள். இப்படியான எதிர்வினையை எதிர்கொண்ட போது நான் நாவலை அணுகிய விதம் தவறோ என்றும், இதற்கு முன் வாசித்த நாவலோ அல்லது அந்நாளைய சூழ்நிலையோ எனக்கு இந்நாவலை அபத்தமாக தோன்றும்படி செய்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு சிறந்த நாவலை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மறுபடியும் ஒருமுறை வாசித்தேன். இரண்டாம் முறை வாசிக்கும் போதும் கொண்டாடப்படும்படியாக ஒரு சின்ன விஷயத்தைக்கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வேளை இருந்திருந்தாலும் எழுத்தாளரின் செயற்கையான உரையாடலாலும்/கதை சொல்லல் முறையினாலும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதென்பதே என் எண்ணம்.

ஜீ.முருகனின் 'மரம்' நாவலை ஒரு வேளை நான் பாராட்டி எழுதினால் அவர் நான் எழுதப்போகும் புத்தகத்தை பாராட்டி எழுதப்போவதுமில்லை அல்லது என்னோடு ஃபேஸ்புக்கில் சண்டையிடப் போவதுமில்லை. நான் புத்தக விமர்சனம் எழுதுவது பிரபலம் ஆகவோ, பிற்காலத்தில் ஒரு புத்தகம் எழுதி பெஸ்ட் செல்லிங் ஆத்தர் ஆகவோ, விருதுகள் வாங்கவோ இல்லை. நண்பர்களின் புத்தகத்தை புகழ்ந்து எழுதுவதும் சக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பாராட்டிக்கொள்வதும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கான தேவை எனக்கில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். பிடித்த படைப்புகளைத் தீரத் தீரக் கொண்டாடி முடிந்த வரை மற்றவர்களிடம் அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். ஒருவேளை இது போன்ற அபத்த நாவல்களைக் கடக்க நேரிடும் போது அதை அபத்தம் என்று பதிவதும் என் சுதந்திரம் என்றே எண்ணுகிறேன். மேலும் இதைப் பதிவதன் மூலம் என்னை வாசிப்பவர்களுக்கு கடத்த முயல்கிறேன்.

நான் எழுதியதற்கு வந்த எதிர்வினைகளில் சில ரசிகமனப்பான்மையில் எழுந்தது போலவே இருக்கின்றன. கொண்டாடப்படும் நாவல்கள் எதுவுமே ஒவ்வொருவரின் பார்வையில் அபத்தமாகத் தோன்றுவதில்லை. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். அவ்வளவே. அது போக வாசகன் அதை அறிவுஜீவியாக விமர்சிக்கக்கூடாது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளனும் எழுதத் தெரிந்த வாசகன் தான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். ஒரு எழுத்தாளன் வாசகனை தனக்குக் கீழே வைத்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே அவனின் ஆளுமை அடிபட்டுவிடாதா? அபத்தங்களற்ற ஒரு நாவல் இதற்கு மேல்தான் எழுதப்பட வேண்டும் என்கிற கூற்றே கோபத்தில் எழுந்த ஒரு வாக்கியமாகவே தோன்றுகிறது.

கடைந்தெடுத்த 'தன்னை உயர்வாக' எண்ணிக்கொள்ளும் ஒரு மனோபாவமும் சில வாசகர்களிடம் உண்டு. அது நடுத்தர வர்க்க இருப்பையும் சமூக விழுமியங்ககளையும் கேள்வி கேட்காத கதைகளென இது போன்ற ட்ரான்ஸ்க்ரசிவ் கதைகளை உயர்வென கொண்டாடுவது. இது போன்ற இயல்பை மீறிய, கலாச்சாரத்தைக் கட்டுடைக்கும் கதைகளைத் தான் அடுத்த தலைமுறை இலக்கியமாகக் கொண்டாடும் - தன்னை உயர் வர்க்க வாசகன் எனக் கொண்டாடும் பொது புத்தி. இந்தக் கடைந்தெடுத்த நடுத்தர வர்க்க வாசகனாகிய நான் தினத்தந்தியின் நான்காவது பக்கத்தில் வரும் சமூக விழுமியங்களை உடைத்து நொறுக்கும் இது போன்று பல கதைகளை வாசித்தவன் தான். ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதெல்லாம் இலக்கியம் ஆகிவிட முடியுமா என்ன?

- த.ராஜன்